Home ஆரோக்கியம் மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

936

மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?
கவிதா, பளை

பதில்: மார்பகப் புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று ஒன்றைச் சுட்டிக் காட்டுவது என்பது இயலாத காரியம். மார்பகப் புற்றுநோய்க்கு மட்டுமல்ல ஏனைய புற்று நோய்களுக்கும் அவ்வாறுதான்.

ஆனால் அந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் எனப் பலவற்றை சொல்லலாம். இத்தகைய ஆபத்தான காரணிகள் உள்ள எல்லோருக்கும் புற்றுநோய் எதிர்காலத்தில் நிச்சயம் புற்றுநோய் வரும் என அர்த்தப்படுத்தக் கூடாது. வுரக் கூடிய ஆபத்து அல்லது சாத்தியம் அதிகம் என்றே கொள்ள வேண்டும்.

முக்கிய காரணியாக பரம்பரை அம்சத்தைக் கூறலாம். பரம்பரையில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால் அவர்களது வழித்தோன்றல்களுக்கு வரக் கூடிய சாத்தியம் அதிகம்.

அத்தகையவர்களுக்கு பரம்பரை அலகு பரிசோதனை மூலம் இது வரக் கூடிய ஆபத்து இருக்கிறதா என்பதை இப்பொழுது கண்டறிய முடியும்.

மார்பகத்தில் புற்றுநோயல்லாத வேறு சில வகை கட்டிகள் ஏற்கனவே வந்தவர்களுக்கும் எதிர்கலத்தில் மார்பகப் புற்றுநோய்க்கான சாத்தியம் அதிகம்.

மிகக் குறைந்த வயதில் (12க்கு முதல்) பெரியவளானவர்களுக்கும், 55 வயதாகியும் மாதவிடாய் முற்றாக நிற்காதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

குழந்தைகள் பெறாத பெண்களுக்கும் முதற் குழந்தையை 30 வயதிற்கு பின்னரே பெற்றவர்களுக்கும் இதற்கான ஆபத்து அதிகமாகும்.

அதீத எடை உள்ள பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரக் கூடிய ஆபத்து அதிகம்.

அதேபோல வேறு நோய்களுக்காக மார்பில் ரேடியம் கதிர்சிகிச்சை செய்தவர்களுக்கும் ஆபத்து ஆதிகம் எனப்படுகிறது.

கடந்த பத்து வருட காலத்திற்குள் குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் உபயோகித்தவர்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் சற்று அதிகமாகும்.

மாறாக குழந்தைக்கு ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள் வரை பாலூட்டிய தாய்மாருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் குறைவாகும். தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் அவ்வாறே குறைவாகும்.

மமோகிராம் பரிசோதனையின் போது மார்பக திசுக்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதாக காணப்பட்டவர்களுக்கும் ஆபத்து ஆதிகம் எனப்படுகிறது.

எனவே இத்தகைய சாத்தியக் கூறுகள் உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன? ஒழுங்கான முறையில் சுய மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டும்.

சிறிய சந்தேகம் இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.