தலைவலி என்பது ஒரு நோய் அறிகுறியாகும். எமது உடல் நோய்வாய்ப்பட்டிருக்கின்றது என்பதை தெரிவிக்கும் ஒரு சமிக்ஞை அறிகுறியே தலைவலியாகும். இந்த சமிக்ஞையின் பிரகாரம் உடனடியாக சரியான சிகிச்சையை பெற்றுக்கொள்ளாமல் pain killers மாத்திரைகளை உட்கொண்டு இச்சமிக்ஞையை முடக்கிவிடுகின்றோம்.
இதன் போது உடலினுள் உள்ள நோய் வெளிக்காட்டாது மேலும் தீவிரமடைந்து உயிருக்குக் கூட ஆபத்தை ஏற்படுத்தும் என கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் எம்.எச்.எம்.நஸீம் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அவருடனான செவ்வி கீழே தரப்படுகின்றது.
கேள்வி:- நடுத்தர வயதினருக்கு ஏற்படக் கூடிய தலைவலிகளின் வகைள் எவை?
பதில்: TENSION TYPE HEADACHE, MIGRAINE, CLUSTER HEADACHE ஆகியவற்றை முக்கியமாக கொள்ளலாம்.
கேள்வி: TENSION TYPE HEADACHE பற்றி விளக்க முடியுமா?
பதில்:- இந்நோய் நிலை கழுத்து, தோள்பட்டை போன்ற இடங்களில் இருக்கக் கூடிய தசைகள் தொடர்ச்சியான அழுத்தம், வேலைப்பலு போன்ற காரணங்களினால் சுருங்குவதனால் ஏற்படுகின்றன. இங்கு தலைவலி அதி தீவிரமானதாக இருக்காது.
தலையை ஒருவர் இறுக்கிப் பிடிப்பது அல்லது அழுத்தத்தைக் கொடுப்பது அல்லது தலைத் தசைகள் சுருங்குவது போன்ற உணர்வு இருக்கும். தலையின் சகல பாகங்களிலும் தலைவலி இருக்கும்.தலைவலி தூக்க மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் சிலர் நிவாரணத்தை பெற்றுக்கொண்டாலும் இத்தகையவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது மனநலச் சிகிச்சையையும் சேர்ப்பது முக்கியமாகும்.
கேள்வி:- MIGRAINE (ஒற்றை தலைவலி )ஜப் பற்றியும் விபரிக்கவும்?
பதில்: இது தலையிலுள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படுகின்ற மாற்றத்தினால் தலைப் பகுதிக்கு விநியோகிக்கப்படுகின்ற நரம்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் உண்டாகின்றது.. தலைவலி ஏற்படும் போது மாறி மாறி இரு பக்கங்களில் வலி ஏற்படுவதோடு குமட்டல், வாந்தி, கை,கால்கள் குளிர்தல், வெளிச்சம், சத்தம் போன்றவற்றை சகிக்க முடியாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இது அநேகமாக தலையின் ஒரு பகுதியையே தாக்குகின்றது. தினமும் ஏற்பட கூடிய வாய்ப்பு அரிது. இத் தலைவலி அதிகமாக பெண்களையே தாக்குகின்றது. அதிலும் மாதவிடாய் ஏற்படக் கூடிய காலங்களில் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.
மிக்ரெய்ன் தலைவலிக்கு தூண்டுதலாக அமைவது சில உணவு வகைகள், மலச்சிக்கல், மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, தீவிர கோபம், பிரகாசமான வெளிச்சம் உடம்பில் குளுகோசின் அளவு குறைதல் போன்ற காரணங்களினால் ஏற்படுகின்றன. இங்கு தலைவலி 4 மணித்தியாலங்கள் தொடக்கம் 72 மணித்தியாலம் வரை இருக்கும்.
கேள்வி:- CLUSTER HEADACHE (கொத்து தலைவலி) ஜப் பற்றி விபரிக்க முடியுமா?
பதில்: இங்கு தலைவலி மிகவும் தீவிரமாக இருப்பதோடு ஆண்களையே அதிகமாக தாக்குகின்றது. இங்கு தலைவலி ஆரம்பத்தில் 15 நிமிடம் முதல் 90 நிமிடங்கள் வரை இருக்கும். ஆனாலும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை ஏற்படலாம்.
