நான் 26 வயதுப் பெண். திருமணமாகி 7 மாதங்கள் ஆகின்றன. எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் – புகைபிடிப்பது. தோழிகளிடையே சும்மா ஒரு நாள் ஜாலிக்காக புகைபிடிக்க ஆரம்பித்து பின் அதுவே பழக்கமாகிவிட்டது. ஆனால் புகை பிடிக்காமல் இருந்தால் கைகால் நடுக்கம் உண்டாகிறது.
ஏதோ ஓர் உணர்வு என்னை புகை பிடி பிடி என்று துரத்துகிறது. நானும் எவ்வளவோ கன்ட்ரோல் பண்ணிவிட்டேன். என் பழக்கத்தை விட முடியவில்லை. இப்படியே புகைபிடித்தால் கர்ப்பம் தரிக்காமல் போய்விடுமோ, குழந்தைக்கு ஏதாவது ஆபத்து ஆகிவிடுமோ என்று தினம் தினம் கவலைப்படுகிறேன். நான் என்ன செய்ய?
புகையிலையில் நிகோட்டின் என்கிற போதை ரசாயனம் இருக்கிறது. ஆரம்பத்தில் வேளை தவறாமல் நிகோடின் ஊறிப் பழகிய உங்கள் மூளை, கைநடுக்கம், மனப்பதற்றம், பரபரப்பு, புகை வேண்டும் என்ற போராட்டம் என்று என்னதான் அடம்பிடித்தாலும், “நிச்சயம் நோ நிகோடின்“ என்று நீங்கள் வைராக்கியமாக இருந்தால், அதற்கும் பழகிக்கொண்டு வாலைச் சுருட்டிக் கொண்டுவிடும்.
சிகரெட் புகை உங்கள் உடம்பில் எந்த உறுப்பையும் விட்டு வைக்காமல் எல்லாத் திசுக்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொசுக்கிவிடும். அதிலும் குறிப்பாக இனப்பெருக்கத் திசுக்களை. உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மூளை சிறுத்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் நீங்கள் கவலலைப்பட வேண்டாம். உங்கள் குழந்தைக்கு அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. நீங்கள்தான் சிகரெட் பழக்கத்தை விட்டுவிடப் போகிறீர்களே, உடனே!
எதற்கும் உங்கள் ஏரியா மனநல மருத்துவரைப் போய்ப் பாருங்கள். நிகோடின் அடிமைத்தனத்தை விட்டொழிக்கும் சிகிச்சையைப் பெறுங்கள். அப்புறம் பாருங்களேன் புகையைப் பகை மாதிரி ஒதுக்குவீர்கள். ஆல் தி பெஸ்ட்.