Home குழந்தை நலம் விவாகரத்து, வேலைக்கு போகும் பெற்றோரால் குழந்தைகளுக்கு ஏற்படும் தனிமை

விவாகரத்து, வேலைக்கு போகும் பெற்றோரால் குழந்தைகளுக்கு ஏற்படும் தனிமை

25

61b8354b-96f0-424b-9331-2b401e2bebc5_S_secvpfஅம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் சென்றுவிடும்போது அவர்களால் குழந்தைகளுடன் அதிக நேரம் இருக்கமுடியாது. அப்போது அவர்களை யாரோ ஒருவரிடம் விட்டுச்செல்வதும், தனிமைப்படுத்துவதும் தவிர்க்கவேண்டியது.

இந்த உலகை விரும்பியபடி எல்லாம் ரசித்துப்பார்க்க ஆசைப்படும்போது அவர்களை தனிமைச்சிறையில் அடைத்து, நாள் முழுவதும் யாருக்காகவோ, எதற்காகவோ காத்திருக்கவைப்பது அவர்களுக்கு பெரும் மனஉளச்சலை ஏற்படுத்தும்.

குழந்தைகளின் வளர்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டது. ஆரோக்கியமான மனதை அடிப்படையாகக் கொண்டுதான் குழந்தை வளர்கிறது. குழந்தைகளின் மனம் தெளிவாக இருந்தால் தான் நல்ல சிந்தனைகள் அவைகளிடம் உருவாகும். நல்ல சிந்தனை இருந்தால்தான் நல்ல செயல் இருக்கும். குழந்தைகள் தனிமையில் விடப்படுவதற்கு முதல்காரணம், பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்வதுதான். குடும்பத்தின் தேவைக்கு சம்பாதிப்பது அவசியம்தான்.

ஆனால் அதைவிட அவசியம், குழந்தைகள் தனிமையில் ஏங்காமல் பார்த்துக்கொள்வது. பொறுப்பானவர்களிடம் குழந்தைகளை விட்டுச்செல்லவேண்டும். பொறுப்பற்றவர்களிடம் விட்டுச்செல்வது பாலியல் வன்முறை உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். குழந்தைகளின் தனிமைக்கு பெற்றோரின் விவாகரத்தும் ஒரு காரணம். விவாகரத்துக்கு முன்வரும் பெற்றோர், தங்கள் பிரிவு குழந்தைக்கு தனிமையை உருவாக்கும் என்பதை உணரவேண்டும். குழந்தைகளின் தனிமை எவ்வளவு கொடுமையானது என்பதை அவர்களது நிலையில் இருந்து சிந்தித்து பார்க்கவேண்டும்.

விவாகரத்து என்றால் என்னவென்று குழந்தைகளுக்கு புரிவதில்லை. விவாகரத்து செய்துகொள்பவர்கள் ஏதோ ஒரு வேகத்தில் தங்கள் இணையுடனான உறவை தூக்கி எறிந்து விடுகிறார்கள். குழந்தைகளால் அப்படி உறவை தூக்கி எறிய முடியாது. அதனால் அவசர கோலத்தில் விவாகரத்து முடிவினை எடுப்பவர்கள், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்தே ஆகவேண்டும். ஆரோக்கியமான உறவு சூழல் கொண்ட பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள்தான் ஆரோக்கியமான மனநிலைகொண்டவைகளாக வளரும்.

தனிமை உணர்வு என்பது தனிமையால் மட்டும் ஏற்படுவதில்லை. ஆயிரம் பேருக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தாலும் சில குழந்தைகள் தனிமை உணர்வுக்கு ஆட்பட்டுவிடுவார்கள். தன்னோடு பழகும் அன்பான உறவுகள் இருந்தால் மட்டுமே அந்த குழந்தைகள் பாதுகாப்பை உணரும். மற்றபடி தன்னைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் தனிமையைத் தான் உணர்வார்கள். தனிமையுணர்வில் பாதிக்கப்படும் குழந்தைகள் கல்வியறிவிலும் பின்தங்கியே இருப்பார்கள்.

அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை உருவாகி, அவர்களை ஓரமாக ஒதுங்கி நிற்க வைத்துவிடும். திறமைகள் அவர்களுக்குள்ளாகவே முடங்கி விடும். அத்தகைய தாழ்வு மனப்பான்மை கொண்ட குழந்தைகளை கண்டுபிடிப்பது கடினம். கண்டுபிடிக்க முடியாததால் அந்த குழந்தைகள் தாழ்வுமனப்பான்மையுடனே வளர்ந்துவிடுவார்கள். ஒரு குழந்தை மட்டும் இருக்கும் வீட்டில் இன்னொரு குழந்தை வரும்போது, முதல் குழந்தை பெரும்பாலும் தனிமையை உணர்கிறது.

சண்டையிடும் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் தனிமை உணர்வுக்கு ஆட்படுவதோடு, பயந்து மிகுந்த மனஉளைச்சலுக்கும் உள்ளாகிறது. சிறுவர் சிறுமியர்களை தனிமைப்படுத்துவது கொடுமையானது. ஏதேதோ காரணங்களுக்காக தனித்து விடப்படும் குழந்தைகள் பல விதங்களில் பாதிக்கப்படுகிறார்கள். தனிமை என்பது மலராத குழந்தைகள் மனதில் பலவித குழப்பங்களையும் விபரீத எண்ணங்களையும் தோற்றுவிக்க கூடியது.

வருங்காலத்தில் அந்த எண்ணங்கள் பல விதத்தில் எதிர்விளைவுகளை உருவாக்கும். அவர்களுடைய குணாதிசயங்களில் பெரும் மாறுதல்கள் ஏற்படும்.