இன்றைக்கு வேலைக்குப் போகும் பெண்களிடையே கேஸுவல் வியர் என்றால் அது தோலை கவ்விப் பிடிக்கும் ஜீன்ஸ், லெக்கின்ஸ், ஸ்லிம் ஃபிட் டாப்ஸ், டைட் குர்தி வகையறாக்கள் மட்டுமே என்றாகி விட்டது. அதே போல பெரும்பாலன பெண்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துகின்றனர். உயரமான பெண்களே கூட பென்ஸில் ஹீல் என்று சொல்லக்கூடிய மெல்லிய கூரான ஹீல்ஸ் பொருத்திய காலணிகளை அணிய விரும்புகிறார்கள். இந்த பென்ஸில் ஹீல் வகை செருப்புகளை முன்பெல்லாம் ராம்ப் வாக் மாடல்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள். இப்போது கல்லூரி, அலுவலகம் என எல்லா இடங்களிலும் இவற்றைப் போட்டுக் கொண்டு செல்வது ட்ரெண்டியான விசயமாகக் கருதப்படுவதால் பெண்கள் தங்களுக்கு அவை அசெளகரியமாக இருந்த போதிலும் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குவதே இல்லை.
ஆனால் நமது அதிகப்படியான ஃபேஷன் அடிக்ஷன் கூட ஒரு கட்டத்தில் நாட்பட்ட முதுகுவலி, மூட்டு வலி, கழுத்து வலி, கண் எரிச்சல், போன்றவற்றிற்கு காரணமாகி விடுகின்றனவாம். இதை லண்டனில் இயங்கும் பிரிட்டிஷ் ஸிப்ரோபிராக்டிக் அசோஸியேசன் (BCA) குழும விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் தங்களது தொடர் ஆராய்சிகள் மூலம் தகுந்த சான்றுகளுடன் நிரூபித்திருக்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் 73 % பெண்கள் தங்களுக்கு வரக்கூடிய முதுகுவலிக்கு தாம் தினமும் பயன்படுத்தும் வார்ட்ரோப் தான் முக்கிய காரணம் என்பதை உணர்ந்தும், உணராமல் அலட்சியமாக இருப்பது தான் அவர்களை மேலும் தீரா வலியில் தள்ளி விடுகிறது. இதில் 28% பெண்களுக்கு மிக நன்றாகவே தெரியும், தங்களது முதுகுவலி, கழுத்து வலிக்கு பிரதான காரணமே தாங்கள் பயன்படுத்தும் இறுக்கமான உடைகளும், தமது உடல்வாகுக்கு சற்றும் பொருத்தமில்லாத உயரமான அல்லது கனமான காலணிகளும் தான் என்பது. ஆனாலும் அவர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் ஸ்டைல் மற்றும் ஃபேஷன் என்ற பெயரில் தொடர்ந்து அதே விதமான ஆடைகளையும், செருப்புகளையுமே பயன்படுத்து வருகின்றனர் என்பது பல கட்ட ஆய்வுகளின் பின் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இவை மட்டுமல்ல இவர்களில் 10% பெண்கள் உடை மற்றும் காலணிகள் மட்டுமல்லாது, உடைகளுக்குப் பொருத்தமாக அணிவதாகக் கூறிக் கொண்டு கனமான கற்கள் வைத்த அல்லது பீட்ஸ்கள் என்று சொல்லப் படக் கூடிய பெரிய குண்டுமணிகளுடன் கூடிய ஆபரணங்களை வேறு தினசரி பயன்படுத்துகின்றனராம். இவை அனைத்துமே எந்த வகையிலும் ஒரு சராசரிப் பெண்ணின் உடல்நலனுக்கு நன்மை தரக்கூடிய விசயமே இல்லை. ஏனெனில் இவை அனைத்துமே பெண்களின் கழுத்து, முதுகு மற்றும் இடுப்புப் பகுதிகளின் இயல்பான இயக்கத்தை தடை செய்கின்றன. இதனால் அந்த இடங்களில் சிறிதி, சிறிதாக ஆரம்பமாகும் வலி தொடர்ந்து அவற்றைப் புழக்கத்தில் கொள்ளும் போது ஒரு கட்டத்தில் தீரா வலியாகத் தங்கி விடுகிறது என BCA ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உடலை இறுக்கிப் பிடிக்கும் கனமான ஜீன்ஸ்கள் (இடுப்பு வலி) இடுப்பைக் கவ்வும் மெல்லிய லெக்கின்ஸ் வகையறாக்கள் (இடுப்பு வலி) வட இந்திய ஸ்டைலில் அணியப்படும் கனமான நெக்லஸ்கள், காது தொங்கட்டான்கள், மூக்குத்திகள் ( கழுத்து வலி, கண் எரிச்சல், தலை வலி) பென்ஸில் ஹீல்ஸ் எனப்படும் உயரமான ஹீல் வைத்த செருப்புகள் (முதுகு வலி) மேற்கண்ட உடைகளையும், ஆபரணங்களையும் தவிர்த்தாலே போதும் பெரும்பாலான பெண்கள் தங்களை வாட்டிக் கொண்டிருக்கும் மூட்டு வலி, முதுவலி, கழுத்து வலி மற்றும் தலை வலிப்பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு விடலாம் என்கிறது BCA ஆய்வு முடிவுகள்.