ஒருசிலருக்கும் பிறக்கும் போதே முகத்திலும், உடலிலும் தழும்புகள், மச்சம், மரு போன்றவை அமைந்திருக்கும். சிலருக்கு சின்னதாய் அழகாய் இருந்தாலும் ஒரு சிலருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். இயற்கை முறையிலேயே இந்த தழும்பை போக்க ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்க்கு சருமத்தை மென்மையாக்கும் தன்மை உள்ளது. இது ஆலிவ் எண்ணெயைக் கொண்டு தினசரி 10 நிமிடங்கள் தழும்பு உள்ள பகுதியில் மசாஜ் செய்யவும். தழும்பு படிப்படியாக மறையும். சருமம் மென்மையாகும்.
ஐஸ் கட்டி ஒத்தடம்
ஐஸ் கட்டியை மெல்லிய துணியில் கட்டி தழும்பு உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் இறுக்கமாக உள்ள தசைகள் இளகி மென்மையாகும். ஐஸ் கியூப் கொண்டு தழும்பு உள்ள இடத்தில் மென்மையாக 5 நிமிடங்கள் தேய்க்கலாம் இதனால் தழும்புகள் நிறம் மாறும்.
வைட்டமின் இ
சருமத்தில் எந்த பகுதியில் காயமோ, தழும்போ ஏற்பட்டால் வைட்டமின் இ சிறந்த மருந்தாக செயல்படுகிறது. வைட்டமின் இ அடங்கிய ஆரஞ்ச் ஆயில் பயன்படுத்தி உடம்பில் தழும்பு உள்ள இடத்தில் தேய்க்கலாம். அதேபோல் வைட்டமின் இ அடங்கிய உணவுகளை உண்பதன் மூலம் பிறப்புத் தழும்புகள் படிப்படியாக நிறம் மாறுவதோடு மறைந்துவிடும்.
ஏ,சி, வைட்டமின்கள்
வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகியவை தழும்புகளை போக்குவதில் சிறந்த துணைபுரிகின்றன. கிவி, ஆப்ரிகாட் பழங்களின் சதைகளை எடுத்து மசித்து ஆரஞ்சு பழச் சாறுடன் சேர்த்து தழும்பு உள்ள பகுதிகளில் தேய்க்கவும். இது தழும்புகளை இயற்கையாகவே மறையச் செய்யும்.
எலுமிச்சை, தாக்காளி சாறு
எலுமிச்சை சிறந்த இயற்கை பிளீச்சாக செயல்படுகிறது. எலுமிச்சை சாற்றினை தழும்பு உள்ள பகுதியில் நன்கு தேய்த்து ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ தழும்பு நிறம் மாறும்.
தக்காளிச் சாறு எடுத்து அதனை தழும்பு உள்ள பகுதியில் அப்ளை செய்து ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவேண்டும். இதனை வாரம் மூன்று முறை செய்துவர பலன் தெரியும். தக்காளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் தழும்பு உள்ள பகுதியில் வினைபுரிந்து தழும்புகளை மறையச் செய்கிறது.
ரசாயன கலப்பு உள்ள விலை அதிகமான பொருட்களை உபயோகித்து தழும்புகளை மாற்ற முயற்சி செய்வதை விட இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி நிரந்தரமாக தழும்புகளை குணப்படுத்தலாம். இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.