Home பெண்கள் உடல் கட்டுப்பாடு முதுகு வலி உயிர்போகுதா? உடற்பயிற்சி செய்யுங்க !

முதுகு வலி உயிர்போகுதா? உடற்பயிற்சி செய்யுங்க !

70

முதுகு வலி என்பது இன்றைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலையாய பிரச்சினையாக உள்ளது. இதற்கு காரணம் பள்ளி குழந்தைகள் பொதி சுமப்பதும், இளைய தலைமுறையினர் ஒரே இடத்தில் அமர்ந்து கம்யூட்டர் முன்பு வேலை பார்ப்பதும்தான் என்கின்றனர் மருத்துவர்கள். முதுகுவலிக்கான காரணங்கள் குறித்தும் அதற்கான தீர்வுகளையும் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.

தண்டுவட நரம்புகள் பாதிப்பு

முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் உள்ள தண்டுவட நரம்புகள்தான் உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்கின்றன. முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும்.

வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தே இருக்கக்கூடிய சூழல், தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணித்தல், உடல் எடை கூடுதல், கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல் போன்ற செய்கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள ‘டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த முதுகெலும்பு அமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வைட்டமின் டி சத்து

நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் ‘வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல் போவதாலும் எலும்புகள் மிருதுத்தன்மை அடைந்து எளிதில் தேய்மானமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை மணி நேரமாவது உடலில் வெயில் படும்படியாகச் சூழ்நிலைகளை மாற்றிக்கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சி அவசியம்

நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும். எனவே நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள் நல்லது. இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

வெள்ளைப்பூண்டு தைலம்

வெள்ளைப்பூண்டு தைலத்தை எடுத்து முதுகுவலி உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். முதுகுவலி குணமாகும். வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து பருக முதுகுவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வைட்டமின் சி பற்றாக்குறை

வைட்டமின் சி பற்றாக்குறையினாலும் முதுகுவலி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே அன்றாட உணவில் வைட்டமின் சி சத்துள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ளுமாறு உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒரே மாதிரி உட்காராதீங்க

வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு துண்டை நனைத்து அதனை முதுகு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

அனைத்தையும் விட ஒரே பொசிசனில் அதிக நேரம் அமர்ந்திருக்க வேண்டாம். அவ்வப்போது எழுந்து நடந்தாலே முதுகுவலிக்கு காரணமான தசை அழுத்தம் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.