மதுபானம் அருந்துவதன் மூலம் இந்நோய் தீவிரமடையும். இது தலையின் ஒரு பக்கத்தையே விசேடமாகக் கண்களைச் சுற்றியும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேற்குறிப்பிட்டவை தவிர அதிக குருதி அழுத்தம் தலை இரத்த நரம்புகளில் ஏற்படுகின்ற மாற்றம் மன அழுத்தம், நரம்புகளில் ஏற்படுகின்ற தாக்கம், கழுத்து சம்பந்தப்பட்ட நோய்கள், மூளையில் கட்டி ஏற்படுதல் போன்ற நிலைகளிலும் நடுத்தர வயதிலும் தலைவலி ஏற்படலாம். ஆண்களுக்கு உடலுறவுக்குப் பின் ஏற்படுகின்ற தலைவலியும் ஒரு முக்கியமான விடயமாகும்.
கேள்வி:- தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை?
பதில்:- தலைவலி ஏற்பட பலவிதமான காரணங்கள் உள்ளன. அவற்றில் மிக சாதாரணமானது சில உணவு வகைகளின் ஒவ்வாமை தன்மையாகும். இதில் சொக்கலட், சீனி, பதனிடப்பட்ட இறைச்சி வகைகள், nuts எனப்படும் விதை வகைகள், யோகர்ட், சீஸ், மதுபாவனை வகைகள், வினாகிரி போன்றவைகள் அடங்கும்.
தூக்கமின்மை, அதிர்ச்சி, காய்ச்சல் அத்துடன் ஒரு சிலருக்கு மலச்சிக்கல், அதி கூடிய பசி போன்ற நிலையிலும் தலைவலி ஏற்படலாம். இவற்றை தவிர வேறு நோய்களுக்கு பாவிக்கப்படும் வீரியம் கூடிய மாத்திரைகளின் உக்கிரதன்மையினாலும் தலைவலி ஏற்படலாம். மேலும் மாதவிடாய் காலத்தின் போதும், உடலுறவுக்கு பின்னும் சிலருக்கு தலைவலி ஏற்படலாம்.
தலைவலியின் போது உட்பகுதியில் ஏற்படக் கூடிய பல நோய் நிலைகள் உள்ளன. தலையின் உட்பகுதியில் இருக்கும் இரத்தக் குழாய்களின் சில பகுதிகள் மெல்லிய நிலையில் இருத்தல் அல்லது வீக்கமடைதல், மூளையில் ஏற்படக் கூடிய கட்டிகள், தலையினுள் இரத்தம் கசிதல் மற்றும் அதிக குருதி அழுத்தம் போன்ற நிலைகளில் தலைவலி ஏற்படுகின்றது. மேலும் மனநலப் பாதிப்பினாலும் தலைவலி ஏற்படுகிறது என்பது முக்கியவிடயமாகும்.
கேள்வி:- தலைவலிக்கு உட்கொள்ளும் வலி நிவர்த்தி மாத்திரைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகள் எவை?
பதில்:- தலைவலி என்பது ஒரு நோய் அறிகுறியாகும். எமது உடல் நோய்வாய்ப்பட்டிருக்கின்றது என்பதை தெரிவிக்கும் ஒரு சமிக்ஞை அறிகுறியாகும். இந்த சமிக்ஞையின் பிரகாரம் உடனடியாக சரியான சிகிச்சையை பெற்றுக்கொள்ளாமல் pain killers மாத்திரைகளை உட்கொண்டு இச்சமிக்ஞையை முடக்கிவிடுகின்றோம். இதன் போது உடலினுள் உள்ள நோய் வெளிக்காட்டாது மேலும் தீவிரமடைந்து உயிருக்குக் கூட ஆபத்தை ஏற்படுத்தும்.
அதுமாத்திரமன்றி, தலைவலி ஏற்படும் போது வைத்தியர்களின் ஆலோசனையின்றி வலி நிவாரண மாத்திரைகளை தொடர்ந்து எடுக்கும் போது அவை உடம்பில் நச்சுத் தன்மையை உண்டாக்கி மருந்து நஞ்சடைதல் தலைவலி Medicine Over use Headache என கூறப்படும் தலைவலியை ஏற்படுத்தும்.
