கடந்த இரண்டு நாட்களாக பேஸ்புக்கை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். வரும் பதிவுகள் எல்லாம் ஒரு மார்க்கமா தான் இருக்கு. அதில் ஒரு பெண்ணின் படத்தை பதிவிட்டு, “வறுமையினால் நான் விலை மாதுவாக மாறிவிட்டேன் பிரெண்ட்ஸ். என்னையெல்லாம் உங்களுக்கு பிடிக்குமா?” என்று பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு ஆயிரம் லைக்குகளும், சில நூறு கமெண்ட்ஸ்களும் இருப்பதை பார்த்த உடனே, நம்ம ஊரு பசங்க இவ்வளவு பெரிய மனசு படைத்தவர்களா என்ற மிதப்பு எனக்குள் வந்தது.
உள்ளே என்ன கமெண்ட்ஸ் வந்திருக்கிறதென்று போய் பார்த்தால் தான், விஷயம் விளங்குது. நம்ம ஊரில் வறுமையின் காரணமாக ஒரு பெண் விலை மாதுவாக மாறுகிறாள் என்றால், அது அவளுடைய முட்டாள் தனமாகத்தான் இருக்கும். குடி தண்ணீர் கூட கிடைக்காமல், அடிப்படை வாழ்வாதாரத்திற்கே திண்டாடும் சில நாடுகளில் மட்டுமே, பெண்கள் அதிக அளவில் விலை மாதுவாக மாற்றப்படுகின்றனர். இந்தியாவில், பெண்கள் கண்ணியமாக சம்பாரிக்க ஆயிரம் வழிகள் இருக்கிறது.
வறுமையின் காரணமாக விலைமாதுவாகும் பெண்களை, ஒருவகையில் ஆதரிக்கலாம் என்று நினைத்தாலும், குறுக்கு எலும்பு உடையும் அளவுக்கு தீப்பெட்டி தொழிற்சாலையிலும், பட்டாசு தொழிற்சாலையிலும், பனியன் கம்பெனிகளிலும் பணிபுரியும் பெண்களை இழிவுபடுத்துவது போலாகிவிடும். ஒரு பக்கம் இந்த வாழ்கை முறையை தேர்வு செய்த பெண்களுக்கு எதிர்ப்பு இருந்தாலும், கட்டாயப்படுத்தி நிர்பந்தப்படுத்தப்பட்டு, விலை மாது தொழிலுக்கு வந்த பெண்கள், சிலர் மனம் திருந்தி இயல்பு வாழ்க்கைக்கு வர விரும்புகின்றனர்.
அது மாதிரியான பெண்களை ஏற்றுக்கொள்ள, சில முற்போக்கு எண்ணம் படைத்த ஆண்கள் தயாராக இருக்கின்றனராம். எனக்கு அவளை பிடித்திருந்து, அவளுக்கு என்னை பிடித்திருந்தால் கடைசி வர வாழ்க்கை கொடுக்க நான் தயார். அவளும் என்னுடன் வாழ தயாராக இருந்தால் திருமணம் செய்து கொள்வேன். கடந்த காலத்தை நினைத்து வெறுக்கும் எண்ணம் இல்லை. நிகழ்காலத்தில் இருவரும் எப்படி வாழப்போகிறோம் என்பதே முக்கியம் என்று கூறுவதை கேட்கும் போது, இப்படியும் சில ஆண்கள் என்பதை நினைத்து மனம் சிலிர்க்கிறது.
தவறான வழியில் சென்றிருந்தாலும், திருந்தி வாழ நினைத்து இயல்பு வாழ்க்கைக்குள் நுழையும் பெண்களுக்கு, மன உறுதி ரொம்பவே அதிகமாக இருக்குமாம். சின்ன சின்ன அன்பு கிடைப்பதைக்கூட பெரிய வரம் போல நினைத்து, மனதார குடும்ப வாழ்வில் ஈடுபடுவார்களாம். இதெல்லாம் கட்டாயப்படுத்தி விலை மாதுவாக்கப்பட்ட பெண்களுக்கு பொருந்துமே தவிர, தாமாக விருப்பப்பட்டு அந்த தொழிலுக்கு சென்ற பெண்களுக்கு பொருந்தாது. இன்னும் இது போல எத்தனையோ முரண்பாடான சிக்கல்களுக்கு, வெளியில் தெரியாத தீர்வை உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு அலைமோதுகிறது இந்த சமுதாயம்.