திருமணமான பெண்கள் உயிர்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் எளிதில் கருத்தரிக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துணவுகளை எடுத்துக்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. போதுமான வைட்டமின்கள் உடலுக்கு கிடைக்காமல் இருப்பதும் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நல்ல ஊட்டச்சத்தான வைட்டமின் நிறைந்த உணவுகளை உண்டு வந்தால், பெண்கள் கர்ப்பம் தரிக்க உதவும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கருவுறுதல் பிரச்சினை
கருத்தரித்தலில் குறைபாடு உடைய 58 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு வைட்டமின் மாத்திரைகளும், மற்றொரு குழுவுக்கு ஃபோலிக் அமிலம் மாத்திரைகளும் அளிக்கப்பட்டன. கூடவே அவர்களுக்கு ஆரோக்கியமான, சமச்சீரான உணவுகளும் அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டன.
ஆய்வின் தொடக்கத்தில் இந்த இரண்டு குழுவில் இடம்பெற்ற பெண்களுக்கும் கர்ப்பத்திற்கு முக்கிய காரணமாக விளங்கும் மாதவிலக்கு சுழற்சி சீரான முறையில் இல்லாமல் இருந்தது. ஆய்வின் முடிவில் தினமும் வைட்டமின்கள் வழங்கப்பட்ட பெண்களில் 60 சதவிகித பெண்கள் அதாவது 30 பேரில் 18 பேர், கர்ப்பம் தரித்தனர்.அதே சமயம் ஃபோலிக் அமிலம் கொடுக்கப்பட்ட பெண்களில் 25 சதவிகிதத்தினர் மட்டுமே கர்ப்பம் தரித்தனர்.
போலிக் அமிலம் – வைட்டமின்
பெண்கள் தாங்களாகவே ஃபோலிக் அமிலம் மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு கர்ப்பமடைய எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட, வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதினால் விரைவாக கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. ஃபோலிக் அமிலம் கர்ப்பம் தரிப்பதற்கு அவசியமான ஒன்றுதான் என்றாலும், அதைக்காட்டிலும் வைட்டமின் எடுத்துக்கொண்டவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதும், பக்கவிளைவுகள் இல்லாமல் இருப்பதும் இந்த ஆய்வின் முக்கிய அம்சம் என்று ஆய்வுக்கு தலைமை ஏற்ற டாக்டர் அகர்வால் தெரிவித்துள்ளார்.
வைட்டமின் சி, பி6
வைட்டமின் சி, வைட்டமின் பி6 உள்ள உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதன் மூலம் பெண்களின் கருவுறுதல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் அனைவருமே வயது,உடல் எடை போன்றவற்றில் ஏறக்குறைய சமமானவர்களாகவே இருந்தனர்.அதேப்போன்று மது அருந்தும் மற்றும் புகைக்கும் பெண்களும் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.