Home ஆரோக்கியம் மாதவிடாய்க்கு முன்பு மார்பகங்களில் ஏன் வலி ஏற்படுகிறது?

மாதவிடாய்க்கு முன்பு மார்பகங்களில் ஏன் வலி ஏற்படுகிறது?

45

Woman is clutching her chest, acute pain possible heart attack
மார்பகம் மற்றும்/அல்லது அக்குள் பகுதியில் ஏதேனும் வலி அல்லது அசௌகரியம் ஏற்படுவதை மார்பக வலி அல்லது மாஸ்டால்ஜியா என்கிறோம்.

பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் இந்த வலி, சில நாட்களில் மாதவிடாய் வரப்போகிறது என்பதன் அடையாளமாக இருக்கலாம். மார்பக வலி, மாதவிடாய்க்கு முன்பு கடுமையாக இருக்கலாம், மாதவிடாய் தொடங்கிய பிறகு அல்லது முடிந்த பிறகு குறையலாம். பொதுவாக, வலி ஒரு மார்பகத்தில் அல்லது இரண்டு மார்பகங்களிலும் இருக்கலாம். மார்பகம் முழுவதும் அல்லது ஒரு பகுதியில் மட்டும் இருக்கலாம், அல்லது அக்குள் வரை பரவி இருக்கலாம். மார்பகத்தில் வலி இருப்பது புற்றுநோயின் அறிகுறியல்ல.

காரணங்கள் (Causes):

ஹார்மோன்கள்: ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரோன் ஆகிய இரு ஹார்மோன்களே மாதவிடாயைத் தொடங்கும் வேலையைச் செய்கின்றன. மாதவிடாயின்போது இந்த ஹார்மோன்கள் மார்பகங்களில் உள்ள குழல்கள் மற்றும் பால் சுரப்பிகளை விரிவடையச் செய்கின்றன, இதனால் வலி ஏற்படுகிறது. மார்பகங்களில் தாய்ப்பால் சுரக்கக் காரணமாக இருக்கும் புரோலாக்டின் எனும் ஹார்மோனும் மார்பகத்தில் வலி ஏற்படுத்தக் காரணமாக இருக்கலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன.
மன அழுத்தம்: மன அழுத்தம் ஹார்மோன்களின் சமநிலையைப் பாதித்து சீர்குலைக்கிறது, இதனாலும் மார்பகங்களில் வலி ஏற்படலாம்.
ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT): HRT சிகிச்சையால் மார்பகத்தில் உள்ள திசுக்களின் செல்கள் அதிக எண்ணிக்கையில் துரிதமாகப் பெருக்கமடைவதால், இந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பகங்களில் வலி ஏற்படலாம்.
பிற காரணங்கள் (Other Causes):

அளவுக்கதிகமாக காஃபின் (காபி, டீ, கோலா, சாக்லேட் மற்றும் சக்தியளிக்கும் பானங்கள் (எனர்ஜி ட்ரிங்க்ஸ்) போன்றவற்றில் உள்ளது) எடுத்துக்கொள்ளுதல்.மார்பக வலிக்கும் காஃபினுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை. இருப்பினும், காஃபின் அதிகம் எடுத்துக்கொள்வது ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும் என்று தெரியவருகிறது, அதன் விளைவாக மார்பகங்களில் வலி ஏற்படலாம்.
உடல் எடை அதிகரிப்பதால் மார்பகங்கள் எடை கூடி, அதனாலும் வலி ஏற்படலாம்.
மார்பகத்தில் காயம் பட்டாலும் (அறுவை சிகிச்சை காரணமாக ஏற்பட்ட வடுவாகவும் இருக்கலாம்) வலி இருக்கலாம்.
மார்பகத்தில் உண்டாகும் மிருதுவான சிறிய கட்டிகள் மார்பகக் கட்டிகள் அல்லது நகரக்கூடிய நார்த்திசுக் கட்டிகள் எனப்படுகின்றன. மாதவிடாய் தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு இந்தக் கட்டிகள் மிருதுவாக மாறுவதால் வலி ஏற்படும்.
மார்பகங்களை நன்றாகத் தாங்கிப் பிடிக்காத பிரா அணிவதாலும் வலி ஏற்படலாம்.
பளு தூக்குதல் போன்ற கடினமான வேலைகளைச் செய்வதால், மார்புப் பகுதி, தோள்பட்டை அல்லது மார்புத் தசைகள் அதிக விசையால் பாதிக்கப்படும்.
மார்புக்கூட்டின் சுவர், விலா அல்லது மார்பகங்களுக்கு அடியில் இருக்கும் தசைகளைப் பாதிக்கும் சில மருத்துவப் பிரச்சனைகள், உதாரணம்: விலா எலும்பு சந்திப்பில் ஏற்படும் அழற்சி, முதுமையில் ஏற்படும் கழுத்து எலும்பு அழற்சி போன்றவை.
 சமாளித்தல் (Management):

