பிரசவம் ஒரு பெண்ணுக்கு மிக முக்கியமான அனுபவம்! வேதனையும் நெகிழ்ச்சியும் மாறி மாறி மோதிக்கொள்ள, இறுதியில் ‘குவா குவா’ சத்தம் காற்றைக் கிழித்து, மகிழ்ச்சியே நிலைக்கும் பேரனுபவம்!
இந்த அனுபவத்தில் ஆண்களும் பங்கெடுக்க, கடந்த சில வருடங்களாக பிரசவ நேரத்தில் மனைவியின் அருகே கணவன் இருக்கும் கலாசாரம் உலகெங்கும் பெருகி வருவது நாம் அறிந்ததே. எந்த ஒரு நவீன விஷயத்தையும் எளிதாக அப்டேட் செய்யும் தமிழ்நாட்டிலும், சில கணவன்கள் இந்த அனுபவத்தை ஏற்றார்கள். நடிகர் அஜீத், தன் மனைவி ஷாலினியின் அருகில் பிரசவ பொழுதுகளில் இருந்து கவனித்துக் கொண்ட உணர்வுகளை அழுத்தமாக சொன்னபோது, இந்த கான்செப்ட் ஜனரஞ்சக மாகிப் போனது.
இந்நிலையில், சமீபத்திய ஆய்வு ஒன்று, “பிரசவ நேரத்தில் மனைவியின் அருகிலிருந்து, நடப்பனவற்றை எல்லாம் பார்க்கும் கணவனின் மனதில் நெகட்டிவ் வைப்ரேஷன்கள் உருவாகலாம். இதனால் அவர்கள் எதிர்காலத்தில் தம்பத்யத்தை வெறுக்கவும், அவர்களுக்கு மனைவி மீதான அழகுணர்ச்சி குறையவும் வாய்ப்பிருக்கிறது. மனைவிக்கும், தான் உயிர் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும்போது, அருகில் கையை கட்டிக்கொண்டு நிற்கும் கணவனைப் பார்க்கையில் அவர் மீது வெறுப்பு உருவாகலாம்!” என்றொரு முடிவை வெளியிட்டிருக் கிறது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு, மகப்பேறு மருத்துவ உலகில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
‘பிரசவ நேரத்தில் மனைவியின் அருகில் கணவன் இருப்பது நல்லதா, இல்லையா?’ என்ற கேள்வியுடன் கோவையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரான டாக்டர் ரஜினியை சந்தித்தோம்.
“இது சென்சிட்டிவான விஷயம்…” என்று நிதானித்து ஆரம்பித்த ரஜினி, அதைப் பற்றி பேசுவதற்கு முன், இந்த கலாசாரம் பரவ ஆரம்பித்த கதையை விளக்கினார்.
“கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கு முன்னால, அமெரிக்கா போன்ற ‘ரிச்’சான சில நாடுகள்லதான் இந்தப் பழக்கம் ஆரம்பிச்சுது. கடும் வலிக்கு நடுவுல தன் மனைவி குழந்தை பெறும்போது, ‘அவளுக்கு ஆறுதலா நானும் இருக்கேனே’னு சொல்லி முன்வந்த சில கணவர்களை, டாக்டர்களும் அனுமதிச்சாங்க. கூடவே, இப்படி பிரசவ நேரத்துல கணவன் இருக்கிறது சம்பந்தமான ஆய்வுகளையும் ஆரம்பிச்சாங்க.
பிரசவ வேதனையில இருக்கற அந்தப் பெண்ணுக்கு தன் கணவன் அருகிலிருக்கறது ஒரு ‘மாரல் சர்ப்போர்ட்’டா இருக்கறதாவும், அது பிரசவத்தை தாங்கற வலிமையை அவங்களுக்குத் தந்து, அந்த நிகழ்வை எளிமையாக்கறதாவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்க, இந்தப் பழக்கம் உலகம் முழுக்க பரவ ஆரம்பிச்சுது. நம் இந்தியாவுக்கும் வந்தது!” என்ற ரஜினி, இந்தக் கலாசாரம் ஏற்புடையதா, இல்லையா என்பது பற்றித் தொடர்ந்தார்.
