Home இரகசியகேள்வி-பதில் பருவ வயதுக் காதலால் வழி தவறிய இளைஞன்…!!

பருவ வயதுக் காதலால் வழி தவறிய இளைஞன்…!!

48

கேள்வி :
அன்புள்ள அம்மாவுக்கு,
வாழ்வில் முக்கியமான முடிவு எடுக்க முடியாமல், தவித்துக் கொண்டிருக்கும் உங்கள் மகன் எழுதுகிறேன். என் வாழ்வில் ஏற்பட்ட வலிகளை விரிவாக எழுதுகிறேன். நான் தங்களிடமிருந்து ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன்.
நான் பிளஸ் 2 படித்து கொண்டிருந்த போது, என்னுடன் டியூஷனில் படித்த ஒரு பெண், என்னைப் பற்றி அடிக்கடி விசாரிப்பதாகவும், அடிக்கடி பார்ப்பதாகவும் கூறுவர்; நான் நம்பவில்லை. ஆனால், என் மனம் அவளை விரும்பியதை, டியூஷன் இறுதி நாளில்தான் தெரிந்து கொண்டேன். மனம் முழுவதும் அன்று முதல் ஆரம்பித்தது வலி. என் நண்பர்களின் உதவியுடன், அவள் வீட்டையும் கண்டுபிடித்தேன். அன்று முதல், அவளை பார்ப்பதற்காக, அடிக்கடி அவள் ஊருக்கு செல்வேன்.
சில முறை பார்த்தேன், பலமுறை பார்த்ததில்லை. இப்படியாக ஒருவருடம் முடிந்து விட்டது. நான் எங்கள் ஊரிலேயே அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கிறேன். அவள் ஒரு தனியார் கலைக் கல்லூரியில் படிக்கிறாள். தினமும் கல்லூரி பஸ்சிலேயே சென்று வருவாள். அதனால், தினமும் அவளைப் பார்க்க செல்வேன். அப்போதெல்லாம், அவள், என்னைப் பார்த்து கொண்டே செல்வாள். அவளின் பார்வையின் அர்த்தம், காதல் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் அவளிடம், என் காதலை சொன்னேன். அதற்கு அவள், “எங்கப்பாவுக்கு தெரிஞ்சா, என்னைக் கொன்று போட்டுடுவாரு…’ன்னு சொல்லி விட்டாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இருந்தாலும், நான் அவளைப் பார்ப்பதை நிறுத்தவில்லை. ஒருநாள் அவள், எங்கள் டியூஷன் ஆசிரியரிடம் கூறி விட்டாள். அவர் என்னை அழைத்து, மிகவும் அமைதியாக, காதல் என்ற வார்த்தையை கூட உபயோகப்படுத்தாமல், “நம் குடும்பம் உள்ள நிலையில், இப் போதைக்கு வேண்டாம். நீ நல்லா படித்து, ஒரு நல்ல நிலைமைக்கு வா! நானே உனக்கு எல்லா உதவியும் செய்கிறேன்…’ என்றார். மேலும், அதுவரை அவளைப் பார்க்க செல்லக் கூடாது என்றார்; நானும் சரி என்றேன். அன்று முதல், நிம்மதியாக இருக்க முடியவில்லை. நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும், என்னுள் வலிதான். இப்படியாக ஒரு வருடம் ஓடி விட்டது. இருந்தாலும் அவளைப் பார்க்க வேண்டும் என்றே தோன்றியது. விதி இருந்தால், எங்கள் ஊர் தேர் திருவிழாவில் பார்த்து விடலாம் என்று முடிவு செய்தேன்; அந்த நாளும் வந்தது. அதே நாளிலேயே அவளைப் பார்த்தேன்.
