சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலை சேர்ந்தவர் புஷ்பவள்ளி (65). இவர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் முகாமில் புகார் கொடுக்க வந்திருந்தார். அப்போது திடீரென அவர், மயங்கி கீழே விழுந்தார். அருகிலிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். அதன்பிறகு அவர் மனுவை கலெக்டர் வீரராகவராவிடம் கொடுத்தார். அதில், “ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்கு, பரமக்குடி போலீசார் (ஒரு எஸ்ஐ, 2 ஏட்டு) எனது மகன் ராஜ்குமாரை தேடி வந்தனர். மகன் இல்லாத காரணத்தால், என்னையும், எனது மகள் ராதாவையும் (22, பெயர் மாற்றப்பட்டுள்ளது) அழைத்து சென்றனர்.
விசாரித்து விட்டு வீட்டுக்கு அனுப்பினர். மறுநாள் அதே காவல் நிலையத்தை சேர்ந்த 3 போலீசார் எங்கள் இருவரையும் அழைத்து சென்றனர். காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் வேறு ஒரு அறையில் அடைத்து வைத்து 2 நாட்களாக துன்புறுத்தினர். எனது மகளை செல்போனில் படம் பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தனர். அதன்பிறகு என்னையும், என் மகளையும் காரில் ஏற்றிவந்து மதுரை ரிங்ரோட்டில் இறக்கி விட்டு சென்று விட்டனர். மயக்க நிலையில் இருந்ததால், எனது மகளை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். எனது மகளை பாலியல் கொடுமைப்படுத்திய 3 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ இவ்வாறு தெரிவித்திருந்தார். புகார் குறித்து விசாரிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.