நீங்கள் குண்டாக இருக்கிறீர்களா?
ஒல்லியாக மாற்ற முடியும்.
நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்களா?
குண்டாக மாற்ற முடியும்.
நீங்கள் கருப்பாக இருக்கிறீர்களா?
வெள்ளையாக மாற்ற முடியாது.
இதை முதலில் புரிந்து கொள்ளணும். இது தான் நம் நிறம். இதை எப்படி அழகாக, ஆரோக்கியமாக தக்க வைத்துக் கொள்வது என்பதில் மட்டுமே, நம் கவனம் இருக்கணும். மற்றவர்கள், நம் நிறத்தைப் பற்றி, குறையாகப் பேசுவதற்கு இடம் தரக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் என்பது இயற்கை. அதை, அப்படியே ஏற்பது தான் நியாயம். அதை விட்டு விட்டு கருப்பு நிறமாக இருந்தால் தவறு, அசிங்கம், அவலட்சணம் என்று பேசுவது, நடத்துவது முட்டாள்தனம்.
கருப்பு என்பது, ஒரு நிறமே. அதை வெளுப்பாக்குகிறேன் பேர்வழி என்று கூறிக் கொண்டு, இயல்பாக இருக்கும் இயற்கை அழகைக் கெடுக்கும் விதத்தில் தங்கள் தோற்றத்திற்கும், உருவத்திற்கும் பொருந்தாத விதத்தில், கருப்பான பெண்கள் ஒப்பனை செய்து கொள்வதும் சரியில்லை.
விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்
அழகின் நிறம் சிவப்பு தான் என்று, எந்த விஞ்ஞானமும் சொன்னதில்லை. ஆனால், ஆரோக்கியமான நிறம் கருப்பு என்று, பல விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறந்ததே பாவம் என, நினைக்கும் படி சூழ்நிலையை உருவாக்கி விட்டதும் நாம் தான். நம் தோலின் நிறம் எதன் அடிப்படையில் அமைகிறது, அதன் தன்மை, குணம் இவையெல்லாவற்றையும், நம் பெண் பிள்ளைகளுக்கு, நாம் சொல்லி புரிய வைக்கணும். அதற்கு முதலில், நாம் தெரிந்து கொள்ளணும்.
நம் தோலின் நிறத்தை நிர்ணயிப்பது தோலில் இருக்கும், ‘மெலனின்’ என்ற நிறமிகள் தான். இது அதிகமாக சுரந்தால் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளுப்பாகவும், தோலின் நிறம் அமையும்.தோலின் கீழ் அடுக்கில் உள்ள, ‘மெலனோஸைட்’ என்னும் வகையைச் சார்ந்த செல்கள் தான் மெலனினை உற்பத்தி செய்கின்றன. இது தான் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் தோலுக்குள் ஊடுருவும் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. மெலனின் உற்பத்தி குறைவானவர்களுக்கு, தோல் நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
ரொம்பவும் வெளுப்பாக தோல் உள்ளவர்களுக்கு, மெலனின் உற்பத்தி குறைந்து புற்றுநோய் வரக்கூட வாய்ப்புகள் உண்டு. கருப்பு தோல், இயற்கையிலேயே கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது. இந்தியாவில் மட்டும் தான், இந்த கருப்பு நிறம், ஒரு பெரிய பிரச்னையாகப் பேசப்படுகிறது. ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகளில், ஒரு பிள்ளை கருப்பாகவும்,
மற்றொரு பிள்ளை வெளுப்பாகவும் இருந்து விட்டால், நம் பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள்,
விமர்சனங்கள் காது கொடுத்து கேட்க முடியாது.கருப்பு நிறம், உழைப்பாளிகளின் அடையாளம். அப்போதெல்லாம், உழைப்பாளிகள் என்றாலே வெயிலில் கடுமையாக வேலை செய்பவர்களைத் தான் குறிப்பிடுவர். நாம் கருப்பாக பிறந்து விட்டோம்; எதற்குமே நாம் லாயக்கு இல்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை கூடாது. ஆனால், நம்மைச் சுற்றியுள்ள வெளிக்காரணிகள் நம்மை அப்படித்தான் நினைக்க வைக்கின்றன.
