ஹார்மோன்கள் உடலில் சுரக்கும் விஷேச வேதிப்பொருட்களாகும். இவை உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகிறது. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிடாய்க்கு – Menses Cycle சற்று முன்பு எஸ்ட்ரோஜன் – Oestrogen மற்றும் புரோஜெஸ்டெரோன் – Progesterone என்ற இரு ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள். இந்த இரு ஹார்மோன்களால் தான் பெண் பருவமடைகிறாள்
பருவமடைந்த பின் மாதவிடாய் நிற்கும் வரை, ஹார்மோன்கள் பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான Fertility வாய்ப்பிற்கு தயார்படுத்துகிறது. இந்த ஹார்மோன்களின் ஆணைப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் -Ovaries ஒரு முட்டையை – Egg வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாய் விளங்குகின்றன. பல குடும்ப கட்டுப்பாட்டு Family Planning வழிமுறைகள் இந்த ஹார்மோன்களை கட்டுப்படுத்துவது மூலம் நடக்கிறது. கருத்தரித்த பின்பும், தாய்பால் ஊட்டும் போதும் கூட ஹார்மோன்கள் பல மாற்றத்தை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் கர்ப்பமாயிருக்கும்போது மாதவிடாய் வருவதில்லை. குழந்தை பிறந்த உடனே பால் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள்தான்.
ஒரு பெண் இன விருத்திக்கான கட்டத்தை கடக்கும்பொழுது, இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. அவள் உடலில் கருத்தரித்தலுக்கான நிலை முடிந்து போகும். மாதவிடாய் முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர் தான் “மாதவிடாய் நின்றுவிடுதல்” (Menopause)
அதைத் தொடர்ந்து பெண்ணின் உட லில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் மனநிலை, காம உணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்படும்.