பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடுவது அல்லது மாதவிடாய் வராமல் இருப்பதை மாதவிடாயின்மை (அமினோரியா) என்கிறோம். 15 வயதிற்குள் ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிடாய் தொடங்காவிட்டால், அதனை முதல் நிலை மாதவிடாயின்மை என்கிறோம். ஒரு பெண்ணுக்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து மாதவிடாய் வராமல் இருந்தால் அதனை இரண்டாம் நிலை மாதவிடாயின்மை என்கிறோம்.
காரணங்கள் (Causes)
முதல் நிலை மாதவிடாயின்மைக்கான காரணங்கள் (Causes of Primary amenorrhea)
கருப்பை, பிறப்புறுப்பின் கட்டமைப்பில் பிறழ்வு அல்லது கருவில் குழந்தை வளரும்போது இனப்பெருக்க உறுப்புகள் முழுமையாக வளராமல் போவது போன்ற காரணங்களால் மாதவிடாயின்மை ஏற்படலாம்.
பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் ஆகிய சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்களில் பிரச்சனைகள்.
பெரும்பாலும், முதல் நிலை மாதவிடாயின்மைக்கான காரணம் தெரிவதில்லை.
இரண்டாம் நிலை மாதவிடாயின்மை ஏற்படுவதற்கான காரணங்கள் (Causes of Secondary Amenorrhea)
கர்ப்பம், தாய்ப்பாலூட்டுதல் அல்லது மாதவிடாய் முற்றிலும் நிற்பது போன்ற இயற்கையான காரணங்களால் ஒரு பெண்ணுக்கு மாதவிடாயின்மை ஏற்படக்கூடும்.
ஆன்டிடிப்ரசன்ட் மருந்துகள், ஆன்டிசைக்காட்டிக் மருந்துகள் போன்ற சில மருந்துகளாலும் மாதவிடாய் நின்றுபோகக்கூடும்.
கருத்தடை மாத்திரைகளும் மாதவிடாயை நிறுத்தக்கூடும்.
வாழ்க்கை முறை சார்ந்த காரணிகள்:
குறைந்த உடல் எடை: சராசரியைவிட 10% குறைந்த உடல் எடையும் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் குறுக்கிடக்கூடும்.
மன அழுத்தம்: மன அழுத்தம் ஹைப்போதலாமஸின் செயல்பாட்டை மாற்றுகிறது, இதனால் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சீர்குலைவுகள் உண்டாகி அதனாலும் மாதவிடாய் நிற்கலாம்.
அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி: கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டு போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு அதீதப் பயிற்சியால் மாதவிடாயின்மை ஏற்படக்கூடும்.
ஹார்மோன் மாற்றங்கள்: ஹார்மோன் மாற்றங்கள் பின்வரும் காரணங்களால் ஏற்படலாம்:
சினைப்பை நீர்க்கட்டிகள் நோய்க்குறித் தொகுப்பு (Polycystic ovary syndrome): இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஹார்மோன் அளவு அதிகமாக இருப்பதால் அமினோரியா ஏற்படுகிறது.
தைராய்டு பிரச்சனைகள்: தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலை செய்வது அல்லது குறைவாக வேலை செய்வதால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படலாம்.
முன்கூட்டியே மாதவிடாய் முற்றிலுமாக நிற்பது: குறைந்த வயதில் சினைப்பை செயலிழத்தல் போன்ற சினைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக, சிலருக்கு 40 வயதிலேயே மாதவிடாய் முற்றிலுமாக நின்றுவிடலாம்.
பிட்யூட்டரி சுரப்பி பிரச்சனைகள்: பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி இருப்பதால் ஹார்மோன் சமநிலையில் சீர்குலைவு ஏற்படக்கூடும்.
ஆபத்துக் காரணிகள் (Risk factors)
உணவு சம்பந்தப்பட்ட கோளாறுகள்: பசியின்மை (அனொரெக்ஸியா) அல்லது அதிகமாக உண்டு வாந்தி வரவழைத்தல் (புலிமியா) போன்ற காரணங்கள் அமினோரியா உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
குடும்ப வரலாறு: ஒரு குடும்பத்தில் பிறருக்கு இந்தப் பிரச்சனை இருந்தால், மற்றவர்க்கும் வரக்கூடும்.
கடுமையான உடற்பயிற்சிகள்: கடுமையான உடல் உழைப்பு செயல்பாடுகளால் மாதவிடாயின்மை ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். .
அறிகுறிகள் (Symptoms)
மாதவிடாய் இல்லாமல் போவதே இதன் முக்கிய அறிகுறியாகும்.
