Home குழந்தை நலம் பெண் குழந்தைகளும் சாதிக்க பிறந்தவர்களே

பெண் குழந்தைகளும் சாதிக்க பிறந்தவர்களே

52

kinder-386x375அண்ணே, இப்பதான் பதினைந்து வயது ஆவுது. அதற்குள் என்ன அவசரம்? இன்னும் ரெண்டு வருஷம் ஆகட்டுமே…?
அட, நீ ஒண்ணு, காலம் கெட்டு கெடக்கு! பொம்பள புள்ளையை காலா காலத்துல தள்ளி விட்டுடணும். காலத்தை தள்ளிகிட்டே போய் ஏடா கூடமா ஏதாச்சும் ஆயிட்டா… நல்லா யோசிச்சு சீக்கிரமாக கல்யாணம் பண்ணி கொடுக்கிற வழியப் பாரு….!

– கிராமங்களில் நண்பர்கள் சந்தித்து கொள்ளும்போது இப்படிப்பட்ட உரையாடல்களை அதிகம் கேட்கலாம்.

ஒரு காலத்தில் பெண்களை வெளியே அனுப்புவதே இல்லை. வீட்டுக்குள் பூட்டி வைத்துதான் வளர்த்தார்கள்.

இப்போது காலம் மாறி விட்டது. ஆண்களுக்கு நிகராக எல்லா துறைகளிலும் பெண்களும் சாதிக்கிறார்கள். சமையல் கட்டே கதி என்று கிடந்தவர்கள் இன்று சரித்திரம் படைக்கிறார்கள்.

சமூக கட்டுப்பாடுகளை உடைத்து பெண்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். படிப்பில் ஆண்களை விட பெண்களே அதிகம் சாதிக்கிறார்கள் என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படி இருந்தும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கிறது என்பது மிகப்பெரிய சமூக அவலம். நாகரீக சமுதாயத்தின் மீது விழும் கரும்புள்ளிகள்.

சமீப காலமாக பெண் குழந்தைகளின் கல்வி மீது காட்டும் அக்கறையை விட அவர்களை சீக்கிரமாக கல்யாணம் செய்து கொடுப்பதிலேயே பெற்றோர்கள் அக்கறை காட்டுகிறார்கள். திருமண வயதை எட்ட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு கிடையாது.

அதன் காரணமாக சிறுமியர்கள் திருமணம் அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 378 சிறுமியர் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதே போல்தான் மற்ற மாவட்டங்களிலும் திருமண வயதை அடைவதற்குள் பெண்களின் திருமணம் குடும்பத்தினரின் ஆசியோடு கோலாகலமாக நடந்தேறி வருகிறது.

இவை அதிகாரிகளின் கவனத்துக்கு வருவதில்லை. இப்படிப்பட்ட திருமணங்களால் கணவன் – மனைவிக்கு இடையே புரிதல் இல்லாமல் விவாகரத்து, பிரசவ காலங்களில் உயிரிழப்பு போன்றவை அதிக அளவில் நடப்பதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் அதைப் பற்றிய கவலை பெற்றோரிடம் இல்லை. கூடிய சீக்கிரம் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் அவர்களுக்கு!

ஏன் இந்த அவசரம்….?

சமுதாய சூழல்தான் காரணம். பருவ வயதில் வரும் இனக் கவர்ச்சியை ‘காதல்’ என்று மோகம் கொண்டு தடுமாறி தடம் மாறி விடுகிறார்கள். இது பெண் பிள்ளைகளை வைத்து இருக்கும் பெற்றோர் மனதில் நெருஞ்சிமுள்ளாக குத்துகிறது.

நம் பிள்ளையும் காதல் கீதல் என்று எதிலும் சிக்கி விட கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வுதான் சீக்கிரம் திருமணம் என்ற முடிவுக்கு தள்ளுகிறது.

சென்னையில் கூட கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் பலர் திருமணம் ஆனவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் குடும்ப வாழ்விலும் ஈடுபாடு இல்லாமல் அவஸ்தை படுகிறார்கள். அவர்களின் திறமைகள் மழுங்கடிக்கப்படுகிறது.

பெண்ணடிமைக்கு எதிராக சில அடிகள் முன்னுக்கு வந்த பிறகு பல அடிகள் பின்னோக்கி செல்வது மிகப்பெரிய அபத்தம். மீண்டும் கற்காலத்தை நோக்கிய பயணம் தேவையா?

நமது பயணம் முன்னோக்கியே இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஆணோ – பெண்ணோ தடம் மாறும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்க கூடாது.

பெற்றோர்களும் காலத்துக்கு ஏற்ப குழந்தைகள் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை என்றால் என்ன? என்பதை புரிய வைக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு பாதுகாப்பு என்ற பெயரில் திருமணம் செய்து வைப்பதில் அவசரம் காட்டி, பெண்களின் உயர்வுக்கு பெற்றோரே தடைக் கற்களாக இருக்க கூடாது.

சமூக சீரழிவுகள், கலாச்சார சிதைவுகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இருக்கத்தான் செய்யும். இன்று கொஞ்சம் அதிகமாக இருக்கலாம். அதற்கும் காரணம் நாம்தான்.

கொசுவுக்கு பயந்து யாரும் வீட்டை விட்டு ஓடுவதில்லை. அதே போல்தான் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்காக பிள்ளைகளின் வளர்ச்சியை பெற்றோரே சீரழித்து விட கூடாது. பெண் பிள்ளைகளும் சாதிக்க பிறந்தவர்கள்தான்.