அழகுக்காகவும் ஸ்டைலுக்காகவும் பெண்கள் பயன்படுத்தும் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அவர்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப கால முதுகுவலி முதல் ஆளையே முடக்கிப் போடும் மூட்டுவலி வரை வருவதற்கு ஹீல்ஸ் காலணிகள் காரணமாக அமைகின்றன.
ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும் போது முதுகில் ஏற்படும் ஒருவித வளைவால் முன்பக்கமும் பின்பக்கமும் பெண்களுக்கு அழகாகத் தெரியும். இதனாலேயே நடிகைகள் அதிகமாக இதனை பயன்படுத்துகின்றனர்.
‘‘நீண்ட காலமாக ஹை ஹீல்ஸ் பயன்படுத்தி வருபவர்களுக்கு பாதத்துக்கு மேல் உள்ள கரண்டைக்கால் தசைகள் பாதிப்படையும். ‘Calf Muscles’ என்று இதனை குறிப்பிடுவோம். இதில் இறுக்கம் உருவாகி வலி அதிகரிக்க ஆரம்பிக்கும். இந்தப் பிரச்சனைக்கு ‘அச்சிலஸ் டெண்டினைடிஸ்’ என்று பெயர். ‘ப்ளான்டர் ஃபேசியா’ எனப்படும் தசைநார்தான் கணுக்கால் எலும்பில் இருந்து கால்விரல்கள் வரை இருக்கிறது. இது ஹை ஹீல்ஸ் அணிவதால் தடிமனாகி பாதத்தில் வலி ஏற்பட காரணமாக அமைகிறது.
பாதத்தில் உள்ள கால்கேனியல் எலும்பில் தேய்மானத்தை ஏற்படுத்தி ‘கான்கேனியல் ஸ்பர்’ என்னும் பிரச்சனை வரக் காரணமாகிறது. மேற்சொன்ன இரண்டு பிரச்னைகளிலும் அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்து முதல் அடி வைக்கும்போது மிக அதிகமாக இருக்கும். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். கவனிக்காது விட்டாலோ, நாட்கள் செல்லச் செல்ல நாள் முழுவதும் வலி துன்பம் தரக் கூடும்.
ஹை ஹீல்ஸ் அணிந்தால் வேகமாக நடக்கவோ, ஓடவோ முடியாது. மெதுவாகத்தான் நடக்க முடியும். இதனால் மனரீதியாகவே சுறுசுறுப்பு பாதிக்கப்படும். விரல்களை மூடியபடி பாக்ஸ் போன்ற தோற்றத்தில் சில ஹை ஹீல்ஸ் காலணிகளை வடிவமைத்து இருப்பார்கள். இதைத் தொடர்ந்து அணிவதால் பெருவிரலில் அழுத்தம் அதிகமாகி ‘ஹெலஸ் வால்கஸ்’ என்னும் உறுப்புக் குறைபாட்டை உருவாக்கும். பெருவிரலானது மற்ற விரல்களை நோக்கி வளைந்து விடும்.
ஹை ஹீல்ஸ் அணிவதால் நடையில் ஏற்படும் மாற்றத்தால் மூட்டுகளில் அதிக அழுத்தம் உருவாகி தேய்மானத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் என்னும் மூட்டு எலும்பு தேய்மான நோய் எளிதாக வருவதற்கு வழிவகுக்கிறது.
ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பதால் முதுகு தண்டுவட எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். தண்டுவட எலும்புகளில் உள்ள அனுலார் சவ்வு கிழிபட்டு முதுகு வலி பிரச்சனையை ஏற்படுத்தும். இப்போது பதின்ம வயது பருவப்பெண்களும் ஹை ஹீல்ஸ் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இப்பழக்கம் அவர்களின் எலும்புகளின் வளர்ச்சியை பாதித்து, இளம் வயதிலேயே கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். இவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்தும் ஹை ஹீல்ஸ் தேவையா என்று இளம்பெண்கள் யோசிக்க வேண்டும்..