Home குழந்தை நலம் மனச்சோர்வுக்கு ஆளாகும் குழந்தைகள்

மனச்சோர்வுக்கு ஆளாகும் குழந்தைகள்

26

மனச்சோர்வு மனநலனை பாதிக்கும். எப்போதும் எரிச்சலான மனநிலையில் இருப்பவர்கள் எளிதில் மனச்சோர்வுக்கு ஆளாகிவிடுகிறார்கள். தூக்கமின்மையால் அவதிப்படுவது அல்லது அதிக நேரம் தூங்குவது, அதிகமாக பசி எடுப்பது அல்லது பசியின்மை, எடை கூடுவது அல்லது எடை குறைவது போன்ற எதிர்மறையான விஷயங்கள் மனச்சோர்வின் அறிகுறிகளாகும்.

கவனச்சிதறல், ஞாபக மறதி, குற்ற உணர்வுடன் இருப்பது, எந்த விஷயத்திலும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவது, நெருங்கிய நண்பர்களிடம் கூட பேசுவதை தவிர்ப்பது போன்றவைகளும் மனச்சோர்வின் அறிகுறிகள்தான்.

மிதமானது, நடுத்தரமானது, கடுமையானது என மனச்சோர்வு மூன்று வகைப்படும். டீன் ஏஜ் பருவத்தினர் மனச்சோர்வு பாதிப்புக்கு அதிகம் ஆளாவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடுமையான மனச்சோர்வுக்கு ஆளாகிறவர்களிடம் தற்கொலை எண்ணம் தலைதூக்கும். போதை மருந்து, மது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாவார்கள். குடும்பத்தினர், நண்பர்களிடம் இருந்து விலகத் தொடங்கிவிடுவார்கள்.

குழந்தைகளும் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். பெற்றோரின் அரவணைப்பின்றி வளரும் குழந்தைகள், பெற்றோரை இழந்து வாடுபவர்கள், வீட்டில் சண்டை சச்சரவுகளுக்கு இடையே வளரும் குழந்தைகள் மனச்சோர்வு பாதிப்புக்கு ஆளாகிவிடுகிறார்கள். அதற்கு காரணம், தங்களின் மன உணர்வுகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். அந்த குறைபாட்டை களைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களிடையே தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும். அவர்கள் மனம் விட்டு பேச தொடங்கி விட்டாலே மனச்சோர்வை போக்கிவிடலாம். அத்துடன் மனநல ஆலோசனைகள் இயல்பு நிலைக்கு கொண்டு வர கைகொடுக்கும்.