பெண்ணியம்! இந்த வார்த்தையை பிரயோகப்படுத்தினாலே அங்கு கண்டிப்பாக ஓர் பூகம்பம் வெடிக்கும். ஏனெனில், நமது ஊர்களில் பெண்ணியவாதிகள் என்ற பெயரில் பலர் முகநூலில் லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக போஸ்ட் போடுபவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். முதலில் பெண்ணியம் என்றால் என்ன?
தங்கள் சுதந்திரத்தை யாரிடமும் அடமானம் வைக்காமல். தாங்களே சொந்தமாக வைத்துக் கொள்வது தான். “ஆணியம்” என்ற தேவையில்லாத ஆணியை நாம் எங்கும் கண்டதில்லை, ஏன் என்றால் ஆண்கள் அவர்களது சுதந்திரத்தை அவர்கள் பாக்கெட்டில் வைத்திருக்கிறார்கள். அதே போல தான் பெண்ணியமும், அவர்களது சுதந்திரத்தை அவர்கள் கையில் ஒப்படைத்துவிட்டாலே போதுமானது.
ஆண்கள் செய்வதை நாங்களும் செய்வோம் என்பதோ, ஆண்கள் என்றாலே அலர்ஜி என்பதோ மிகையாக வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிவச செயல்பாடுகள். பெண்ணியம் பேசுபவர்கள் தனியாக தான் இருக்க வேண்டும், திருமணம் செய்துக்கொள்ள கூடாது என்பதெல்லாம் நாமாக பூசிக்கொண்ட அரிதாரம்.
தவறான கருத்து #1
பெண்ணியம் என்பது ஆண் போன்று நடந்துக் கொள்வதல்ல. ஆணும், பெண்ணும், பெண்ணை பெண்ணாக, சமூகத்தில் சமமாக மதிக்கவும், நடக்கவும் வழிவகுப்பது.
தவறான கருத்து #2
பெண்ணியம் என்பது ஆண்களை வெறுப்பது அல்ல. பெண்மையை கொச்சைப்படுத்துபவர்களை வெறுப்பது.
தவறான கருத்து #3
பெண்ணியம் என்பது குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்ப்பது அல்ல. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வேறுபடுத்தி காணாமல், சமமாக நடத்த வேண்டும். இரண்டுமே உயிர் தான் என்ற எண்ணம் கொள்வது.
தவறான கருத்து #4
பெண்ணியம் என்பது திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பதல்ல. பெண்மையை மதிக்க தெரிந்தவர்களை திருமணம் செய்துக் கொள்தல்.
தவறான கருத்து #5
பெண்ணியம் என்பது ஆண்களைவிட அதிக அதிகாரம், ஆதிக்கம் செலுத்துவது அல்ல. ஆண்களுக்கு நிகராக வாழ வேண்டும் என்ற கொள்கை கொண்டிருத்தல்.
தவறான கருத்து #6
பெண்ணியம் என்பது குடும்பத்தின் மீது அக்கறை இல்லாமல் / தனித்து இருப்பதல்ல. குடும்பத்தில் அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டு, அனைவரையும் ஒரே மாதிரி நேசிப்பது.
தவறான கருத்து #7
பெண்ணியம் என்பது ஆண்களின் கொள்கைகளை எதிர்ப்பது அல்ல. அவர்கள் செய்யும் தவறுகளை எதிர்த்து, எடுத்துரைப்பது. பெண்ணியம் என்பது, ஆண்கள் செய்யும் தவறுகளில் பங்கெடுத்துக் கொள்வதல்ல. அதை தட்டிக்கேட்பது.
தவறான கருத்து #8
பெண்ணியம் என்பது பெண்கள் மட்டுமே பேச வேண்டும், போராட வேண்டும் என்றில்லை. ஆண்களும் பெண்ணியம் ஆதரிப்பவர்களாக இருக்கலாம்.
தவறான கருத்து #9
பெண்ணியம் என்பது ஆண்கள் செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுவதல்ல, சமூகத்தில் பெண்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டுவது.
தவறான கருத்து #10
பெண்ணியம் பேசுபவர்கள் எப்போதும் கடுகடுவென என தான் இருப்பார்கள் என்றில்லை. பெண்ணியம் பேசுபவர்களுக்கும் அனைத்து உணர்ச்சிகளும் இருக்கும். முதலில் பெண்ணியவாதிகளை ஏதோ எலியனை போல பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.