முடி கொட்டுவது பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 300 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை. முடியை இறுக்கமாகவும், இழுத்துப் பிடித்தும் கட்டுகின்ற போதும், பின்னல் போடும் போதும் முடி பிடுங்கிக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது.
எனவே போனிடெயில் போடுகிறவர்களும், இழுத்துப் பின்னலிடுகின்றவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும். முடியின் வளர்ச்சியில் உணவின் பங்கு கணிசமாகவே உள்ளது.
பெண்கள் தங்கள் உணவு முறைகளை அடிக்கடி மாற்றுவதனாலும், அளவுக்குக் குறைவாக உண்பதாலும் உணவில் ஊட்டச் சத்துக்கள் விட்டமின்கள் குறைவாக இருப்பதாலும் முடி கொட்டக் கூடும். முடி உதிர்வதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள்:
* தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இது வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால் பலஹீனத்தைப் போக்கும்.
* நெல்லிக்காய் சேர்ந்த தேங்காய் எண்ணையில் தயாரிக்கப்பட்ட கேசத் தைலத்தை உபயோகப்படுத்தவும். இது முடி உதிர்வதை தடுக்கும், முடிக்கு தேவையான வைட்டமின் “சி” சத்துக்களையும் அளிக்கும்.
* தினசரி காலையும், இரவும் ஒரு தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் பவுடரையும், கரிசலாங்கண்ணி பவுடரையும் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் தெரியும். இது முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.
* சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல் அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும். மேற்கூறியவற்றுள் வசதிக்கேற்ப ஒன்றிரண்டு முறைகளை கையாளலாம்.