“பொதுவா, பிரசவ நேரத்துல மனைவி பக்கத்துல கணவன் இருக்கலாமா, கூடாதாங்கிறதை பொதுமைப்படுத்தி பேசிட முடியாது. ஏன்னா, இது முழுக்க முழுக்க தனி மனித மன ஓட்டம் சம்பந்தப்பட்ட விஷயம். தான் கடும் பிரசவ அவஸ்தையில இருக்கிறபோது, பக்கத்துல இருக்கற தன் கணவரைப் பார்த்து, ‘ப்ளீஸ்… வெளிய போங்களேன்…’னு கத்தற பொண்ணுங்களையும்…
இன்னொருபுறம், லேபர் வார்டுக்குள்ள போற வரைக்கும் தன் கணவரோட கையை இறுகப் பிடிச்சுக்கற பொண்ணுங்களையும் நாங்க பார்க்கறோம். ஆக, பிரசவ நேரத்துல கணவர் அங்க இருக்கலாமா, வேண்டாமாங்கறதை அந்தப் பொண்ணுதான் முடிவெடுக்கணும். அவளோட எதிர்ப்பையும் மீறி அவர் அங்கே இருந்தா, அது ஒரு வகையான உரிமை மீறல்தான்!” என்ற ரஜினி, இதில் ஆண்களின் மன ஓட்டம் பற்றியும் பேசினார்.
“ஆண்கள் ஒரு ‘அட்வென்சர்’ ஃபீலுக்காகவோ, பிறக்கப்போற தன் குழந்தையை அதோட ஆரம்ப நொடிகள்லயே பார்த்துடணுங்கற ஆர்வத்திலயோ பிரசவத்தப்போ தன் மனைவி பக்கத்துல இருக்கணும்னு நினைச்சா, அது தப்பு. தன் மனைவியோட வேதனையில தானும் பங்கெடுத்துக்கற அன்பும், தன் மனைவிக்கு அந்த நேரத்துல ஆதரவா, அனுசரணையா இருக்கற அக்கறையும் இருந்தா மட்டுமே ஆண்கள் லேபர் வார்டுக்குள்ள வரணும்.
இன்னும் சில உணர்ச்சி வசப்பட்ட ஆண்கள், பிரசவ அறைக்குள்ள ரத்தமும் சதையுமான நிகழ்வுகளைப் பார்க்கும்போது, மயங்கிக்கூட விழுவாங்க. அதனால, பிரசவத்தப்போ கணவர், தன் மனைவிகூட இருக்கணுங்கற முடிவெடுத்துட்டா, அதை சம்பந்தப்பட்ட மகப்பேறு மருத்துவர்கிட்ட முன்கூட்டியே தெரிவிச்சு, முதல் மாத பரிசோதனையில் இருந்தே இந்த பிரசவ நிகழ்வுக்கு மனரீதியா கணவன்-மனைவி ரெண்டு பேரையும் தயார் படுத்தற கவுன்சிலிங்கையும் பெறலாம். அது இறுதியா ரெண்டு பேருக்குமே ஒரு அழகான அனுபவத்தை தரும்!” என்றார் ரஜினி.
இந்த விஷயத்தை தன் பார்வையில் அணுகும் ஈரோட்டை சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் குமாரசாமி, “சந்தோஷமான தருணங்கள்ல மட்டுமில்லை… தன் மனைவி வேதனையில துடிக்கறப்பவும் கணவன் அதுல பங்கெடுப்பார்னு சொல்ற அருமையான விஷயம் இது. ஆனா, ‘பிரசவ அறையில தன் மனைவியோட அந்த நிலைமை கணவருக்கு ‘செக்ஸ்’ மீதான விருப்பமின்மையை உண்டு பண்ணலாம்’ங்கற வாதம், அதுக்கான பின்னடைவா அமையறது வருத்தமான விஷயம். அப்படி ஒரு எண்ணம் ஏற்படுமோனு நினைக்கற கணவன்மார்கள், அந்தக் காட்சிகளைத் தவிர்க்க மனைவியோட தலைப்பகுதி பக்கமா நிற்கலாமே..?!” என்ற டாக்டர்,
“வாதங்களை விட்டுட்டு, இந்த விஷயத்தை உணர்வுப்பூர்வமா புரிஞ்சுக்கிட்டா, ‘உனக்காக எப்பவும், இப்பவும் நான் இருக்கேன்’ங்கற நிறைஞ்ச அன்போட, பிரசவ அறைக்குள்ள தன் மனைவி பக்கத்துல நிக்கற கணவருக்கு, அந்த நேரத்துல தாம்பத்யம் பத்தின கணக்கீடுகளைவிட, ‘நம்ம புள்ளைய பெத்தெடுக்க இவ எவ்ளோ கஷ்டப்படுறா..?! வாழ்க்கையில இனி சின்ன வலியக்கூட அவளுக்கு தராம நாம பார்த்துக்கணும்’ங்கற உணர்வுப்பூர்வமான அன்பும் கண்ணீரும்தான் அவருக்குப் பெருகும்!” என்றார் அழகாக!
– அவள் விகடன்