நோய் கண்டறிதல் (Diagnosis)
இனப்பெருக்க உறுப்புகளில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா எனக் கண்டறிய, மருத்துவர் உடல் பரிசோதனை செய்வார்.
பின்வரும் இரத்தப் பரிசோதனைகளும் செய்யப்படலாம்:
சினைப்பை செயல்பாட்டுக்கான சோதனை: உடலில் உள்ள ஃபாலிக்கில்களைத் தூண்டும் ஹார்மோனின் அளவைக் கண்டறிவதற்கு.
தைராய்டு செயல்பாடு சோதனை: தைராய்டு ஹார்மோன்களின் அளவைக் கண்டறிவதற்கு.
கர்ப்பப் பரிசோதனை: மாதவிடாயின்மைக்கான பொதுவான காரணம் கர்ப்பம் ஆகும். ஆகவே கர்ப்பப் பரிசோதனையும் செய்யப்படும்.
புரோலாக்டின் சோதனை: புரோலாக்டின் குறைவாக இருப்பது, பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி இருப்பதைக் குறிக்கலாம்.
ஆண் ஹார்மோன் சோதனை: உடலில் உள்ள ஆண் ஹார்மோன் அளவைக் கண்டறிவதற்கு.
பின்வருபவை போன்ற படமெடுத்தல் சோதனைகளையும் மருத்துவர் பரிந்துரைக்கலாம்:
CT ஸ்கேன் (கணினிமூலம் படமெடுத்தல்): CT ஸ்கேன் மூலம் உட்புற உறுப்புகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் படமெடுத்துப் பார்க்க முடியும்.
அல்ட்ராசவுண்ட் சோதனை: கருப்பை மற்றும் சினைப்பைகளின் கட்டமைப்பு அல்லது உட்புற பாலியல் உறுப்புகளில் இருக்கக்கூடிய ஏதேனும் வழக்கத்திற்கு மாறான தன்மைகள் போன்றவற்றை இந்த சோதனை மூலம் கண்டறியலாம். இதில் ஒலி அலைகள் செலுத்தப்பட்டு அதைக் கொண்டு உள்ளுறுப்புகள் படமெடுக்கப்படும்.
MRI மேக்னடிக் ரெசனன்ஸ் இமேஜிங்: பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி இருக்கிறதா என்று கண்டறிவதற்கு MRI சோதனை செய்யவும் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
ஹிஸ்டெரோஸ்கோபி: மாதவிடாயின்மைக்கு என்ன காரணம் என்பதை பிற சோதனைகளால் நிச்சயமாகக் கண்டறிய முடியாவிட்டால், இந்த சோதனை செய்யப்படும். இதில் ஒரு மெல்லிய கேமராவை பிறப்புறுப்பின் வழியாக கருப்பைக்குள் செலுத்தி, கருப்பையின் உட்புறப் பகுதி படம்பிடித்து சோதிக்கப்படும்.
சிகிச்சை (Treatment)
மாதவிடாயின்மைக்கான சிகிச்சை பெரும்பாலும் அதற்கான அடிப்படைக் காரணத்தைச் சார்ந்து அமையும். பெரும்பாலும், மாதவிடாய் சுழற்சியை சீராக்க, ஹார்மோன் சிகிச்சை அல்லது கருத்தடை மாத்திரைகள் கொடுக்கப்படும். தைராய்டு அல்லது பிட்யூட்டரி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், அந்தந்தப் பிரச்சனைகளுக்கு என்று தனித்தனி மருந்துகள் கொடுக்கப்படலாம். கட்டமைப்பில் ஏதேனும் அடைப்பு போன்று இருந்தால் அல்லது கட்டி இருந்தால், அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் பரிந்துரைக்கப்படலாம். ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட அறிவுரைகளும் பரிந்துரைக்கப்படும்.
சிக்கல்கள் (Complications)
குழந்தையின்மை: அண்டவிடுப்பு நிகழாமல் இருப்பதால் குழந்தையின்மைப் பிரச்சனை இருக்கலாம்.
ஆஸ்டியோபோரோசிஸ்: ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பது பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை உண்டாகும் அபாயத்தை அதிகரிக்கும்.
எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும்? (When to see a doctor?)
பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்:
உங்கள் வயது 15 அல்லது அதற்கு அதிகம் இருந்து, இதுவரை மாதவிடாய் தொடங்காவிட்டால் மருத்துவரிடம் செல்லவும்.
மாதவிடாய் தவறி, நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகித்தால் மருத்துவரிடம் செல்லவும்.
தொடர்ச்சியாக குறைந்தபட்சம் மாதவிடாய் வராமல் இருந்தால் மருத்துவரிடம் செல்லவும்.