கருப்புக்கு என்றுமே மதிப்புதான்ஒரு சாதாரண பிளேடு விளம்பரத்திலிருந்து நகை, உடை என எந்த விளம்பரமானாலும், வெள்ளையான பெண்கள் தான் ஜெயித்து வருவர். கருப்பு நிறப் பெண்கள், மற்றவர்களால் புறக்கணிக்கப்படுவர். வெள்ளை ஆனவுடன், முதல் ஆளாக வெற்றிக்கொடி பறக்க விடுவர். இப்படியாகத்தான், நம் மனதிற்குள் கருப்பு – வெள்ளை புகுத்தப்பட்டுள்ளது. நம் பண்பாட்டிலேயே ஊறிவிட்டது. ஆனால், இதெல்லாம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கிவிட்டன.
கருப்பு நிறப் பெண்கள் கலக்க துவங்கிவிட்டனர். திரும்ப திரும்ப கருப்பு கலர் தான், ‘சூப்பர்’ன்னு இப்போது சொல்லத் தேவையில்லை. கருப்பில் என்றுமே, ஒரு கிறக்கம் உண்டு. கருப்பு கதாநாயகனை ஏற்றுக் கொண்ட நாம், வெள்ளை நாயகிகளையே வரவேற்றோம். அதுவும் இப்போது மாறிவிட்டது. பல துறைகளில், பல கட்டத்திலும் கருப்பு நிறப் பெண்கள் வெற்றியுடன் வலம் வர ஆரம்பித்து விட்டனர்.
சிவப்பு பெண்கள் தான் அழகு, கருப்பு அழகல்ல என்ற கருத்தை பரப்பும் எந்த செய்தியையும், விளம்பரப் படத்தையும், மேற்கோளையும் எதிர்ப்பதே தங்களின் நோக்கம் என்று வாவ் (women of worth) Dark is Beautiful போன்ற அமைப்புகள் இதற்காகவே உருவாகி உள்ளதே சான்று.
கிடைத்ததை வைத்து சந்தோஷப்படுங்கள்
வியாபாரத்திற்காக எங்களின் தயாரிப்பை பயன்படுத்தினால், நாயகிகள் வெறுப்பாகி விட முடியும். மறுநாளே உலக அரங்கில் வலம் வர ஆரம்பித்து விடுவீர்கள் என்று விளம்பரங்கள் பார்க்க நேரிட்டால் சிரித்து விட்டு கடந்து போய்விடுங்கள். அந்த தயாரிப்புகளை பயன்படுத்த ஆரம்பித்த உடனேயே ஒரு பலனும் கிட்டாது. ஆனால் ஒவ்வாமை ஏற்படுத்தி விடக் கூடும். மெலனின் உற்பத்தியைக் குறைக்கும் அல்லது நிறுத்தி விடும்.
பிறகு குணப்படுத்தவே முடியாது போய்விடும். நன்கு யோசித்து முடிவெடுங்கள். உங்களை சிவப்பாக, வெறுப்பாக மாற்றிவிட முடியும் என்ற விளம்பரங்களை நம்புவதற்கு பதில் நம் நிறம் இதுதான், இதை
எப்படி மேம்படுத்திக் கொள்வது, மேலும் அதிகமாகாமல் காப்பது எப்படி என, புத்திசாலித்தனமாக யோசித்து முடிவெடுங்கள்.
நாயகிகளுக்கு மட்டுமல்ல, நாயகர்களும் இப்போது உத்தியோகம் புருஷ லட்சணம் என்பது போய் சிவப்பாக இருப்பது தான் ஆணழகு என்ற மாயைக்குள் மாட்ட ஆரம்பித்து விட்டனர். நம் முகத்தை வெள்ளையாக்கிறோம் என கிளம்பியுள்ள க்ரீம்களின் உண்மையான முகம் நமக்கு தெரிவதில்லை.உடலை, முகத்தை சுத்தம் செய்வதற்கு அல்லது அதன் தோற்றத்தைப் பொலிவாக்குவதற்கு பயன்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்கள். இவை நன்மை ஏற்படுத்தணுமே தவிர தீங்கு விளைவிக்கக் கூடாது. கருப்பு நிற பெண்கள் எந்தவித
குழப்பத்துக்கும் ஆளாகாமல் தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்து, உண்மையாக முன்னேற்றப் பாதையில் கவனம் செலுத்த வேண்டும். அழகா, ஆரோக்கியமா என்ற முடிவு நாயகிகள் கையில்.