Home பெண்கள் அழகு குறிப்பு முகத்தில் பருக்கள் பிரச்சினை பெரிய தொல்லை!

முகத்தில் பருக்கள் பிரச்சினை பெரிய தொல்லை!

39

முகத்தில் பருக்கள் பிரச்சினை பெரிய தொல்லையாக இருக்கிறது. பரு நீங்கினாலும், அந்த இடத்தில் தழும்புகள் ஏற்பட்டு முகமே அசிங்கமாகி விடுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்கள்.“முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம், சருமத்தில் எண்ணெய்ப்பசைதான்” என்கிறார் அழகு கலை நிபுணர் வசுந்தரா. “நம்முடைய சருமத்தில் சபேசியஸ் சுரப்பி ஒவ்வொரு முடிகளுக்கு அருகில் உள்ளது. இந்த சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும் போது எண்ணெய்ப் பசை முகத்தில் சுரக்க ஆரம்பிக்கும். சருமத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும் போது சருமத்தில் உள்ள ஓட்டைகள் அடைபடும். அது தான் பருக்கள் வர முக்கிய காரணம். எண்ணெய் அதிகமாக சுரக்கும் போது, கூடவே பேக்டீரியா இன்ஃபெக்‌ஷனும் ஏற்படும். இதற்கு சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய்ப் பசை மற்றும் பருப்பிரச்னை உள்ளவர்கள் அவ்வப்போது முகத்தை கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு பதிலாக நான்கு முறை கழுவலாம். அதிகமாக கழுவினாலும், சருமம் வறண்டு போகும் வாய்ப்புள்ளது. கிளிசரில் எலுமிச்சை அடங்கிய சோப்புகளை பயன்படுத்தலாம். எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். சோப்பிற்கு பதில் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது.

உணவில் நிறைய காய்கறிகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடலாம். வெந்தயம், கறிவேப்பிலை, பச்சை காய்கறிகள், கீரை வகைகள் அதிகம் உணவில் எடுத்துக் கொள்ளலாம். மலச்சிக்கல் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய்யில் ெபாரித்த உணவுகள், காரமான மற்றும் அதிகம் மசாலாக்கள் கொண்டு உணவுகளை தவிர்க்கவேண்டும்.பருக்கள் மறுபடியும் ஏற்படாமல், தழும்புகள் தோன்றாமல் இருக்க பீல் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இதனை நாம் வீட்டில் இருந்தே செய்ய முடியாது. சரும நிபுணர் அல்லது காஸ்மெடாலஜிஸ்ட் உதவியுடன் செய்ய வேண்டும். திரவம் போல் இருக்கும் இதனை முகத்தில் தடவி ஐந்து நிமிடம் கழித்து நீக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய சருமத்தில் ph அளவை கட்டுப்படுத்தி, எண்ணெய் பசையை குறைக்கும். பருக்கள் மற்றும் தழும்பு ஏற்படாமல் பாதுகாக்கும். இது முழுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால் சருமத்தை பாதிக்காது. மேலும் சருமத்தில் உள்ள பிரச்னைக்கு ஏற்ப சிகிச்சையும் மாறுபடும்.

வீட்டில் இருந்தபடியே பருக்களுக்கு சில கைவைத்தியமும் உண்டு. துளசியை மென்றும் சாப்பிடலாம். உடன் ஒரு கைப்பிடி துளசியை மிதமான சுடுதண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். இந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். பருக்கள் இரண்டு நாட்களில் காய்ந்து உதிர்ந்துவிடும். மேலும் பருக்கள் மூலம் ஏற்படும் பேக்டீரியா தொற்றும் ஏற்படாது.துளசி தவிர அரிசி மாவும் நல்லது. அரிவு மாவு 2 டீஸ்பூன், வெள்ளரி சாறு 2 டீஸ்பூன், ஒரு சிட்டிகை மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து பருக்கள் மற்றும் தழும்பு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் கழுவலாம்.

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும், உடல் சூட்டினை போக்கும். துளசி இலை சாறும் பருக்கள் உள்ள இடத்தில் தடவலாம். வேப்பிலை மிகவும் நல்ல மருந்து. வேப்பிலை பவுடர் 1 டீஸ்பூன், பன்னீர், முல்தானி மெட்டி 2 டீஸ்பூன் கலந்து சருமத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் பருக்கள் குறையும்.நிலவேம்பு பவுடரும் பயன்படுத்தலாம். அதில் இருக்கும் கசப்பு, ஆன்டி பேக்டீரியல், ஆன்டி ஃபங்கல், சரும பிரச்னை வராமல் பாதுகாக்கும். இதனை சாதாரண மற்றும் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் செய்யலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது.

நிலவேம்புடன் சந்தனம் ேசர்த்து பயன்படுத்தலாம். நிலவேம்பு 1 டீஸ்பூன், உரசிய சந்தனம் 1 டீஸ்பூன், முல்தாணி மெட்டி 1 டீஸ்பூன், பன்னீருடன் கலந்த முகத்தில் பத்து போடுவதைப் போல் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவலாம். இது பருவினால் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யாது. ஆனால் பருக்களால் ஏற்படும் இன்ஃபெக்ஷனை கட்டுப்படுத்தும்.பருக்களை எப்போதும் கை நகங்களால் கிள்ளக்கூடாது. அது தழும்பாக மாறி பள்ளமாகும். சருமத்தில் ஆழமாக பள்ளம் ஏற்படும் போது, நீக்குவது சிரமம். சருமத்திற்கு பிராண வாயு தேவை அதனால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்ந்த தண்ணீரை விட மிதமான சூட்டில் தண்ணீர் குடிப்பது நல்லது. ஒருவர் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சருமத்தில் நீர்சத்து அதிகரிக்கும், வறண்டு போகாது” என்று ஆலோசனை வழங்கினார் வசுந்தரா.