இரண்டாவது திருமண முடிவு ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல. முதல் திருமணத்தில் ஏற்பட்ட துயரம் மனதில் சுழன்றுக் கொண்டிருக்கும்போது இரண்டாவது திருமணத்தைப் பற்றி சிந்தித்து முடிவெடுப்பது கொஞ்சம் சிக்கலானதுதான். ஏதோ ஒரு பயம் கலந்த நெருடல் மனதில் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அதை வெகுகாலம் நீடிக்கவிடக்கூடாது. தகுதியானவர்களோடு கலந்துபேசி நல்ல முடிவிற்கு வருவது அவசியம். அது உங்கள் எதிர்காலம் சார்ந்தது. துணிச்சலாக முடிவெடுத்துதான் ஆகவேண்டும்.
முதல் திருமண தோல்வியோடு யாரும் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது சரிவராத பட்சத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது நல்லது. ஆனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட தயக்கமும், சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பதற்றமும், அதற்கு மேல் சில சட்டப் பிரச் சினைகளும் இருக்கலாம். இதை யெல்லாம் கடந்துவந்து ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவேண்டும்.
ஆண், பெண் அனைவருமே தங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணை அவசியம் என்று கருதுகிறார்கள். அவர்கள் அப்போதே தாங்களும் ஒரு நல்ல துணையாக இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அதற்குரிய விதத்தில் தவறுகள் இருந்தால், சீர்படுத்திக்கொண்டு திருந்த முன்வரவேண்டும். முதல் திருமணத்தில் ஏற்பட்ட தவறுகள் அதற்கு ஒரு அனுபவமாக இருக்கும். அந்த தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்தகட்ட முயற்சிக்கு செல்லுங்கள்.
பெரும்பாலான திருமணங் கள் தோல்வியடைவதற்கு சுற்றி யுள்ள உறவினர்களும் ஒரு காரணம். உறவுகள் எப்படி இருந்தாலும் அவர்களோடு ஒத்துப்போக வேண்டிய நிர்பந்தம் அனை வருக்கும் உண்டு. ஆனால் அதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அந்த அளவு மட்டும் கொடுங்கள். எந்த இடத்தில் வைக்கவேண்டுமோ அந்த இடத்தில் மட்டும்வையுங்கள். சொந்தங்களுக் காக, உங்களை நம்பி வந்த வாழ்க்கைத் துணையை ஓரங் கட்டாதீர்கள்.
பத்தாம் பசலித்தனமாக யாராவது பேசினால் அதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டாம். திருமணம் என்பது உங்கள் உரிமை. உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்து தேவையற்ற பழக்கங்களை விட்டுவிடுங் கள். உதாரணமாக கோபம், வீண் விவாதம், மற்றவர்களை குறை சொல்வது, வம்பிழுப்பது, சிடுசிடுப்பாக முகத்தை வைத்துக்கொள்வது, சந்தேகம்கொள்வது போன்ற பிரச்சினைக்குரிய பழக்கங்களை மாற்றிக்கொள்ளலாம். ஏற்கனவே வாழ்க்கையில் அடிபட்டவர்கள், மீண்டும் நாம் ஏமாந்துபோவோமோ என்று நினைத்து நிரந்தரமாக கவலைப்பட்டுக்கொண்டிருக்க கூடாது.
திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் முதல் திருமணத்தை விட இரண்டாவது திருமணம் சிறப்பாக அமையும் என்று நம்பவேண்டும். திருமண வாழ்க்கையை சிறப்பாக நடத்தும் திறமையும், அனுபவமும் இப்போது உங்களிடம் உள்ளது. எந்த இடத்தில் தவறு நடக்கும்? பிரச்சினைக்குரிய விஷயம் எது என்பதிலும் உங்களுக்கு இப்போது தெளிவு இருக்கும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வழிநடத்த இப்போது உங்களுக்கு தெரியும் என்பதால் வாழ்க்கையை வசப்படுத்த முடியும்.
