Home பாலியல் மணப் பெண்னே..!! குடும்ப வாழ்க்கைகான அறிவுரை..!!

மணப் பெண்னே..!! குடும்ப வாழ்க்கைகான அறிவுரை..!!

22

பல துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கும் பெண்கள், அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் மட்டும் சோதனைகளை வெல்ல முடியாமல் துவண்டு போகிறார்கள்.

எல்லாப் பெண்களின் குடும்பச் சூழலும் ஒரே மாதிரி அமைவதில்லை. வெவ்வேறு சூழலில் வளர்ந்த பெண்கள் ஒரு புதிய சூழலுக்கு தள்ளப்படும்போது சற்று திகைத்துப் போகி றார்கள். புது மனிதர்கள், புது உறவுகள், புதிய வழக்கங்கள் என்று எல்லாம் புதிதாக உருவெடுக்கும்போது அவளும் புதிதாக மாற முயற்சிக்கிறாள்.

சில குடும்பங்களில் அதற்கான அவகாசம் கூட அளிக்கப்படுவதில்லை. திருமண உறவு அவள் மீது திணிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம். இந்நிலையில் சோர்வடையும் பெண் இதிலிருந்து மீள முயலும் போது பல்வேறு பிரச்சினைக்கு ஆளாகிறாள். இதனால் மனநலமும், உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. இது குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கும்.

மணப் பெண் புதிய உறவுகளை அன்பால் வெல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். பொறுமையின் சிகரங்களாக இருந்த பெண்களை இன்று குமுறும் எரிமலை களாக மாற்றிவிட்டது இன்றைய வாழ்க்கை சூழல். அவர்களுடைய கல்வி அவர்களுக்கு சம்பாதிக்க கற்றுக் கொடுத்ததே தவிர, மணவாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள கற்றுத் தரவில்லை.

வெளியுலக பிரச்சினைகளை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொண்டு ஜெயிக்கலாம். ஆனால் குடும்ப வாழ்க்கை என்று வரும்போது பொறுமையாகத்தான் எதையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த பொறுமை பிந்தைய நாட்களில் நிச்சயம் பல நன்மைகளை ஏற்படுத்தித் தரும். பொறுமை ஏமாளித்தனமோ, கோழைத்தனமோ அல்ல. பொறுத்தவர் பூமியாள்வார் என்பது உண்மை.

ஒரு பெண் தன் நேசத்தால் புதிய உறவுகளை அணுக வேண்டும். புதிய உறவுகள் உங்களை புரிந்து ஏற்றுக்கொள்ளும் வரை அமைதி காக்க வேண்டும். இது நல்ல குடும்ப வாழ்க்கைக்கான அஸ்திவாரமாக அமையும்.

 

உறவுகள் ஒருவேளை தவறாக புரிந்து கொண்டு செயல்படத் துவங்கினால் தவறுகளை புரிய வைக்க பொறுமை ஒன்று தான் துணை. ஆத்திரமான பேச்சுக்கள், கோபம், தாபம் எல்லாம் குடும்பத்தை சீர்குலைக்கவே உதவும். என் தகுதிக்கு எனக்கு புத்தி சொல்ல இவர்கள் யார்? என்ற அகங்காரம் தலைதூக்கினால் ஆபத்து. அதனால் ஒட்டுமொத்த உறவுகளும் போகப்போக உங்களுக்கு தூரமாகி விடும் அபாயம் உண்டு.

அன்பு என்பது ஒருவரின் இதயத்தை பிரகாசமாக்கும். அந்த பிரகாசம் உங்கள் வாழ்க்கை யில் பிரதிபலிக்கும். முகத்துக்கு நேராக நடக்கும் சச்சரவுகளுக்கு உங்கள் அமைதியையே பங்களிப்பாக கொடுத்துப் பாருங்கள். உங்களை எதிர்த்தவர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அந்த சிந்தனையே உங்களைப் பற்றிய பல உண்மைகளை புலப்படுத்தும்.

