உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதில் வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஃபில்லாந்தேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது மூலம் மூளை செயல்திறன் அதிகரிக்கிறது.
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் நெல்லிக்காய் உடலில் தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
இதயத்தை காக்கும்
நெல்லிக்காய் இதயத்திற்கும் பலவிதமான பலன்களை அளிக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, அதன் விளைவாக இதயத்தைப் பாதுகாக்கிறது. இருதயத்திற்குள் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
வாய் துர்நாற்றம் விலகும்
நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் விலகி ஓடும். மேலும், பற்களை வலுவாக்கும், ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களையும் ஆற்றுகிறது.
மலச்சிக்கல் தீரும்
நாம் சாப்பிடும் உணவுகளை எளிதாகச் செரிமானம் செய்து, மலச்சிக்கலே இல்லாமல் செய்வதற்கு நெல்லிக்காய் மிகவும் உதவுகிறது. அதிலுள்ள நார்ச்சத்துக்கள் செரிமான பிரச்சனைக்கு தீர்வாக இருக்கின்றன.
கொழுப்பை கரைக்கும்
உடல் பருமன் நோயினால் அவதிப்படுபவர்கள் மிக அதிகம். நீரிழிவு மற்றும் இதய நோய்களையும் இந்த உடல் பருமன் ஏற்படுத்துகிறது. நெல்லிக்காயில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்துக்கள் நம் உடலிலுள்ள கொழுப்பைக் கரைத்து அகற்றுகிறது.
கண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்
கண் புரை என்னும் பார்வை நோயைத் தவிர்ப்பதில் நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது. மேலும், கண் சிவப்பாதல், கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல், மாலைக் கண் உள்ளிட்ட பலவிதமான பிரச்சனைகளைப் போக்குவதற்கும் நெல்லிக்காய் உதவுகிறது.
விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்
ஆண்களில் சிலருக்கு விந்தணுக்கள் குறைவாக இருக்கும். அவர்கள் தொடர்ந்து நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.
மாதவிடாய் வலி குறையும்
மாதவிடாய் நாட்களில் பெண்கள் வலியால் கடும் அவதிக்குள்ளாவர். நெல்லிக்காயை எடுத்துக் கொள்வதால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகள் குறையும்.
தலைமுடியை வலுவாக்கும்
தலைமுடியை வலுவாக்குவதில் கால்சியத்தின் பங்கு அதிகம் உள்ளது. இந்தக் கால்சியம் நம் உடலுக்குள் எளிதாக ஊடுருவுவதற்கு நெல்லிக்காய் உதவுகிறது. நாம் உபயோகப்படுத்தும் ஷாம்புக்களில் நெல்லிக்காய் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உடலில் கால்சியம் சேரச் சேர எலும்புகளின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.