Home பெண்கள் உடல் கட்டுப்பாடு குழந்தை பிறந்த பின், மீண்டும் எடை குறைத்து உங்கள் பழைய ஃபிட்டான உடலைப் பெற

குழந்தை பிறந்த பின், மீண்டும் எடை குறைத்து உங்கள் பழைய ஃபிட்டான உடலைப் பெற

38

குழந்தை பிறந்த பிறகு பெரும்பாலான பெண்கள், கர்ப்பமாக இருந்த போது அதிகரித்த உடல் எடையை எப்படிக் குறைப்பது என்று அதிகம் கவலைப்படுகின்றனர், என்னவெல்லாம் முடியுமோ செய்கின்றனர். சில பெண்களுக்கு ஒரு சில கிலோ மட்டுமே எடை கூடும், அந்தவிதத்தில் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் எனலாம். ஆனால் மற்ற பலருக்கு உடல் எடை மிக அதிக அளவில் கூடிவிடும். அவர்கள் அதைக் குறைக்க அதிகம் போராட வேண்டியிருக்கும். ஆனால் கவலை வேண்டாம்! இதுவே முடிவல்ல, கொஞ்சம் மன திடமும், போதுமான முயற்சியும் இருந்தால் நீங்கள் அதைச் சாதிக்கலாம். குழந்தை பிறப்பால் கூடிய எடையை முற்றிலும் குறைக்க முடியும். எப்படி?

நடை பயிற்சி (Get up and move)

குழந்தை பிறப்புக்குப் பிறகு நீங்கள் மிகவும் களைப்பாக இருப்பீர்கள், தூக்கமில்லாமல் சிரமப்படுவீர்கள், மன இறுக்கத்துடன் போராடிக்கொண்டிருப்பீர்கள், உண்மை தான். ஆனால் நடக்க வேண்டியது அவசியம். உடற்பயிற்சி என்பது கடைசியில் செய்ய வேண்டியது. முதலில், அதாவது குழந்தை பிறந்து ஆறு வாரங்கள் முடிந்தபிறகு சிறிது தூரம் நடக்கவும். உடல் செயல்பாட்டில் இருந்தால், உடலில் மகிழ்ச்சியை அளிக்கும் என்டோர்ஃபின் ஹார்மோன் சுரக்கும், இது ஒன்றிரண்டு கிலோ எடை குறையவும் வழிவகுக்கும். இதைத் தொடர்ந்து சில நாட்கள் செய்த பிறகு, வேகத்தையும், தூரத்தையும், நேரத்தையும் அதிகரிக்கவும்.

உடல் வலிமையாக வெயிட் லிஃப்டிங் பயிற்சிகள் (Lift weights to build strength)

இப்போது நீங்கள் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும், குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும், அதோடு சிலர் வேலைக்கும் செல்ல வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் உங்களுக்கு போதிய பலம் வேண்டும். உடலில் உள்ள முழு பலமும், தாங்குத்திறனும் தேவைப்படும். வாரத்திற்கு 3-4 முறை மிதமான வெயிட் லிஃப்டிங் பயிற்சிகள் செய்வது நீங்கள் சிறிதளவு எடை குறைய உதவும், வயிற்றுப் பகுதிக் கொழுப்பும் குறையும், உங்கள் தசைகளுக்கும் வலிமை கூடும். இவற்றைச் செய்வதால் நீங்கள் ஃபிட்டாக ஆவதோடு பலமும் அதிகமாகும்.

உணவுப் பழக்கத்தில் கவனம் (Watch what you eat)

என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள், பார்த்துப் பார்த்துச் சாப்பிடுங்கள். குழந்தை இருக்கிறது என்பதற்காக நீங்கள் அளவுக்கு அதிகமாக, எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நினைக்க வேண்டாம். குழந்தைக்கு தாய்ப்பாலூட்டினாலும் இல்லாவிட்டாலும் அளவாகச் சாப்பிடுவது நல்லது. உடல் எடையை அதிகரிக்கும் பீட்சா, பர்கர், பொறித்த உணவு வகைகள், இனிப்புகள் போன்றவற்றை அளவாகச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமான பால் பொருள்கள், காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுங்கள், அதிகம் திரவ ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளத் தவற வேண்டாம். நீங்கள் ஏதேனும் உடற்பயிற்சி செய்தால், அதனால் நல்ல பலன் கிடைக்க இதையும் பின்பற்றுவது முக்கியம்.

போதுமான ஓய்வெடுங்கள் (Rest adequately)

சோர்வாக, எரிச்சலாக இருக்கின்ற, உணர்ச்சி வசப்படுகின்ற தாய்மார்கள் எடை குறைவது கடினம். உங்கள் உடல் தன்னைக் குணப்படுத்திக்கொண்டு மீண்டு வருவதற்கு போதுமான ஓய்வளிக்க வேண்டும். ஓய்வுதான் எடை குறைக்கும் செயலைத் துரிதப்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் குழந்தையைப் பார்த்துக்கொள்ள உதவுமாறு கேட்டுக்கொண்டு, நன்றாகத் தூங்குங்கள். ஒரு நாளில் அவ்வப்போது சிறு சிறு குட்டித் தூக்கம் போட்டாலும் நல்லதுதான், அதுவே உங்கள் மனநிலையில் பெரிய மாறுதலை ஏற்படுத்தும். தூக்கம் உங்கள் தேவையற்ற மன உந்துதல்களையும் தணிக்கும்.

வெவ்வேறு உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள் (Vary your workouts)

எல்லோருக்கும் பளு தூக்கும் பயிற்சி சரிவராது. ஆகவே அதற்குச் சமமான பலன் கொடுக்கும் யோகா, நீச்சல், மிதமான அளவு சைக்கிளிங் போன்றவற்றைச் செய்யுங்கள். இவை, மூட்டுகளுக்கு அதிக சிரமம் கொடுக்காமல் செய்யும் பயிற்சிகள்; சலிப்படையாமல் மகிழ்ச்சியாகவும் செய்யக்கூடியவை. உங்கள் மருத்துவர் சம்மதம் சொன்னால், நீங்கள் ரன்னிங், ஏரோபிக்ஸ் போன்ற கடினமான பயிற்சிகளையும் செய்யலாம்.

இந்தப் பயிற்சிகளை படிப்படியாக, போதுமான கால அவகாசத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்பற்றிச் செய்து வந்தால், கர்ப்பத்தின்போது கூடிய உங்கள் உடல் எடை முழுவதையும் நீங்கள் இழக்க முடியும்.

எதுவும் ஒரே நாளில் கிடைத்துவிடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  

ஒன்பது மாதமாகச் சேர்ந்த எடை! ஆகவே அதை முற்றிலும் இழக்க கொஞ்ச காலம் எடுக்கும். மன உறுதியுடன் இருங்கள், தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். எல்லாவற்றையும்விட முக்கியம், நீங்கள் செய்யும் பயிற்சிகளையும் உங்கள் புதிய வாழ்க்கையையும் குழந்தையுடனான அனுபவத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். முக்கியமாக, மன அழுத்தத்துடன் இருப்பது பல்வேறு பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.