அவளும் என்னை திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள். தொடர்ந்து, மூன்று நாட்கள் திருவிழாவில் பார்த்தேன். அன்று முதல், என் ஆசிரியரின் வார்த்தையை மீறி விடுவேனோ என்ற பயம் வந்து விட்டது. அதே சமயம், என் அப்பா எங்களுக்காக உழைப்பதை பார்க்கும் போது, “எனக்கு தேவைதானா இது?’ என்று தோன்றுகிறது. ஆனால், அவள்தான் என் வாழ்க்கை என்று, என் உள்மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. எனக்கு அவளும் வேண்டும், என் குடும்பமும் வேண்டும். இந்த வயதில், உள் எழும் ஆசைகளால், நண்பர்களுடன் அந்த மாதிரியான படம் பார்க்க நினைத்தால் கூட, அவளுக்கு துரோகம் செய்கிறேனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதனாலேயே, அதிக நேரம் நண்பர்களிடமிருந்து விலகி, தனிமையையே விரும்புகிறேன்.
ஒரு தாயிடம் கூட சொல்ல முடியாத விஷயங்களை உங்களிடம் கூறியுள்ளேன்.
என் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கான பதிலைக் கூறுங்கள்.
1. அவள் என்னைப் பற்றி, எப்போதாவது நினைப்பாளா?
2. அவள் என்னை காதலிக்கிறாளா, இல்லையா?
3. ஒரு நல்ல நிலைக்கு நான் வந்த பிறகாவது, அவள் என்னை ஏற்றுக் கொள்வாளா?
4. நான் அவளைப் பார்க்கப் போகாமல் இருப்பது சரியல்ல என்று, என் நண்பர்கள் கூறுகின்றனர். நான் செய்வது சரியா, தவறா? தயவு செய்து, என் உயிரை குடித்துக் கொண்டிருக்கும் இந்த வினாக்களுக்கு விடையையும், என் வாழ்விற்கு ஒளியையும் கொடுங்கள் அம்மா!
— இப்படிக்கு மகன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதில் :
அன்புள்ள மகனுக்கு,
நீ, 12ம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்காக, சிறப்பு பயிற்சி மேற்கொண்டிருந்த போது, ஒருத்தியை பார்த்தாய்; அவளும் பார்த்தாள். பின், அவளது ஊருக்கே சென்று, அவளை சில முறை பார்த்தாய்; அவளும் பார்த்தாள். இருவரும் கல்லூரி படிப்புக்கு தாவிய பின், பஸ்சில், தினம் தினம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டீர்கள். ஒருநாள் அவளிடம் நீ காதலை சொல்ல, அவளோ எங்கப்பாவுக்கு தெரிஞ்சா, கொன்றே போட்டு விடுவார் என்றிருக்கிறாள். தொடர்ந்து, நீ டியூஷன் படிக்கும் ஆசிரியரிடமும், உன் துர்நடத்தை பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறாள். மூன்று நாள் திருவிழாவிலும், அவளையே பார்த்துவிட்டு வந்திருக்கிறாய்.
நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் ஓடுபவர்கள், ஓட்டத்தின் இடையில் கைகுலுக்கிக் கொள்வரா? ஓட்ட தளத்தின் மீதான பார்வையை விலக்கி, ஒருவரையொருவர் விழுங்கும் நரமாமிச பார்வை பார்த்துக் கொள்வரா?
நீ பிளஸ் 2 படிக்கும் போது, எதற்கு டியூஷனுக்கு சென்றாய்? ஒழுங்காக படிக்காதவன், டியூஷன் படித்தாவது நல்ல மதிப்பெண் வாங்கட்டுமே என்று தானே, உன் பெற்றோர் டியூஷனுக்கு அனுப்பியிருப்பர்?
இனக்கவர்ச்சியில் விழுந்த நீ, பிளஸ் 2வில், குறைந்த மதிப்பெண் எடுத்திருப்பாய். அதனால், உன் பெற்றோர், உன்னை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்த்திருக்கின்றனர். பெண்ணாசையின் முதற்கட்டமே, உன்னை பல படிக்கட்டுகளுக்கு கீழே குப்புற தள்ளிவிட்டிருக்கிறது.
