பெண்கள் பூப்படையும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டே செல்கின்றது என்றும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் பொதுவாக 10 வயதுக்குள் பூப்படைந்து விடுவார்கள் என்று டென்மார்க்கில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வருகிறது.
இன்னும் 20 ஆண்டுகளில் இந்நிலை நிச்சயம் ஏற்பட்டு விடும் என்று அந்த ஆய்வு அடித்துக் கூறுகின்றது. சிறுமிகளின் மார்பக வளர்ச்சி 9 வயது 10மாதங்களில் தற்போது ஆரம்பமாகி விடுகிறது என்றும் 1991 களில் சிறுமிகளின் மார்பக வளர்ச்சி 10 வயது 10 மாதங்களில் இடம்பெற்றிருக்கின்றது என்றும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
இந்நிலையில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் 10 வயதுக்குள்ளாகவே பாலியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது என்று ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். சின்ன வயதில் பூப்படைகின்றமை புற்று நோய் ஏற்படக் காரணம் ஆகி விடும் என்றும் அவர்கள் கூறி உள்ளார்கள்.
அத்துடன் இதயம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் காரணமாகக் கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சின்ன வயதில் அவர்கள் பருவம் அடைகின்றமை கட்டிளம் பருவக் காலப் பிரச்சினைகளை முன்கூட்டியே அவர்கள் எதிர்கொள்கின்ற நிலையை ஏற்படுத்தி விடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
உணவில் கலந்திருக்கும் இரசாயனப் பொருட்களின் தாக்கத்தாலேயே பெண்கள் பூப்படையும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டு செல்கின்றது என்று ஆய்வில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் அதிக அளவில் சாப்பிடுகின்றமையும் இதற்கு இன்னொரு காரணம் ஆக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.