“மச்சா என்னடா மைதா மாவு மாதிரி இருக்க. கெத்தா இருந்தா தான் பொண்ணுகளுக்கு பிடிக்குமென்று” என்னுடைய நண்பன் சொன்ன உடனே, ஓ! அதான் உண்மை போல, அதனால தான் இவ்வளவு நாள் நான் சிங்கிளாவே இருந்திருக்கேனா? என்கிற மாதிரியான சந்தேகம் எல்லாம் வந்தது. இப்படித்தான் பல ஆண்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இரசிக்க வேண்டுமானால் கெத்து கை கொடுக்குமே தவிர, வாழ்க்கைக்கு ஒரு காசுக்கும் உதவாது. இந்த வித்தியாசத்தை பிரித்தறிவதில் இன்றைய பெண்களுக்கு அப்படியொரு தெளிவு இருக்கு.
கைய முறுக்கி மாஸ் காட்டுவது, கழுத்தில் கண்ட கண்ட செயின் போட்டுக்கொள்வது, பைக்கில் சாகசம் செய்து பந்தா காட்டுவது இதெல்லாம் காலேஜ் பெண்களை கரெக்ட் செய்ய கை கொடுக்கலாம். 25 வயதை கடந்த பெண்களிடம், இந்த ஜாம்பவம் எல்லாம் எடுபடாது. இந்த இரகசியத்தை சொன்னதும் என் தோழி தான். மாஸ் காட்டும் பசங்க மீது 18 முதல் 22 வயது வரைக்கும் தான் ஈர்ப்பு வருமாம். அதாவது காலேஜ் படிக்கும் வயது.அந்த வயதில் பயந்த சுபாவம் கொண்ட பசங்க மீது பெண்களுக்கு ஈர்ப்பு வராது என்று சொல்லப்படுவது உண்மை தான். ஆனால் 25 வயதிற்கு மேல் இது அப்படியே தலைகீழா மாறிவிடும்.
பயந்த சுபாவம் கொண்ட ஆணாக இருந்தாலும், பெண்ணை மதிக்க தெரிந்து, அவளுடைய ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவளுக்கு பாதுகாப்பு உணர்வு கொடுக்கும் ஆணைத்தான் ரொம்ப பிடிக்குமாம். ஆணுக்கு தாடி இருந்தால் தான் பிடிக்கும். தெனாவெட்டா இருந்தால் தான் பிடிக்கும். பைக்கில் படம் காட்டினால் தான் பிடிக்கும் என்பதெல்லாம் சும்மா கட்டுக்கதை. அது பெண்ணை ஈர்க்க மட்டுமே செய்யும். நேசிக்க செய்யாது.
ஒரு பெண், எந்த ஒரு ஆணிடம் இருக்கும் போது பாதுகாப்பையும், நேசத்தையும் உணர்கிறாளோ அவனிடம் தன்னை ஒப்படைக்க விரும்புவாளாம். பாதுகாப்பிற்கும் பயந்த சுபாவத்திற்கும் சம்மந்தமே இல்லை. என்னுடைய தோழியை பொறுத்த வரைக்கும், தன்னை ரசிக்கும் ஆண் மகனை விட, தன்னை நேசிக்கும் ஆணை தான் ரொம்ப பிடிக்கும். இதில் ஆணின் தோற்றம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. இனியும், பிறருக்காக அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் என்று வித்தை காட்டாமல், நீங்கள் நீங்களாக இருந்தாலே போதும், உங்களை விரும்பியவர்களை உங்களைத்தேடி வருவார்கள்.