சமூகத்தில் மற்ற பாலினத்தவர்களைப் போலவே தாங்களும் வாழ்வதற்கான உரிமை கோரி மாற்று பாலினத்தவர்கள் காத்திரமாக போராடி வரும் காலமிது. சமீபத்தில் தன்பாலின ஈர்ப்பு கொண்ட தனது மகனுக்காக அவரது தாய் மாப்பிள்ளை தேடியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதேபோல, தன்பாலின ஈர்ப்புள்ள பெண்களைப் புரிந்துகொள்ளும் பெற்றோர்கள் நம் சமூகத்தில் அரிதே. அந்த வகையில் லெஸ்பியன் என்று அழைக்கப்படும் தன்பாலின ஈர்ப்பு கொண்ட பெண்களைக் குறித்து துளி விரசமும் இன்றி மிகவும் இயல்பாக ஒரு விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த Ogilvy & Mather என்ற விளம்பர நிறுவனம் இந்த விளம்பரத்தை உருவாக்கியுள்ளது. இதை பிரபல ஷாப்பிங் வலைதலமான மிந்த்ரா பேஷன் நிறுவனம் யூ டியூபில் பிரபலப்படுத்தி வருகிறது. பேஸ்புக், யூ டியூப் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து, நேர்மறையான கமென்டுகள் மற்றும் ஷேர்கள் மூலமாக தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து எல்.ஜி.பி.டி(lesbian, gay, bisexual, and transgender.) உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில் “இது மிகவும் துணிச்சலான விளம்பரம். உலகம் முழுவதும் லெஸ்பியன்கள் செய்திகளில் இடம்பெறுகின்றனர். தனக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொண்டு தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். லெஸ்பியன் தம்பதிகளும் மற்றவர்களைப் போலவே மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இதை லட்சக்கணக்கானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.” என்றார்.