அத்துடன் இவ்வாறு உட்கொள்ளும் மருந்துகள் நச்சுத் தன்மையடையும் போது ஈரல் சிறுநீரகம் போன்ற உறுப்புக்களையும் வெகுவாகப் பாதிக்கின்றன.
கேள்வி: தலைவலியை அடித்தளமாக கொண்டு வேறு பாரதூரமான நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டா?
பதில்:- நிச்சயமாக அவ்வாறான தாக்கங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன. தலைவலிக்கு சாதாரண உணவு ஒவ்வாமை முதல் தலையினுள் ஏற்பட கூடிய புற்றுநோய் கட்டிகள் வரை பல வகையான காரணங்கள் உள்ளன. எனவே நோயின் தன்மையை பொறுத்து பின் விளைவுகள் தங்கியுள்ளன.
இது தவிர தலையுடன் சம்பந்தப்பட்ட உறுப்புக்களான கண், காது, மூக்கு, பல் போன்றவைகளில் ஏற்படக் கூடிய நோய்களுக்கு தலைவலி ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. தலைவலி உக்கிரமடைந்து அதிக குருதி அழுத்தம் ஏற்பட்டு பாரிசவாதம் ஏற்படும் நிலைமை உருவாகலாம்.
கேள்வி:- கோபம், மனஅழுத்தம் காரணமாக ஏற்படக் கூடிய தலைவலியிருந்து விடுபட்டுக்கொள்வது எப்படி?
பதில்:- கோபம் மன அழுத்தம் ஏற்படும் போது எமது மூளையினால் சில அசாதாரண ஹோர்மோன்கள சுரக்கப்படுகின்றன. அடிக்கடி கோபம் வருபவர்களுக்கு இவை தொடர்ந்தும் சுரக்கப்பட்டு அவை எமது உடம்பில் தேங்கி பலவிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நிதானம், கிரகிக்கும் சக்தி போன்றவற்றை இல்லாமல் செய்கின்றன.
மன அழுத்தத்தின் போதும் இதேபோன்ற சில தாக்கங்கள் ஏற்படுகின்றன. இவைகள் ஒருவரது முழு வாழ்க்கையையுமே சந்தோஷமற்ற ஒரு நிலைக்கு கொண்டு செல்லலாம். கோபம், மனஅழுத்தம் என்பவைகள் வாழ்க்கைக்கு தடைக்கற்களே தவிர படிக்கற்கள் அல்ல.
கேள்வி:- தலைவலிக்கான சிகிச்சை முறைகளை எவை?
பதில்: தலைவலிக்கான சிகிச்சை அதன் காரணங்களைப் பொருத்தே அமைகின்றன. சில காரணங்களுக்காக ஏற்படுகின்ற தலைவலிக்கு தொடர்ந்தும் மாத்திரைகள் எடுக்கவேண்டியுள்ளது. இதன் போது மருந்துகளினால் ஏற்படுகின்ற பக்கவிளைவுகளை வைத்தியர்கள் கருத்திற்கொள்வார்கள். ஒரு சில மாத்திரைகளை பாவிக்கும் போது அவை தனது அன்றாட வேலைகளை செய்ய தடையாக அமையலாம்.
எனவே தலைவலிக்கு சிகிச்சை செய்யும் போது கிரேக்க மருந்துத் தந்துவஞானியான ஹிப்போகிரடிஸ் கூறிய “உங்கள் உணவுகளையே உங்கள் மருந்தாக்கிக் கொள்ளுங்கள்” என்ற கூற்றைப் பின்பற்றி ஒவ்வொரு நோய்க்கும் ஏற்ற உணவுகளை உட்கொள்வதன் மூலமும் இயற்கை எமக்குத் தந்த இயற்கை மருந்துகள் மனநல சிகிச்சை முறைகள் போன்றவற்றின் மூலமும் அநேகமான தலைவிக்கான நிவார ணம் கிடைக்கும்.