Home பெண்கள் உடல் கட்டுப்பாடு வயதின் காரணமாக பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்

வயதின் காரணமாக பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்

39

வயது அதிகரிக்க அதிகரிக்க, பெண்களின் மார்பகங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும், மார்பகங்களின் கட்டமைப்பும் மாறத் தொடங்கும். வயது அதிகரிக்கும்போது இயற்கையாகவே, உடலில் இனப்பெருக்கம் சம்பந்தப்பட்ட ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களே இதற்குக் காரணம். இந்த மாற்றங்களின் காரணமாக, மார்பகங்கள் கெட்டித்தன்மையையும் திரட்சியையும் இழக்கத் தொடங்குகின்றன. மேலும் வயதாக ஆக, மார்பகங்களில் கட்டிகள் மற்றும் நார்த்திசுக்கட்டிகள் போன்றவை உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

வயது அதிகரிக்கும்போது மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படக் காரணங்கள் (What causes the ageing related changes in the breast?)
வயதைச் சார்ந்து மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்பட முக்கியக் காரணம், பெண்களின் இனப்பெருக்க ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதே ஆகும்.

ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும்போது சருமம் வறண்டு, மீள்தன்மை குறைகிறது. சருமத்தின் மீள்தன்மை குறையும்போது, மார்பகங்கள் உறுதியையும் திரட்சியையும் இழக்கின்றன, இதனால் மார்பகங்கள் நீண்டு தொங்கிக் காணப்படுகின்றன.

ஒரு பெண்ணின் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் மார்பகங்களில் ஏற்படும் மாறுதல்கள் (Breast changes during the lifetime of a woman)
பெண்களின் மார்பகங்கள் வெவ்வேறு வயதில் வெவ்வேறு மாற்றங்களை அடையும்.

இளம் வயதில், மார்பகங்களில் அடர்த்தியான திசுக்கள் இருக்கும். இளம் வயதில் சுரப்பித் திசுவும், இணைப்புத் திசுவும் அதிகம் இருக்கும், கொழுப்புத் திசு குறைவாக இருக்கும்.
மாதவிடாய் தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு மார்பகங்கள் வீங்கியது போன்று இருக்கலாம், அதிக வலி இருக்கலாம். இந்த சமயத்தில், மார்பகங்களில் கூடுதல் திரவங்கள் இருப்பதால் கட்டி போன்று திரண்ட பகுதிகள் இருப்பதையும் நீங்கள் உணரலாம். இந்த மாற்றங்கள், மாதவிடாய் முடியும்போது தானாக சரியாகிவிடும். மருத்துவர் உங்கள் மார்பகங்களைப் பரிசோதிப்பார்.
கர்ப்பத்தின்போது,பால் சுரக்கும் சுரப்பிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், அவை பெரிதாவதாலும் மார்பகம் அதிகம் திரண்டிருப்பது போன்று நீங்கள் உணரலாம்.
தாய்ப்பாலூட்டும் பெண்களின் மார்பகங்களில் பால் நாளங்கள் அடைபடுவதால், முலையழற்சி எனும் பிரச்சனை ஏற்படலாம். இந்தப் பிரச்சனை ஏற்பட்டால், மார்பகங்கள் சிவந்து, சூடாக, திரண்டிருப்பது போன்றும் மென்மையாகவும் காணப்படலாம்.
மாதவிடாய் நிற்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு, மாதவிடாய் ஏற்படும் இடைவெளி அதிகரிக்கும், ஹார்மோன் அளவும் சீரற்ற முறையில் மாறக்கூடும். மாதவிடாய் அல்லாத சமயங்களிலும், மார்பகங்கள் மென்மையாக இருக்கலாம். மாதவிடாய் நிற்பதற்கு முன்பும், மார்பகங்கள் கனமானது போன்ற உணர்வு ஏற்படலாம்.
ஹார்மோன் மருந்துகளை (கருத்தடை மாத்திரைகள் அல்லது ஊசிகள், மாதவிடாய் நிறுத்தத்திற்கான ஹார்மோன் சிகிச்சைகள்) எடுத்துக்கொள்பவர்களுக்கு மார்பகங்கள் அடர்த்தி அதிகமாகலாம்.
மாதவிடாய் நின்றதும், ஹார்மோன் அளவு குறையும், மார்பகங்களின் திசு அடர்த்தி குறைந்து கொழுப்பு மிகுந்ததாகும். அதற்கு முன்பு உங்களுக்கு கட்டி, திரட்சி போன்று ஏதேனும் இருந்தால், வலி இருந்திருந்தால், முலைக்காம்புக் கசிவு ஏதேனும் இருந்திருந்தால் அவை மறைந்துவிடும்.
வயதைச் சார்ந்து மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் (Age-related changes to breast)
வயது அதிகரிக்கும்போது பின்வருபவை போன்ற மாற்றங்கள் மார்பகங்களில் ஏற்படக்கூடும்:

முலைகள் இடமாறுதல்: முலைகள் முன்னோக்கி நேராக நீட்டிக்கொண்டிருக்காமல் பக்கவாட்டில் ஒதுங்கியிருக்கும்
மார்பகங்கள் நீண்டு, விரிவடைந்து தட்டையாகக் காட்சியளிக்கும்
மார்பகங்களில் தோல் விரிவடைவதன் அடையாளங்கள்
மார்பகங்களுக்கு இடையே அதிக இடைவெளி
மார்பகங்களில் கட்டி இருப்பது போன்ற உணர்வு
எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்? (When to visit your doctor?)
நடுத்தர வயதில் மார்பகங்களில் இதுபோன்ற பெரும்பாலான இந்த மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான். இதில் ஏதேனும் மாற்றங்கள் இயல்பானதா இல்லை ஏதேனும் பிரச்சனையின் அடையாளமா என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். இந்தப் பிரச்சனைகளில் ஏதேனும் இருந்தால், உங்கள் மருத்துவர்களிடம் ஆலோசிக்கவும்:

மார்பகங்களில் அல்லது அக்குள் பகுதிகளில் கெட்டியான பகுதிகள் அல்லது திரட்சியான பகுதிகள் காணப்படுதல்.
முலைக்காம்புகளில் திரவம் கசிதல் அல்லது முலைக்காம்பு மார்பகத்திற்குள் புதைந்து காணப்படுதல்
மார்பகங்களில் சருமம் சிவத்தல், குழி விழுதல், வரி போன்ற தடிப்புகள் ஏற்படுதல், சருமச் சுருக்கங்கள் ஏற்படுதல் அல்லது ஆரஞ்சுப் பழத் தோலின் உட்பகுதி போன்ற தோற்றம் கொண்டிருத்தல்.
மார்பகங்களில் காரணமின்றி வீக்கம் அல்லது சுருக்கம், குறிப்பாக ஒரு மார்பகத்தில் மட்டும் காணப்படும்.
வயது தொடர்பான மாற்றங்களில் பெரும்பாலானவை, புற்றுநோயின் அடையாளங்கள் அல்ல, ஆனால் ஏதேனும் புதிய அல்லது வினோதமான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் காண்பித்து சோதனை செய்துகொள்வது முக்கியம்.