நீ காதலிப்பதாக நினைக்கும் பெண், மிக எச்சரிக்கையானவள். முதலில் தன் கண்டிப்பான அப்பாவைப் பற்றி கூறி, உன்னை உஷார் படுத்தியிருக்கிறாள். தொடர்ந்து டியூஷன் வாத்தியாரிடம் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். அவளுக்கு உன்மேல் காதல் இல்லை என்றால், அவள் ஏன் உன்னை தொடர்ந்து பார்த்தாள் என்பாய். ஒவ்வொரு ஆணுக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் பருவ குறுகுறுப்பு உண்டு. ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்த்தால், அந்த பெண், அந்த ஆணை குறுகுறுப்பு நிமித்தம் பார்க்கிறாள். பிரச்னை இல்லை. பார்வை – பரிச்சயம் – நட்பு – காதல் – கல்யாணம் என்ற ஏறுவரிசையை மனதில் வைத்து, எந்தப் பெண்ணும், எந்த ஆணையும் பார்வைக்கு பார்வை பார்ப்பதில்லை.
ஒழுங்காக படித்திருந்த அவளை, காதல் பார்வை பார்த்து, சலனப்படுத்தி விட்டாய். இது மாதிரி எத்தனைப் பெண்களை காதல் பார்வைகளால் சலனப்படுத்தியிருக்கிறாய் – மறைக்காமல் சொல்.
“அவள், என்னைப் பற்றி எப்போதாவது நினைப்பாளா?’ எனக் கேட்டிருந்தாய். பொருத்த மற்ற வயதில் காதல் என பிதற்றி, அவன் வாழ்க்கையையும், நம் வாழ்க்கையையும் கெடுக்கப் பார்த்தான். அப்பாடா… தப்பித்தோம் என நிம்மதி பெருமூச்சு விடுவாள்.
“அவள் என்னைக் காதலிக்கிறாளா இல்லையா?’ என கேட்டிருந்தாய். அவளுக்கும், அமெச்சூர் காதல் இருந்திருக்கக் கூடும். அந்தக் காதலை புறந்தள்ளிவிட்டு அவள், தன் படிப்பில் கவனம் செலுத்துகிறாள். அவளது செய்கை, நீயும் உன் அமெச்சூர் காதலை புறந்தள்ளி, படிப்பை கவனி என, சொல்லாமல் சொல்கிறது.
“நல்ல நிலைக்கு நான் வந்த பிறகாவது, அவள் என்னை ஏற்றுக் கொள்வாளா?’ என கேட்டிருக்கிறாய். நீ நல்ல நிலைக்கு வர, ஆறு வருடங்கள் ஆகும். அப்போது நீ எங்கிருப்பாயோ, அவள் எங்கிருப் பாளோ? ஒரு விஷயத்தில், உத்தரவாதம் என்னால் கொடுக்க முடியும். நல்ல நிலைக்கு இருவரும் வந்தால், இருவருக்கும் தனி, தனியாக நல்ல வாழ்க்கைத் துணைகள் அமையும்.
“நீ அவளை பார்க்க போகாமல் இருப்பது சரியல்ல…’ எனக் கூறும் நண்பர்கள், வெளியூர் குளத்தில் முதலை இருக்கிறதா என பார்க்க, உன் காலை விடச் சொல்கின்றனர்; அவர்களிடமிருந்து விலகு.
நீ செய்வது சரியா, தவறா என கேட்டிருந்தாய். லட்சம் சதவீதம் தவறு.
படிக்கும் வயதில் படி. வேலைக்கு போகும் வயதில் வேலைக்கு போ.
திருமணம் செய்து கொள்ளும் வயதில் திருமணம் செய்து கொள்.
மராத்தான் ஓடி தங்கம் பெறும் தகுதியுள்ளவன், 50 மீட்டர் சாக்குப் பை ஓட்டம் ஓடி, அரையணா சான்றிதழ் பெற மாட்டான். புரிகிறதா மகனே?

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.