மாதவிலக்கின் போது வெளியேறுகிற ரத்தம் அசுத்தமானது என்றும் அது எத்தனை அதிகமாக வெளியேறுகிறதோ அத்தனை நல்லது என்றும் பலருக்கு தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. ஆனால் அதிக ரத்தப்போக்கு ஆரோக்கியமானதில்லை ஆபத்தானது என்கிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.
25 முதல் 30 நாட்களுக்குள் மாதவிலக்கு வர்றதும் 5 நாட்கள் நீடிக்கிறதும் தான் இயல்பானது. அந்த 5 நாட்கள்ல 25 முதல் 80மி.லி ரத்தம் வெளியேறலாம். 80 மி.லிக்கு கூடுதலாகவோ, 5 நாட்களைத் தாண்டியோ, ரத்தபோக்கு இருந்தா அது அசாதாரணமானது சந்தேகப்படணும். அதிகப்படியான ரத்தப்போக்கை மெனரேஜியானு சொல்றோம்.
13-14 வயசுல வயசுக்கு வர்ற ஒரு பெண்ணுக்கு முதல் சில மாசங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி மற்றும் வெளியேறுகிற ரத்த போக்கின் அளவுல மாற்றம் இருக்கலாம். அது கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும். அதுவே 18-19 வயதிலும் தொடர்ந்தாலோ, மாதவிலக்கு நாட்கள்ல அந்தப்பெண் ரொம்பக் களைச்சு சோர்ந்து போனாலோ அலட்சியப்படுத்தாம மருத்துவரை பார்க்கணும். அதிக படியான ரத்தப் போக்குக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.
ரத்த தட்டணுக்கள்ல ஏதாவது குறைபாடு இருக்கலாம். சிலர் இதய நோய்க்கு மருந்துகள் எடுப்பாங்க. ரத்தம் உறைதலை தடுக்கிற அந்த மருந்துக்களோட பக்க விளைவாக இருக்கலாம். கர்ப்பபையோட உள்பக்க லைனிங் பாகம் அப்படியே உதிரும் போது தான் அது ரத்தப்போக்கா வெளியேறும். பிறகு புது திசுக்கள் உருவாகும். இந்த இயக்கத்துல கோளாறு இருக்கலாம். கர்ப்பப்பைல தொற்று அல்லது கட்டி, காப்பர்டி யோட விளைவு, என்டோமெட்ரியாசிஸ்னு சொல்லக்கூடிய கர்ப்பப்பை வீக்கம்னு பல காரணங்களால உதிரப்போக்கு அதிகமாக இருக்கலாம்.
வயசான, நாலஞ்சு பிள்ளைங்க பெற்றெடுத்த, குண்டான உடல்வாகுள்ள பெண்களுக்கு இப்படி இருந்தா அது கர்ப்பப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாங்குறதையும் சோதிக்கணும். கர்ப்பபைக்கு வெளியில உருவாகிற கர்ப்பம் கர்ப்பப்பை வாய் கட்டி, மற்றும் தொற்று தைராய்டுனு இன்னும் சில காரணங்களையும் குறிப்பிடலாம். அதனால ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறப்ப சின்னப் பொண்ணுங்களுக்கு அப்படித்தான் இருக்கும் போக போக சரியாயிடும்னு நினைக்க வேண்டாம். உடனடியாக மகப்பேறு மருத்துவரை பார்த்த பரிசோதிக்கிறது நல்லது.
முதல்ல கர்ப்பப்பையை ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும் பிறகு ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவும், தைராயிடும் சரி பார்க்கப் படணும். அளவுக்கதிக ரத்தப்போக்கு இருந்தா, தேவைப்பட்டா டி அன்ட் சி செய்து திசுக்களை பயாப்சி சோதனைக்கும் அனுப்ப வேண்டியிருக்கும். அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்த, ஹார்மோன் கலக்காத அருமையான மருந்துகள் இப்ப நிறைய இருக்கு என்கிறார் .