முதல் திருமணத்தில் குழந்தைகள் இருந்தால் அவர்களை அன்போடு வழிநடத்துங்கள். எடுத்தஎடுப்பிலேயே இரண்டாவது திருமணத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அனுபவமற்ற குழந்தைகளுக்கு இரண்டாவதாக வருபவர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்காது. அவர் களை அன்போடு அனுசரித்துச் சென்றால் நாளடைவில் புரிந்து ஏற்றுக்கொள்வார்கள். சிறு வயதில் அம்மா-அப்பா பிரிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனம் குழம்பிய நிலையிலிருக்கும். அவைகள் தெளி வடையும் வரை பொறுத்திருங் கள். பெரும்பாலும் சிறிய குழந்தைகளை சூழலுக்கு ஏற்ப வசப்படுத்துவது எளிது. வளர்ந்த குழந்தைகளை சமாதானப்படுத்துவது கொஞ்சம் சிரமம்தான்.
உங்கள் குழந்தைகள் முதல் திருமண உறவின் வழி வந்த தாத்தா-பாட்டி, அத்தை-மாமா உறவுகளை விரும்பிச் செல்லும்போது அவர்களை தடுக்காதீர்கள். அது அவர்களுடைய மனநிலையை பாதிக்கும். இரண்டாவது திருமணம் வெற்றியடைய நீங்கள் சகஜ நிலைக்கு வரவேண்டியது அவசியம். ஏதோ பெரிய தவறு செய்துவிட்டதைப் போன்று சங்கோஜப்படாதீர்கள். அப்படியே ஏதேனும் தவறு செய்து இருந்தாலும் அதைவிட்டு வெளியே வர முயற்சி செய்யுங்கள். மற்றவர்கள் தவறுகளை எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதோ அப்படியே நம்முடைய தவறுகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நல்ல திருத்தம் நல்ல எதிர் காலத்தை உருவாக்கும்.
இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும்போது சட்டம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். முறைப்படி விவாகரத்து கிடைக்கப்பெற்றதா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். சிலர் எழுத்துப்பூர்வமான கடிதத்தை மட்டும் காட்டி திருமணம் செய்துகொள்வார்கள். அது பின்னால் சட்டப்பிரச்சினையை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. கோர்ட்டினால் வழங்கப்பட்ட நீதிமன்ற முத்திரையுடன் கூடிய அதிகாரப்பூர்வ விவாகரத்து பத்திரம் (டைவர்ஸ் டிகிரி) தேவைப்படும். இரண்டாவது திருமணத்தை முறைப்படி செய்து, அதை கட்டாயம் பதிவு செய்துகொள்ளுங்கள். இது உங்களுக்கு பாதுகாப்பை அளிக்கும்.
இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் முதலில், அதற்கு தங்களை மனதளவில் தயார்ப்படுத்தவேண்டும். சரியானவரை தேர்ந்தெடுத்து, அவரிடம் மனம்விட்டுப்பேசி, பழகி தனது எதிர்காலத்திற்கு அவர் ஏற்றவர்தானா என்பதில் தெளிவான முடிவுக்கு வரவேண்டும். முதல் கணவர் மூலம் குழந்தை இருந்தால், அந்த குழந்தையோடு பழகவும் அவருக்கு அனுமதியளிக்கவேண்டும். முதல் கணவரை விவாகரத்து செய்த பெண்கள், அவர் முன்னால் தலைநிமிர்ந்து வாழ்ந்து காட்டவேண்டும் என்ற அவசர எண்ணத்தில், உடனடியாக இன்னொருவரை தேர்ந்தெடுத்துவிடக்கூடாது.
முதல் கணவர் தப்பே செய்திருந்தாலும் அவர் மீதிருந்த கசப்பான எண்ணங்களை நீக்கிவிட்டு, மனதை அமைதிப்படுத்தி, நிதானமாக அடுத்த வாழ்க்கையை பற்றி சிந்திக்கவேண்டும். வறட்டு கர்வமும், ஈகோவும் கொண்ட பெண்கள் அந்த இரண்டுக்கும் விடைகொடுத்தால் இரண்டாவது திருமணம் வெற்றி கரமாக அமையும்.