மாதவிடாய் கால உதிரப்போக்கை கையாள நாப்கின்களை நீண்ட காலமாக பெண்கள் பயன்படுத்தி வருகிறார்கள். சில காலமாக மாதவிடாய் குப்பிகள் எனப்படும் Menstraul Cups பயன்பாடு பரவலாக உள்ளது. இது நாப்கின்களை விட சிறந்தவையா என்பதை தெளிவுபடுத்த்துகிறார் மருத்துவர் அரவிந்த் ராஜ். சானிடரி நாப்கின்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை விளைவிக்கும்; அடிக்கடி நாப்கின் வாங்க வேண்டிய சூழல்; நாப்கின்கள் சிரமமானவை போன்ற சில காரணங்களால் Menstraul Cup பயன்பாட்டை பலரும் ஆதரித்து வருகின்றனர்.
இந்த மாதவிடாய் குப்பிகள் Silicone கொண்டு தயாரிக்கப்படுபவை. Silicone இயல்பிலேயே வெப்பத்திற்கு அடங்காத ஒன்று. ஆகவே, மாதவிடாய் குப்பிகளை பயன்படுத்தி விட்டு அதை கொதிக்கும் நீரில் போடுவது மட்டுமே அதை 100% சுத்தம் செய்து விடுமா என்பதே முதல் சிக்கல். இரண்டாவதாக, மாதவிடாய் குப்பிகளை நாம் பிறப்புறுப்பில் செலுத்தும் பொழுது, சிறுநீர் கழிக்கும் பகுதியில் தெரியாமல் கை பட்டாலோ அல்லது கப்பில் உள்ள கிருமிகள் சிறுநீர் குழாயில் படிய நேர்ந்தாலோ ‘Urinary Tract Infection’ எனப்படும் சிறுநீர் குழாய் தொடர்பான பிரச்சினைகள் வர நேரிடும்.
மூன்றாவது, இந்த மாதவிடாய் குப்பிகள் காற்று புகும் தன்மை கொண்டவை. பாக்டீரியாக்கள் காற்றுள்ள பகுதியில் பெருகும் தன்மை கொண்டவை. மாதவிடாய் குப்பிகளில் ரத்தம் நீண்ட காலம் தங்கியிருப்பதும் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வித்திடும். மேலும் இந்த மாதவிடாய் குப்பிகள் 8-10 மணி நேரம் வரை இருக்கலாம். அதன்பிறகு அவை மாற்றப்படாவிட்டால் அது சிக்கலே. நான்காவது, இந்திய சுகாதார சூழலுக்கு இந்த குப்பிகளின் பயன்பாடு சவாலாகவே உள்ளது. உதிரப்போக்கு முடிந்ததும் அதை காற்றும் கிருமியும் புகாமல் பாதுகாப்பாக பராமரித்து வைக்கிறார்களா என்பது கேள்விக்குறியே.
இந்திய நாடு நீரிழிவு நோயின் உறைவிடம். நீரிழிவு நோயாளிகள் எளிதில் கிருமித்தொற்று பாதித்து Sepsis என்னும் ஆபத்தான நிலையை அடையலாம். மேலும், சுத்தமற்ற கழிப்பறைகள் கொண்ட நாடு நமது இந்தியா. இத்தகைய காரணிகளை கொண்டு ஒப்பிடுகையில் மாதவிடாய் குப்பிகளை பாதுகாப்பான முறையில் உபயோகம் செய்வது சாத்தியமா? மாதவிடாய் குப்பிகள் பிறப்புறுப்பில் செலுத்த வேண்டியவை. அவை முறையாக செலுத்தப்படாவிட்டால் காயங்களும், கிருமித்தொற்றும் வந்து சேரும். ஆகவே, குப்பிகளை அளித்து விடுவது மட்டுமே தீர்வாகாது. அதை செலுத்தும் முறை, நீக்கும் முறை, அதை பராமரிக்கும் முறை ஆகிய அனைத்தும் வழங்கப்பட வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் 5000 குப்பிகளை பெண்களுக்கு வழங்கினார்கள். ஆனால், அவை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதே சிக்கல்.
குப்பிகளில் பாதுகாப்பு குறைவு என்றால், அதே மாதிரி பிறப்புறுப்பில் வைக்கப்படும் Copper-T கருத்தடை சாதனம் மட்டும் பாதுகாப்பா என்றால், ஆம்! அவை பாதுகாப்பானவை தான். ஏனென்றால் Copper -T சாதனத்தை குப்பிகள் போன்று அடிக்கடி வெளியே எடுக்க வேண்டியதில்லை. மேலும் அவற்றில் பாக்டீரியாவை வளர விடாமல் கொல்லும் Bactericidal குணம் உள்ளது. ஆகவே, இரண்டையும் ஒப்பிட வேண்டாம். இந்த மாதவிடாய் குப்பிகள் மீது நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு சிலருக்கு இந்த குப்பிகள் ஏதுவனதாக இருக்கலாம். ஆனால், சமூக பார்வை கொண்டு நோக்கினால் இதிலுள்ள குறைகள் அகலப்படாத வரையில் இந்திய சூழலுக்கு இவை ஏற்றவை அல்ல.