Home சமையல் குறிப்புகள் மீல்மேக்கர் குழம்பு

மீல்மேக்கர் குழம்பு

12

மீல்மேக்கரை தனியாகவோ அல்லது விருப்பமான மற்ற காய்களுடனோ சேர்த்து சமைக்கலாம்.

தேவையானப் பொருள்கள்:

மீல்மேக்கர்_25 (எண்ணிக்கையில்)
உருளைக்கிழங்கு_2
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1/4 பாகம்
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
பட்டை_சிறு துண்டு
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
சீரகம்_கொஞ்சம்
பெருஞ்சீரகம்_கொஞ்சம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

வறுத்து அரைக்க:

கொத்துமல்லி விதை_2 டீஸ்பூன்
கசகசா_ஒரு டீஸ்பூன்
சீரகம்_சிறிது
தேங்காய்_3 துண்டுகள்

செய்முறை:

பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.

தேவையான மீல்மேக்கரை ஒரு பௌளில் போட்டு அது மூழ்கும் அளவு வெந்நீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் நீரை வடித்துவிடவும்.

வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கேரட்டை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.உருளைக்கிழங்கை நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.

இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

வெறும் வாணலியில் கசகசா,கொத்துமல்லி விதை, சீரகம் இவற்றை தனித்தனியாக லேசாக வறுத்து ஆறியதும் அதனுடன் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கொத்துமல்லி விதை சேர்க்க வேண்டுமென்பதில்லை. வறுத்து சேர்க்கும்போது நல்ல வாசனையாக இருக்கும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

தாளிப்பு முடிந்ததும் முதலில் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் பட்டாணி,கேரட்,மீல்மேக்கர் இவற்றை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி (அதாவது காய்கள் மூழ்கும் அளவு) மூடி வேக வைக்கவும்.

குழம்பு பாதி கொதித்த நிலையில் உருளைக்கிழங்கைப் போட்டுக் கிளறிவிட்டு மூடி வேக வைக்கவும்.முதலிலேயே மற்ற காய்களுடன் சேர்த்தால் குழைந்துவிடும்.

எல்லாம் நன்றாகக் கலந்து,சிறிது நேரம் கொதித்து,வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையை குழம்பில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

சிறிது கொதித்த பிறகு எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி தூவிக் கிளறிவிட்டு இறக்கவும்.

இது சாதம், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, நாண், இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.