Home பாலியல் பாலின அறிதலும் பதின் பருவத்து புரிதலும்

பாலின அறிதலும் பதின் பருவத்து புரிதலும்

46

downloadஇப்பலாம் காலேஜ்ல பொதுவா லெக்சர் க்ளாஸ் போக மாட்டேன். நாம காலேஜ் போறதே எப்பவாவது ஒரு தடவ. அதுல புள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுத்தா விளங்கிடும்னு தான் இந்த முடிவு. லேப், ப்ராஜெக்ட் டிசைன்னு என்னோட வட்டத்த என் கைடு கிட்ட சொல்லிட்டு நானே சுருக்கிகிட்டேன்.

எப்பவாவது ரொம்ப அர்ஜன்ட், இந்த டாபிக் எடுத்தே தீரணும்னா அந்த நேரம் வந்து சொல்லுவாங்க. நான் பாட்டுக்கு டாபிக்க மட்டும் உள்வாங்கிட்டு ஒரு மணிநேரம் க்ளாஸ் எடுத்துட்டு வந்துடுவேன்.

இப்படி தான் நேத்து திடீர்னு வந்து, பிள்ளைங்களுக்கு ப்ளட் க்ரூப்பிங் பத்தி க்ளாஸ் எடுக்கணும், அர்ஜன்ட், போயிட்டு வர்றியான்னு கேட்டாங்க. அட, ஈசி சப்ஜெக்ட்ன்னு நானும் உடனே ஓகே சொல்லிட்டு க்ளாஸ் போயிட்டேன்.

ரெத்தத்தோட வகைகள் என்னென்ன, அத எப்படி கண்டுபிடிக்குறது, ‘ஏ’ வகை ப்ளட் குரூப்னா என்ன ஆன்டிஜன் இருக்கும், என்ன ஆன்டி-பாடி இருக்கும், ‘பி’னா அதுல என்னென்ன இருக்கும்ன்னு விளக்கிட்டே இருந்தேன். அப்படியே ரெத்த தானம், யார் யாருக்கு ரெத்தம் குடுக்கலாம், யார் யாருக்கு ரெத்தம் குடுக்கக்கூடாதுன்னு எல்லாம் சொல்லிட்டே வந்தேன்.

ரெத்த தானம் பத்தின சாதகம், பாதகம் பத்தி அலசிட்டு இருந்தப்ப திடீர்னு “எரித்ரோப்ளாஸ்டாசிஸ் பீட்டாலிஸ்” (Erythroblastosis Fetalis) னா என்னன்னு தெரியுமான்னு கேட்டேன். பசங்களும் சரி பொண்ணுங்களும் சரி, முளிச்சாங்க…

சரி, இத எல்லாம் அப்படியே தூக்கி வச்சிடுவோம், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் பேசுறப்ப ஜாதக பொருத்தம் பாக்குறாங்களோ இல்லையோ ரெத்த பொருத்தம் பாக்கணும். தெரியுமான்னு கேட்டேன். இல்ல மேடம் தெரியாது, இப்ப தான் இத கேள்வியே படுறோம். கல்யாணம்னா ஜாதகம் தானே பாக்கணும், ஏன் ரெத்த பொருத்தம் பாக்கணும்ன்னு ஒரு பொண்ணு கேட்டா.

உடனே ஒரு பையன் எழும்பி, பையனுக்கோ இல்ல பொண்ணுக்கோ எய்ட்ஸ் இல்லனா வேற ஏதாவது எஸ்.டி.டி நோய்கள் இருந்தா தெரிஞ்சிக்க தான் ரெத்த பொருத்தம் பாக்கணும்ன்னு சொன்னான்.

அடேய்… அட்வான்சா இருடா, அதுக்காக ஓவர் அட்வான்சா இருக்காத, அதுக்கு ரெத்தத்த டெஸ்ட் பண்ணினா போதும், பொருத்தம் எல்லாம் பாக்க வேணாம்னு சொன்னேன். அட, ஆமாலன்னு பையன் உக்காந்துட்டான்.

நீங்க சொல்லுங்க மேடம், இன்ட்ரஸ்ட்டா இருக்குன்னு பிள்ளைங்க சொல்லவும் நான் ஆரம்பிச்சேன்.

