வாழ்க்கை என்பது நேசம், நட்பு, உறவு இவைகளால் நிரப்பப்பட்டது. இவற்றில் ஒன்று குறைந்தாலும் மனதில் வெறுமை தோன்றும். தனிமை நம்மை ஆட்கொள்ளும். இவ்வளவு பெரிய உலகத்தில் நாம் மட்டும் தனியாக தவிக்க விடப்பட்டதுபோல வாழ்வே வெறுப்பாக தோன்றும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதுபோல எண்ணத் தோன்றும்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்து விட்டதுபோல நினைக்கும் மனிதர்கள்கூட, உறவுகளை கவனிக்கத் தெரியாவிட்டால் அவர்களின் சாதனையே செல்லாக் காசாகிவிடும். உலகமே ஒருவரை போற்றினாலும், அவர் உறவுகளால் ஒதுக்கப்படும்போது இனம்புரியாத வெறுமையையே உணர்வார்.
ஆணானாலும், பெண்ணானாலும் குடும்பம், உறவு, நட்பு என்பது அவசியமான ஒன்றாகிறது. கடமையை காரணம்காட்டி, எந்த நோக்கிலும் நட்பு, உறவுகளை ஒதுக்குவது கூடாது. உறவுகள் என்பது உணர்வுகளுடன் ஒன்றிய ஒரு விஷயம். பல்வேறு சந்தர்ப்பங்களில் நம் உணர்வுகளையும், மகிழ்ச்சியையும் குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ளும்போது அது உங்களோடு சந்தோஷமாக பயணப்படும்.
அந்த சந்தர்ப்பங்களை நீங்கள் தவிர்க்க முற்படும்போது நாளடைவில் குடும்பத்துக்கு உங்களோடு இருக்கும் உறவு நைந்து, அறுந்து, பிய்ந்து போய்விடும். பிறகு நீங்கள் என்னதான் பசை போட்டு ஒட்டினாலும் உறவுகள் ஒட்டாது. கடமைக்கும், உறவுகளுக்கும் அதிக இடைவெளி கிடையாது. உறவுகள் என்பது நாம் காப்பாற்ற வேண்டிய ஒரு கடமையாகிறது. நல்ல உறவுகளும், நட்புகளும் ஒரே நாளில் ஏற்பட்டு விடுவதில்லை.
நம் வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகள், சந்தர்ப்பங்கள், நம் உறவுகளை ஒருங்கிணைக்கிறது. அந்த சந்தர்ப்பங்களை ஏதாவது ஒரு காரணம் காட்டி ஒதுக்கும் போது உறவுகள் மெல்ல மெல்ல விலகிப் போகிறது. உறவுகளை நமக்கு வேண்டாத விஷயங்களாக ஒதுக்குபவர்கள் நாளடைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள். எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ்ந்துவிட முடியாது. இந்த பரந்த உலகத்தில் நாம் எங்கிருந்தாலும் நமக்கு அன்பையும், நேசத்தையும் தரக்கூடியது உறவுகள்தான்.
அந்த அன்பும், நேசமும் நம்மை வாழ வைக்கும் சக்தி கொண்டது. பதவியும், பணமும் தராத ஒரு மனநிறைவை உறவுகளின் அன்பும், அனுசரணையும் தரும் என்பது உண்மையானது.
இன்றைய அவசர உலகில் உறவுகளிடம் உட்கார்ந்து பேசக்கூட பலருக்கும் நேரமில்லை. எல்லாவற்றையும் செல்போனிலேயே முடித்துக் கொள்கிறார்கள். அவசர தகவலுக்கு இருக்கவே இருக்கிறது எஸ்.எம்.எஸ்! நல்ல விஷயங்களைக் கூட நேரில் கூறி மகிழ முடியாமல் ஓடிக்கொண்டிருப்பவர்கள் ஏதோ சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது என்ற ரீதியில் செல்போனில் கருத்து பரிமாற்றம் மட்டும் செய்துகொள்கிறார்கள்.
வாழ்க்கையின் ஓரிடத்தில் அது கிடைக்கவில்லை என்றதும் மனம் முழுவதும் இருள் சூழ்ந்து கொள்கிறது. ஓடி வந்த வேகத்தில் தொலைந்து போன உறவுகளும், நட்பும், மீண்டும் திரும்பி வராதா? என்ற ஏக்கத்தில் தனிமையை உணருகிறார்கள். தனிமை என்பது மிகவும் கொடுமையானது. அதை முழுமையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அந்த கொடுமை புரியும். இந்த தனிமைக்கு யார் காரணம்? நாமேதான்! உறவுகளை காப்பாற்ற முடியாததால் தனிமை வந்து ஒட்டிக்கொண்டது.
வாழ்க்கை ஓட்டத்தில் உறவுகளின் அருமை புரிவதில்லை. நின்று நிதானித்து புரிந்து கொள்ள அவகாசமில்லை. உறவுகளின் அருகாமையும், அன்பும் பக்கபலமாக இல்லாததால்தான் இன்று மனிதர்கள் விரக்திக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறார்கள். வெளியுலக கடமைகள் முக்கியமானதுதான். இருந்தாலும் நம் உள் வாழ்க்கை என்பது அதி முக்கியமானது. எத்தனை வேலைகள் இருந்தாலும் உறவுகளுக்காக நேரம் ஒதுக்குவது மிக அவசியமான ஒன்று.
`எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால் உங்கள் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ள எனக்கு நேரமில்லை..’ என்று நீங்கள் முக்கியமான உறவுகளிடம் கூறினால், அது உங்களுக்கு நீங்களே போட்டுக்கொள்ளும் முள்வேலி. வேலிக்குள் யாராலும் சுகமாக வாழ முடியாது. வாழ்க்கை என்பது உறவுகளால் பிணைக்கப்பட்டது. நட்பு, உறவுகளை துண்டித்துக் கொண்ட யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை.
அன்பு என்ற ஒன்று கிடைக்கப் பெறாத மனிதன் நாளடைவில் பல குழப்பங்களுக்கு உள்ளாகிறான். அது அவனை தாறுமாறான நடவடிக்கைகளுக்கு இழுத்துச் செல்கிறது. மனிதன் மனிதனாக வாழ தேவையான சில அடிப்படை விஷயங்களை உறவுகள் மட்டுமே தருகிறது. ஒருவன் அன்பாக வாழ்ந்தால், சூழ்நிலைதான் அவனை பண்பும், குணமும் கொண்டவனாக உயரச் செய்கிறது. மனிதன் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள, இன்பமாக்கிக்கொள்ள அவனுக்கு நல்ல உறவுகளும் நட்பும் இன்று மட்டுமல்ல.. என்றும் தேவை.