இவற்றைத் தவிர்க்கவும்: மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பு ஓரிரு வாரங்களுக்கு காஃபின் (காஃபி, தேநீர், சாக்லேட் போன்றவை) உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
இவற்றைக் குறைக்கவும்: கொழுப்பு அதிகமுள்ள உணவுகள்.
இவற்றை அதிகரிக்கவும்: நடப்பது, உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளை அதிகரிக்கவும்.
மருந்துகள்: ஏதேனும் மருந்தை எடுத்துக்கொள்ளத் தொடங்கும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது எப்போதும் நல்லது.
மார்பக வலிக்கு, கூடுதலாக எடுத்துக்கொள்ளப்படும் ஹார்மோன்கள் மற்றும் ஹார்மோன் தடுப்பான்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு:

கருத்தடை மாத்திரைகள்
புரோமோக்ரிப்டின் (இது ஹைப்போதலாமஸில் புரோலேக்ட்டினைத் தடை செய்கிறது)
டெனோஸால் எனும் ஆண் ஹார்மோன்
தைராய்டு ஹார்மோன்
டமொக்சிஃபென் எனும் ஈஸ்ட்ரோஜன் தடுப்பு மருந்து
மார்பகத்தில் வலி குறைய, வலி நிவாரணி (இப்யூபுரூஃபன்) எடுத்துக்கொள்ளலாம் அல்லது மார்பகத்தின் மீது ஆயின்ட்மென்ட் தடவலாம்.

மற்றவை:

மார்பகங்களை நன்கு தாங்கிப் பிடிக்கும், சரியான அளவுள்ள பிரேசியர்களை அணிய வேண்டும்.
அழற்சி எதிர்ப்பு சக்தியுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ள ஈவினிங் ப்ரிம்ரோஸ் எண்ணெயைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று சில ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. கால்-கை வலிப்பு உள்ளவர்கள் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லதல்ல.
மன அழுத்தத்தைக் குறைக்க ரிலாக்சேஷன் பயிற்சிகளைச் செய்யவும்.
மார்பகங்களில் வலியைக் குறைக்க, வெப்ப ஒற்றடம் கொடுக்கலாம் அல்லது வெந்நீரில் குளிக்கலாம்.
இது புற்றுநோயின் அறிகுறியா? (Is it a sign of cancer?)

மார்பக வலி என்பது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று பல பெண்கள் கவலைப்படுகிறார்கள். மார்பகத்தில் ஏற்படும் வலியானது புற்றுநோயின் அடையாளம் அல்ல. மேலும் மார்பகத்தில் வலி இருந்தால் மார்பகப் புற்றுநோய்க்கான அபாயம் அதிகரிக்கும் என்பதும் உண்மையல்ல. மார்பகங்களில் ஏதேனும் கட்டி போன்று உள்ளதா, வீக்கம் உள்ளதா என்று நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

உங்கள் மார்பகங்களில் பின்வருபவை போன்ற ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் கவனித்தால், உங்கள் மருத்துவரிடம் செல்லவும்:

மார்பகத்தில் கட்டி போன்று வருதல்
காம்பிலிருந்து திரவம் கசிதல்
நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர், மற்றும் மம்மோகிராம் சோதனை செய்துகொள்ளாதவர் என்றால்..
உங்கள் அறிகுறிகள் தூக்கத்திற்குத் தொந்தரவை ஏற்படுத்தினால், மருந்துகள்/உணவுப் பழக்க மாற்றம்/உடற்பயிற்சி போன்றவற்றாலும் பயனில்லை என்றால்..
மம்மோகிராம் சோதனை அல்லது மார்பக அல்ட்ராசவுண்ட் சோதனை செய்துகொள்ளுமாறு உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்

மொத்தத்தில், மார்பகத்தில் வலி என்பது மாதவிடாய்க்கு சில நாட்களுக்கு முன்பு ஏற்படும் சாதாரண ஒரு அறிகுறியாகும். அதைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. எளிய தீர்வுகளை முயற்சித்தால் போதும். அவற்றால் நிவாரணம் கிடைக்காவிட்டால், தாமதிக்காமல் உங்கள் மருத்துவரைச் சந்திக்கவும்.