எரித்ரோப்ளாஸ்டாசிஸ் பீட்டாலிஸ்ங்குறது சிசுக்களுக்கு வர்ற ரெத்த அணு சிதைவு நோய் (நான் அத இங்கிலீஷ்ல தான் சொன்னேன் “It’s a hemolytic disease”ன்னு. அதுக்கு சரியான தமிழ் அர்த்தம் தெரியல… தெரிஞ்சா சொல்லுங்க) அப்படின்னு. இந்த நோய் வர சில காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், குழந்தையோட அம்மா அப்பாவோட ரெத்த வகைன்னு சொன்னதும் அதெப்படின்னு புள்ளைங்க ஆர்வமாகிட்டாங்க.

நான் சொல்ல ஆரம்பிச்சேன்.

நம்மோட ரெத்த வகைல ஆர்.ஹச் (Rh) பாசிட்டிவ் நெகட்டிவ் ன்னு ரெண்டு வகை தெரியும் தானே, (எ.கா: O+, O-) அதுல பொண்ணு Rh நெகடிவா இருந்து பையன் Rh பாசிட்டிவா இருந்தா அவங்களுக்கு பிறக்குற அல்லது பிறக்கப் போற ரெண்டாவது குழந்தைக்கு இந்த பாதிப்பு வரும்.

எப்பவுமே நம்மோட உடம்புல இருக்குற நோய் எதிர்ப்பு சக்திகள் அந்நிய பொருட்கள் நம்ம உடம்புல நுழைஞ்சா அதுக்கு எதிரா போரிடும். ஒரு Rh நெகட்டிவ் வகை பொண்ணுக்கு Rh பாசிட்டிவ் மூலம் உருவாகுற குழந்தை Rh பாசிட்டிவா உருவாக வாய்ப்பு அதிகம். அப்படி ஒரு குழந்தை உருவாகுற பட்சத்துல அந்த குழந்தையோட ரெத்த வகை தாய்க்கு அந்நிய பொருள். அத எதிரியா பாக்குற தாயோட நோய் எதிர்ப்பு சக்தி காரணிகள் குழந்தையோட ரெத்தத்துக்கு எதிரா போராட ஆரம்பிச்சிடும். இதனால குழந்தையோட ரெத்த அணுக்கள் அழிஞ்சு போய், அபார்சன் நடக்க வாய்ப்புண்டுன்னு சொன்னேன்.

சிம்பிளா சொல்லணும்னா கல்யாணம் பண்ற வயசுல இருக்குற பொம்பள புள்ளைங்க, “ஓ-நெகட்டிவ்” ரெத்த வகைய சேர்ந்தவங்களா இருந்தா ஒரு நெகட்டிவ் ஆணை கல்யாணம் பண்ணிக்கலாம், அப்படி இல்லனா கன்சீவ் ஆறதுக்கு முன்னாலயே நல்ல டாக்டரா பாத்து குழந்தை ஆரோக்கியமா பிறக்க என்ன பண்ணனும்ன்னு கேட்டு தெரிஞ்சிக்கலாம்.

இப்போ அறிவியல் உலகத்துல இதுக்கெல்லாம் ஈசியா தீர்வு இருக்கு. ஆனா இது தெரியாம எத்தனை பேர் குழந்தை அபார்ட் ஆனா காரணமும் தெரியாம, ஹாஸ்பிட்டலும் போகாம இருக்காங்கன்னு சொன்னதும் ஒரு பொண்ணு எழுந்து எங்க பக்கத்து வீட்ல ஒரு பொண்ணுக்கு முதல்ல ஒரு பையன் பிறந்தான். அதுக்கு அப்புறம் தொடர்ந்து அவங்களுக்கு அபார்சன் ஆகிட்டே இருக்கு. அவங்க ஹாஸ்பிட்டல் எல்லாம் போகல மேடம்ன்னு சொன்னா. இது பத்தி விசாரிக்குறேன்னும் சொல்லியிருக்கா (கிராமங்கள்ல ஹாஸ்பிட்டல் போகாம இருக்குறது இப்பவும் சகஜம் தான்).

பொண்ணுங்கள பெத்த அம்மாவும் அப்பாவும் கூட இங்க இருப்பீங்க, உங்க பொண்ணோட ரெத்த வகை என்னன்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அதுக்கு தகுந்தமாதிரி பையனோ இல்ல டாக்டர் அறிவுரைகளோ கேட்டுக்கலாம்.

