நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை. மஞ்சள் பூசிய முகத்திற்கு முன்பெல்லாம் அதிக மவுசு உண்டு. இப்போது கிராமப் பெண்கள் தான் மஞ்சள் பூசுகின்றனர்; அதுவும் ஒரு சிலரே.
இந்திய கலாசாரத்தில் மஞ்சளின் முக்கியத்துவம்: இந்து கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது.
ஆனால், “ஆண்கள் மஞ்சள் பயன்படுத்துவதில்லை. ஏன்? ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவசியமில்லை’ என்று, ஜகதீச அய்யர் என்பவர், இந்தியர்களின் கலாசாரம் குறித்த தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.
பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி, பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்’ பூசப்படுகிறது.
சமையலில் மஞ்சளின் பயன்பாடு:
இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இது இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது.
அழகு சாதனமாக பயன்படும் மஞ்சள்:
வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர். இது முகத் தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்’சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சளின் மருத்துவ குணம்:
* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.
* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.
* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.
* உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.
* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.
* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.