தாய்ப்பால்/புட்டிப்பால் உண்ட குழந்தைகளுடைய சுமார் 146 மரபனுக்கள் வேவ்வேறு விதமாக தூண்டப்பட்டுள்ளன
என்று தெரியவந்துள்ளது! தாய்ப்பால் மூலமாக தூண்டப்பட்டுள்ள (கிட்டத்தட்ட)
எல்லா மரபனுக்களும் வேகமான குடல் வளர்ச்சி மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு
பகுதி வளர்ச்சி ஆகியவற்றை தூண்டுபவை/மேம்படுத்துபவை என்பது
குறிப்பிடத்தக்கது! எல்லாவகையிலும் பாதுகாப்பான ஒரு தாயின்
வயிற்றிலிருந்து பூமிக்கு வரும் குழந்தைகள், முதற்கட்டமாக சமாளிக்க
வேண்டியது இவ்வுலகின் (சுற்றுச்சூழலில்) கோடிக்கணக்கான நோய்க்கிருமிகளை.
அடுத்தகட்ட சோதனை, குடல் வழியாக உணவை ஜீரணித்து சக்தி பெறுதல்.
ஆக, இவ்விரண்டு தொடக்க சோதனைகளும்,
ஒவ்வொரு குழந்தைக்கும் இவ்வுலகம் வைக்கும் பரீட்சை! இச்சோதனகளை
வெற்றிகரமாக சமாளித்து அடுத்தகட்டத்துக்கு முன்னேறிச் செல்வதென்பது
ஒவ்வொரு குழந்தைக்கும் மிக மிக அவசியம். இப்பரீட்சையில் அவர்கள் தேர்ச்சி
பெற, மிக முக்கியமானவை, குடல் வளர்ச்சியும் நோய் எதிர்ப்பு சக்தி
வளர்ச்சியும்! குடலும், நோய் எதிர்ப்பு சக்தியும் ஆராக்கியமாக
இருக்கும்பட்சத்தில் மூளை மற்றும் உடல் வளர்ச்சியும் சீராக அமையும் என்பது
குறிப்பிடத்தக்கது!
மேற்குறிப்பிட்ட தாய்ப்பாலினால்
தூண்டப்படும் 146 மரபனுக்களில் சில, ஒழுகும் குடல் (leaky gut) என்னும்
ஒருவகையான குடல் நோயிலிருந்து குழந்தைகளைக் காக்கிறதாம். ஆபத்தான
வெளிப்பொருட்கள் குடல் வழியாக ரத்த நாளங்களுக்குள் சென்று, அதன் காரணமாய்
ஒவ்வாமைகள், திசுக்காய நோய்களான (allergies and inflammatory diseases)
ஆஸ்துமா, காலிடிஸ் மற்றும் க்ரான்ஸ் நோய் (asthma, colitis and Crohn’s
disease) வரும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. இந்நோய்கள் அனைத்தும்
புட்டிப்பால் உண்ணும் குழந்தகளில் பெரும்பாலும் காணப்படுபவை என்பதை
முந்தைய ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
என்கிறார் ஷெரான் டொனொவான்!
தாய்ப்பால்/புட்டிப்பால் மரபனு வெளிப்பாட்டினை இரு வேறு வகையில் பாதிக்கலாம்…..
க்ரோமோசோம்களின் மரபனுக்கள் நிறைந்த
டி.என்.ஏ பகுதிகளை, மரபனு வெளிப்பாட்டுக்கு அவசியமான நிலையில்
தயார்படுத்தும் காரணிகளை (புரதங்கள்) மாற்றலாம் (அல்லது)
க்ரோமோசோம் இழைகளை லாவகமாக
பிரித்து/சிக்கவிழ்த்து, மரபனு வெளிப்பாட்டினை தொடங்கும் புரதக்காரணிகள்
மரபனுக்கள்மீது உட்கார ஏதுவாய், மரபனுக்களை வெளிச்சத்துக்குக்
கொண்டுவந்து, மரபனு வெளிப்பாட்டினை தொடக்கிவைக்கும் மேல்மரபனுவியல் மாற்றங்களை (epigenetic effect) தூண்டலாம்!
மேல்மரபனுவியல்:
க்ரோமோசொம்களின் முறுக்கிய இழைகளுக்குள் புதைந்துள்ள மரபனுக்களை,
சிதைக்காமல், வேதியல் மாற்றங்களுக்கு உட்படுத்தாமல், அவற்றின் மேற்புறத்தை
மட்டும் சில/பல வேதியல் மாற்றங்களுக்குட்படுத்தி, மரபனு வெளிப்பாட்டினை
தேவைக்கேற்றவாறு தொடங்கியும் அல்லது தடுத்தும் கட்டுப்படுத்துவது மேல்மரபனுவியல் எனப்படுகிறது! (மேல்மரபனுவியல் பத்தி ஒரு பதிவுல பிரத்தியேகமா கூடிய விரைவில் நாம பார்ப்போம்!)
குழந்தையின் முதல் உணவு (தாய்ப்பால்),
அதன் நீண்டகால உடல் ஆரோக்கியத்துக்கு அவசியம்னு பதிவுத்தொடக்கத்துல
பார்த்தோம் இல்லீங்களா, அதுக்கு அடிப்படையே இந்த மேல்மரபனுவியல்
மாற்றங்களாகக் கூட இருக்கலாம் என்று யூகிக்கிறார் ஷெரான்?!. இவ்வகை
மாற்றங்கள் பொதுவாக, ஒரு முறை நிகழ்ந்தால் நிரந்தரமாக இருந்துவிடக்கூடியவை என்பதை கவனத்தில் கொள்க!
பரிணாமப்படி, தாய்ப்பால் மனிதக்
குழந்தைகளின் உணவுக்காக உருவானவை. அதில் ஹார்மோன்கள், வளர்ச்சிக்
காரணிகள் மற்றும் ஏராளமான நார்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது! ஆனால், மாட்டுப்பால் கன்றுகளுக்கு உண்வாக உருவானவை.
அதனுள்ளே இருக்கும், உயிர்தூண்டு காரணிகள், பாலைக்காய்ச்சுவதால்
அழிக்கப்பட்டுவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது!
என்னதான் கோடிக்கணக்கான வருடங்களாய்
இவ்வுலகில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்டு வந்தாலும், அதனை
அப்படியே செயற்க்கையாக உருவாக்கிவிட, பல்வேறு ஆராய்ச்சிகளை நிறுவனங்கள்
நடத்தினாலும், இன்னும் ஒன்னும் வேலைக்காகலை! தாய்ப்பாலைப் பத்தி நாம
இன்னும் எவ்வளவோ கத்துக்கனுமுங்க என்கிறார் ஷெரான்.
இப்போ புரியுதுங்களா, ஏன்
மாட்டுப்பாலைவிட தாய்ப்பால்தான் சிறந்தது அப்படீன்னு? தாய்ப்பாலின்
நற்குணங்கள்பத்தி நீங்கள் கேட்ட/படித்த, உங்களுக்குத்தெரிந்த விஷயங்கள்
எதாவது இருந்தா சொல்லுங்கள் தெரிந்துகொள்வோம்…..