Home சமையல் குறிப்புகள் வெஜிடபிள் அவல் உப்புமா!

வெஜிடபிள் அவல் உப்புமா!

26

இந்த அவல் உப்புமா மிகவும் சுலபமாகச் செய்து விடலாம். காலிஃப்ளவர், காரட், பச்சைக் கொத்தமல்லி, ப்ரகோலி அல்லது ஒரு உருளைக் கிழங்கு,வெங்காயம், பச்சைமிளகாய், ஒரு எலுமிச்சம் பழம் இருந்தால் போதும். பச்சைப் பட்டாணி, வெரும் உருளைக்கிழங்கு சேர்த்துச் செய்து,மேலே ஓமப்பொடியும் பச்சைக் கொத்தமல்லியையும் தூவி, ஒரு எலுமிச்சைத் துண்டை அழகாக வைத்து வந்தவர்களுக்கு கொடுப்பாள் ஜெனிவா மருமகள். இங்கு நான் செய்தது எல்லாக் காய்கறிகளும் போட்டது.
இப்பொழுதெல்லாம் கடையில் வாங்கும் அவல்தான். அவல்கூட கிராமங்களில் வீட்டில்தான் இடிப்பார்கள். பெண் கலியாணங்களுக்கு முன்னும், கார்த்திகை தீபத்திற்கு முன்னும் கட்டாயம் அவல் இடிப்பது வழக்கமாக இருந்தது. அவலும் வெல்லமும் பெண்ணுடைய சீர் வரிசையில் இடம் பெறும். எங்களகத்திலும் அவலிடித்துப் பார்த்திருக்கிறேன். எவ்வளவோ மாற்றங்களுள்ளாகி இப்போது மெஷின் அவல் கிடைக்கிறது. முன்னாளில் அவல் எப்படித் தயார் செய்வார்கள் தெரியுமா?
நெல்லை முதல் நாளே ஊறவைத்து திரும்பவும், ஒரு ஆவி வேகவைத்து வடித்து, சற்று உலர வைப்பார்கள். உலரும் நெல்லை சட்டியில் சற்று வறுத்து உரலில் கொட்டுவார்கள். அவலிடிக்க வரும் வேலைக்காரப் பெண்கள் இருவர் இரும்புப் பூண்போட்ட மர உலக்கையினால் ’ணங்,ணங்’ என்ற சத்தம் வரும்படி, ஒருவர் மாற்றி ஒருவர் வருத்த நெல்லை இடிப்பார்கள். உமியுடனான அவல் ஏழெட்டு நொடிகளில். அதை எடுத்து விட்டு அடுத்தது நெல் சட்டியில் வறுத்தது இடிபட காத்துக் கொண்டிருக்கும். அவல் சாப்பிட நாங்கள். இதெல்லாம் நேவேதியம். யாரும் சாப்பிடக் கூடாது என்று பதில் வரும். அவ்வளவு அக்கரையாக தயாராகும்.
உமியைப் புடைத்தால் வெள்ளை வெளேரென்ற சற்றுப் பருமனான அவல் காட்சி கொடுக்கும். நான் இப்போது அவல் இடிக்கும் மாட்டுக் கொட்டகைக்கே போய்விட்ட மாதிரித் தோன்றுகிறது. எல்லா பண்டிகைகளிலும் அவல் அவசியமல்லவா? இது போகட்டும். நாம் அவலுப்புமா பார்க்கலாம்.

வேண்டியவைகள்:
மெல்லிய மீடியம் சைஸ் அவல் – 2 கப்புகள்
காரட்,ப்ரகோலி,காலிப்ளவர்,உருளைக் கிழங்கு,காப்ஸிகம், எது
கிடைக்கிறதோ அதில் கலந்து ஒரு கப்பிற்கு அதிகமாகவே நறுக்கின
காய்கள் தயார் செய்து கொள்ளவும்.
காரத்திற்குத் தக்கபடி -2 பச்சை மிளகாய். இரண்டாக நறுக்கிக்
கொள்ளவும்.
எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு -தாளித்துக் கொட்ட
உப்பு – ருசிக்கு
மஞ்சள் பொடி – சிட்டிகை
பச்சைக் கொத்தமல்லி – இஷ்டத்திற்கு நறுக்கிக் கொள்ளவும்
எலுமிச்சம் பழம் – ஒரு மூடி
சர்க்கரை – அரை டீஸ்பூன்

செய்முறை:
அவலை காய்கறி வடிக்கட்டி போன்ற நீர் வடியும் பாத்திரத்தில் போட்டு மேலே தண்ணீரைத் திறந்து விட்டுக் களையவும். இரண்டு முறை செய்தாலே போதும். அவல் ஊற ஆரம்பித்து விடும். தண்ணீர்ஒட்ட வடியும்படி ,பாத்திரத்தின் மேல் வைக்கவும். தண்ணீர் வடிந்த பிறகுசிறிது உப்பு சேர்த்துக் கலந்து விடவும். அவல் ஊறி விடும் பிறகு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உ.பருப்பு தாளித்துக் கொட்டி, காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். உடன் பச்சை மிளகாயும் சேர்க்கவும். வேண்டிய உப்பு, மஞ்சள்பொடி சேர்க்கவும். பெருங்காயம் நானில்லையா என்கிறது.
காய் நன்றாக வதங்கியவுடன், ஊற வைத்த ஒட்ட வடிக்கட்டிய அவலைச் சேர்த்துக் கிளறிவிடவும். அழுத்தம் கொடுக்காமல் நாஸூக்காக பிறட்டி விடவும். சூடேறியதும் எலுமிச்சை ரசத்தைச் சேர்க்கவும். இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி அழகாகக் கொடுக்கவும். நைஸாக சர்க்கரையையும் முதலிலேயே கலந்து விடவும். வேண்டுமா வெங்காயம். காய்கறிகளுக்கு முன் சேர்த்து வதக்கவும். நான் வாணலியோடு கொடுக்கிறேன். பாருங்கள்
புளி அவல்,தயிரவல்,தேங்காய் சேர்த்த அவல், மிளகு சீரகம் போட்ட அவல் இனிப்பு வகைகள் என பலவிதங்களில் அவலை ஈடுபடுத்தி உபயோகிக்கலாம். தயிர், வெல்லம், சர்க்கரை, சட்னி ஊறுகாய் எல்லாம் மேச்சாகும்.