பல பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் அன்பிற்கு இருக்கிறது. அதன் வல்லமையை நீங்கள் உணர்ந்து மற்றவர்களுக்கு புரிய வையுங்கள். அன்பு என்ற பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்படாத மனிதர்களே இருக்க முடியாது.

குடும்ப வாழ்வின் வெற்றி என்பதே – புதிய உறவுகளின் மனநிறைவில் தான் அடங்கி யிருக்கிறது. திருமணம் என்பது ஒருநாள் விழா. அதன் பிறகு வாழும் வாழ்க்கையில்தான் ஒரு பெண்ணின் பெருமை அடங்கி இருக்கிறது. வாழ்க்கையை அழகாக வடிவமைக்க அன்பை விட சிறந்த சாதனம் எதுவும் இல்லை. குடும்ப வாழ்க்கையை வடிவமைப்பதில் பெண்களுக்குத்தான் பெரும் பங்கு இருக்கிறது.

ஆண்களுக்கு சரிநிகர் சமானம் என்பதில் பெருமிதம் கொள்ளும் பெண்கள், ஏனோ குடும்ப வாழ்க்கையை மட்டும் கோட்டை விட்டு விடுகிறார்கள். அந்த காலத்தில் கல்வி யறிவு இல்லாத பெண்கள் சாதித்ததைக் கூட இந்த கால படித்த பெண்களால் சாதிக்க முடிவதில்லை.

புதிய உறவுகளை அவர்களுடைய பேச்சு நடவடிக்கைகள் மூலம் மனதில் உள்ளதை புரிந்து கொள்ள முற்படுங்கள். எந்தப் பிரச்சினையை எப்படி அணுகினால் தீர்வு கிடைக் கும் என்று யோசித்து செயல்படுங்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங் கள். கூடுமானவரை ஒருவரைப் பற்றி மற்றவரிடம் பேசாதீர்கள். யாரையும் குறை கூறிப் பழக்கப்படாதீர்கள். உங்கள் குறை நிறைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களைப்பற்றின தவறான அபிப்ராயங்களை தவிர்க்கும். உங்கள் கடமைகளை உணர்ந்து செய்யுங்கள். அது மற்றவர்கள் முன் உங்களை உயர்த்திக்காட்டும். யாரைப் பற்றியும் முதுகுக்குப்பின்னால் பேசாதீர்கள்.

மற்றவர்களுடைய பலவீனங்களை புரிந்து கொள்ளுங்கள். அதேநேரம் எந்த சந்தர்ப்பத் திலும் அதை சுட்டிக்காட்டி மனதை புண்படுத்தாதீர்கள். மற்றவர்கள் அன்பை வெளிப்படுத் தாத போதும் அதை நீங்கள் வெளிப்படுத்துங்கள். நியாயமான காரணங்களுக்காக நீங்கள் கோபப்படுவதாக இருந்தாலும் அதை அளவோடு நிறுத்திக் கொண்டு, உங்கள் பக்க நியாயத்தை பொறுமையாக வெளிப்படுத்துங்கள்.

விஷயம் எதுவாக இருந்தாலும் பொறுமையை கடைபிடியுங்கள். பொறுமை மட்டுமே உங்களை சிந்திக்க வைக்கும். அன்பு உங்களை சுற்றியுள்ள உறவுகளை பலப்படுத்தும். அதுவே உங்கள் குடும்ப வாழ்க்கையை வளப்படுத்தும்.

அன்பால் உலகையே வென்றிருக்கிறார் புத்தர். உங்கள் இனிய குடும்பத்தை அன்பால் வெல்ல உங்களால் முடியாதா? முயற்சி செய்யுங்கள் பெண்களே. இதை ஒரு சவாலாக ஏற்று செயல்படுங்கள். அன்பு வெற்றி பெற்றால் வாழ்க்கை வசப்படும்.