ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக, பருவ வயதில் ஆண், பெண் இருவருமே பல உடல் மாற்றங்களைச் சந்திக்கின்றனர். பெண்கள் வயதுக்குவந்து விட்டால், அம்மாவோ, உறவினர்களோ அவர்களுடைய பாலியல் சந்தேகங்களை மேம்போக்காகத் தீர்த்துவைக்கின்றனர்.
ஆனால், பருவ வயதை எட்டும் ஆண்கள், பாலியல் விஷயங்களை, நண்பர்களின் மூலம் அரைகுறையாகத் தெரிந்துகொள்வதால், பாலியல் பற்றிய தவறான புரிதலை கொண்டிருக்கின்றனர். இந்த வயதில், இளம்பெண்களைக் கண்டால் ஒருவித ஈர்ப்புவரும். இதை காதல் என்று நினைத்து, மாணவப் பருவத்திலேயே, வாழ்க்கையைத் தொலைக்கின்றனர். இந்தத் தருணத்தில், குடும்பம், நண்பர்கள் சரியாக அமையாதபட்சத்தில் கடுங்கோபம், விரக்தி, தன்னைப் பற்றிய அதீத சுய மதிப்பீடு ஆகியவை அதிகரிக்கிறது.
இதனால், திருட்டு, வன்முறை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு எனத் தவறான திசையில் பயணிக்க நேரிடும். உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக மைனர் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்கள் அதிகமாகி இருப்பதும் இதற்கு சாட்சி. பாலியல் குறித்த சந்தேகங்களைத் தீர்த்துவைக்க யாரும் இல்லாமல் ஆண்கள் தடுமாறுகிறார்கள்.
ழகான பெண்களைப் பார்க்கும்போது, புத்தகங்கள், வலைத்தளம், திரைப் படங்கள் மூலமாக மனிதர்களின் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் போது, இயல்பாகவே ஆண்களின் உடலில் ஹார்மோன் வேகமாகச் சுரக்கும். இதனால் ஆண்களின் உறுப்புகள் எழுச்சியுறும். சிந்தனைகள் காமம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும். தன் உடல், தன் அந்தரங்க உறுப்பில் விந்து வெளியேறுவதில் வரும் சந்தேகங்கள், முறையான சுய இன்பம் பற்றிய கேள்விகள் என ஆண்களின் டீன் ஏஜ் பருவம் குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது.
இதை எப்படி சரிப்படுத்துவது, கடந்து வருவது, இயல்பாக எடுத்துக்கொள்வது என்பது பற்றிய முறையான பாலியல் கல்வி தேவை. தற்போதைய சூழ்நிலையில் நகரத்தில் வாழும் ஆண்களுக்கு 60 – 65 சதவிகிதம் மட்டுமே விந்தணுக்களில் அடர்த்தி இருக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. மேலும் உடலுறவின்போது இயலாமையின் காரணமாக முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சரியான வழிகாட்டுதல், புரிதல் இன்மையே இதற்குக் காரணம்.