Home பாலியல் பெண்களின் முலைக்காம்பில் ரோமங்கள்

பெண்களின் முலைக்காம்பில் ரோமங்கள்

33

பெண்கள் பருவமடையும் வயதை அடையும்போது, அவர்களின் உடலில் ரோமங்கள் முளைக்கத் தொடங்குகிறது, கைகளிலும் கால்களிலும் அக்குள் பகுதிகளிலும் முளைக்கும் ரோமங்களை அகற்ற வேண்டிய அழுத்தம் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், சமூகம் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து வருகிறது.

மனித உடல் ரோமங்களாலும் மயிர்க்கால்களாலும் மூடப்பட்டுள்ளது. சில ரோமங்கள் மெல்லியதாக இருக்கும் (உதாரணமாக முகத்தில் உள்ள ரோமங்கள்), சில ரோமங்கள் தடிமனாக, கருமையாக, நீளமாக இருக்கும் (உதாரணமாக கால்களிலும் அக்குள் பகுதிகளிலும் இருக்கும் ரோமங்கள்). சில சமயம் வழக்கத்திற்கு மாறாக காதுகள், தாடை போன்ற பகுதிகளிலும் சிலருக்கு ரோமங்கள் முளைக்கும், இன்னும் சிலருக்கு முலைக்காம்பிலும் ரோமங்கள் முளைக்கலாம். பெண்களின் முலைக்காம்புகளில் ரோமங்கள் இருப்பது இயல்பு. ஆனால், முலைக்காம்பில் ரோமங்கள் இருப்பது பற்றி பலர் மருத்துவரிடம் கூறுவதில்லை, அவர்கள் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றியே ரோமங்களை அகற்றுகிறார்கள். இதனால் எவ்வளவு சதவீதம் பேருக்கு முலைக்காம்புகளில் ரோமங்கள் உள்ளது என்ற மதிப்பீடு புள்ளிவிவரம் இல்லை. முலைக்காம்பில் சில ரோமங்கள் முளைப்பது பிரச்சனையல்ல.

முலைக்காம்பில் ரோமங்கள் முளைப்பதற்கான காரணங்கள் (Causes of nipple hair)

முலைக்காம்பில் ரோமங்கள் வளர பின்வரும் காரணிகள் பங்களிக்கலாம்:

நோய் எதிர்ப்பு சக்தியை ஒடுக்கும் மருந்துகள், குளுக்கோகார்டிகோஸ்டிராய்டு மருந்துகள் போன்ற சில மருந்துகள் ரோமங்களின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். இதனால் முலைக்காம்புகளில் மட்டுமின்றி உடலின் பிற பகுதிகளிலும் ரோமங்கள் அதிகம் முளைக்கலாம்.
கர்ப்பமாக இருக்கும்போது அல்லது மாதவிடாய் முற்றிலும் நிற்கும் தருவாயில் ஏற்படுகின்ற ஹார்மோன் மாற்றங்களும் முலைக்காம்புகளைச் சுற்றி ரோமங்கள் முளைக்கக் காரணமாகலாம்.
சினைப்பை நீர்க்கட்டிகள் அறிகுறிகள் தொகுப்பு (PCOS): முலைக்காம்புகளில் அதிக ரோமங்கள் முளைப்பதற்கு பெரும்பாலும் இந்தப் பிரச்சனை காரணமாக இருக்கலாம்.
ஆண்ட்ரோஜென் அதிக அளவில் இருப்பது: சிலசமயம் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஆண் ஹார்மோன் அதிகமாக உற்பத்தியாவதும் வழக்கத்திற்கு மாறான ரோமங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.
முலைக்காம்புகளில் ரோமங்கள் இருப்பதுடன், ஹார்மோன் மாற்றங்கள் சம்பந்தப்பட்ட அறிகுறிகளும் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சென்று பார்த்து ஆலோசிப்பது நல்லது.

முலைக்காம்பில் உள்ள ரோமங்களை அகற்றும் சிறந்த வழிகள் (Best ways to remove nipple hair)

அழகுக்காக, முலைக்காம்பு ரோமங்களை அகற்ற பின்வரும் வழிகளில் உங்களுக்கு வசதியானவற்றைப் பயன்படுத்தலாம்:

ரோமங்களை பிடுங்குவதன் மூலம், அவை வராமல் தடுக்கலாம். ஆனால் இந்த முறையில் ரோமம் உள்நோக்கி வளர்வது, நோய்த்தொற்று ஏற்படுதல் போன்ற ஆபத்துகளும் உள்ளன.
முலைக்காம்பு ரோமங்களை ஷேவிங் செய்து அகற்றுவது வலியற்ற முறை, எளிதானதும் கூட. எனினும், வெட்டுக் காயங்களோ நோய்த்தொற்றுகளோ ஏற்படாதவண்ணம் கவனமாகச் செய்ய வேண்டும்.
பிரத்யேக கத்தரி கொண்டு, ரோமங்களை நறுக்குவதும் நல்ல முறையே, ஆனால் இதையும் கவனமாகச் செய்ய வேண்டும்.
வேக்ஸிங்: சில சலூன்களில் வேக்ஸிங் செய்து ரோமங்களை அகற்றும் சேவை அளிக்கப்படும். இந்த முறையிலும் ரோமங்கள் உள்நோக்கி வளர்வது, சருமத்தில் எரிச்சல் ஏற்படுவது போன்ற ஆபத்துகள் உள்ளன.
ரோமங்களை லேசர் அல்லது எலக்ட்ரோலிசிஸ் முறையில் அகற்றுவது ரோமங்களை நிரந்தரமாக அகற்றும். இந்த முறையில் வலியும் அதிகம், செலவும் அதிகம்.
வேதிப்பொருள்களைக் கொண்ட ஹேர் ரிமூவல் கிரீம்கள் சருமத்தில் எரிச்சல், முலைக்காம்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோல் உரிவது, எரிச்சல் உணர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், ஆகவே அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். முலைக்காம்பைச் சுற்றியுள்ள பகுதி மிகவும் உணர்திறன் கொண்டது, ஆகவே மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.

உடலில் உள்ள ரோமங்கள் நம் உடலை அதிக குளிர், அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்கின்றன, உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகின்றன. ஆகவே, முலைக்காம்புகளில் சிறிதளவு ரோமங்கள் இருப்பது பிரச்சனையல்ல. இருப்பினும், முலைக்காம்புகளில் ரோமங்கள் வளர்வது உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.