இது பேசிட்டு இருக்கும் போதே, கரு எப்படி உருவாகுது, எப்படி பதியுது, அப்போ என்னென்ன பிரச்சனை வருதுன்னு க்ளாஸ் நீண்டுட்டே போச்சு. அப்போ தான் ஒருத்தன் எழுந்து சொன்னான் “நாங்க ஸ்கூல்ல படிக்குரப்பவே இதெல்லாம் உண்டு மேடம். ஆனா யாருமே சொல்லித் தரலன்னு”. சரி, இப்போ பேசுவோம்னு நிறைய விஷயங்கள் பேச ஆரம்பிச்சோம். பிள்ளைங்க கிட்ட பேசிட்டு இருந்தப்ப ஒரு விஷயம் தெளிவா தெரிஞ்சுது.

இங்க யாருக்கும் செக்ஸ் எஜுகேசன்ன்னா என்னங்குற தெளிவான புரிதல் இல்லவே இல்ல. அது என்னமோ ஆண் பெண் உறுப்புகள் பற்றின ஒரு மாய தோற்றம், அத பத்தி பேசுறதே தப்புன்னு தான் நினச்சிட்டு இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி அதுல இருக்குற அறிவியல், ஒரு கரு உருவாக உடல்கள்ல நடக்குற மாற்றங்கள், கர்ப்பப்பை பிரச்சனைகள், ஆண்களுக்கு வர்ற பிரச்சனைகள், குடும்ப கட்டுப்பாடு, அதோட அவசியம்ன்னு நீண்டுட்டே போற விஷயம்.

பசங்கள பாத்து கேட்டேன், எத்தன பேருக்குடா பெண்களோட மென்சஸ் நேர அவஸ்த்தை தெரியும்னு. நிறைய பேர் ஒருத்தர் மூஞ்சை இன்னொருத்தர் பாத்துட்டு தான் இருந்தாங்க. ஒரு பையன் எழுந்து, நிறைய ப்ளீட் ஆகும் மேடம், சில நேரம் தலை சுத்தி கீழ விழுவாங்க. சொல்லவே முடியாத அளவு வயித்த புடிச்சிட்டு கண் எல்லாம் கண்ணீர் நிறைஞ்சு அழுதுட்டு இருப்பாங்க. சில நேரம் நிறைய கோபம் வரும். அத மீறி கண்ணீரும் வரும். தங்கச்சி அப்படி அழுவா மேடம். சில நேரம் அவ உக்காந்து இருக்குற இடம் எல்லாம் ரெத்த கறை ஆகிடும், நான் அத கழுவி விட்ருக்கேன். அவளுக்கு சோடா வாங்கி குடுத்துருக்கேன். வேற என்ன பண்ணன்னு தெரியல மேடம், தெரிஞ்சா கண்டிப்பா செய்வேன்னு சொன்னான். அப்படி சொல்லும்போதே அவளுக்கு ஏதாவது செய்ய முடியாதாங்குற ஆதங்கம் தெரிஞ்சுது.

கொஞ்ச நேர மவுனத்துக்கு பிறகு, ஒரு சத்தம் பொண்ணுங்க பக்கத்துல இருந்து வந்துச்சு…

“நீ தான் ஆம்பளடா”

க்ளாஸ் ரூம்ல அத்தன பேரும் கைதட்டிட்டாங்க.

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலனாலும் பொண்ணுனா அவ கலரு, அழகுன்னு மட்டும் தெரிஞ்சி வச்சிருக்குற பசங்க மத்தியில அவங்க வலிகளையும் தெரிஞ்சி வச்சிருக்கடா, வர போற பொண்டாட்டிய நீ பத்ரமா பாத்துக்கணும்ன்னு சொன்னேன். அதுக்கு முன்னால என் அம்மாவையும் தங்கச்சியையும் பத்ரமா பாத்துப்பேன் மேடம்ன்னு சொன்னான்…

எனக்கு என்னோட பிரெண்ட்ஸ், தம்பி எல்லாரும் தான் நியாபகத்துக்கு வந்தாங்க…. யாரு சொன்னா, என்னோட பதின்பருவம் மறைஞ்சு போச்சுன்னு. இந்தா, இந்த பசங்க ரூபத்துல அது இருந்துகிட்டே தான் இருக்கு…