விபசார தொழிலுக்காக பெண்களை மாலைதீவுக்கு அனுப்பும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பிரதான சந்தேக நபர்கள் இரண்டு பேரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு கைதுசெய்துள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை பெண்கள் மாலைதீவுக்கு விபசார தொழிலுக்கு அனுப்பப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவுக்கு பலமுறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதனடிப்படையில் கடந்த ஒரு மாதகாலத்துக்கும் மேல் மேற்கொண்ட தேடுதலில் குறிப்பிட்ட வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பிரதான சந்தேக நபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சந்தேக நபர்கள் 2 பேரும் நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் பெண்களை விபாசார தொழிலுக்காக மாலைதீவுக்கு அனுப்பியுள்ளதுடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இதுவரை மாலைதீவில் விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது
அத்துடன் இந்த பெண்களை மாலைதீவுக்கு அனுப்புவதற்கு முன்னர் பத்தரமுல்லையில் தற்காலிக விடுதியொன்றில் தங்கவைக்கப்படுவதாகவும் விசாரணையின்போது அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட தற்காலிக விடுதியை சுற்றிவளைத்த விசேட விசாரணைப்பிரிவினர் அங்கு தங்கியிருந்த பெண்ணொருவர் மற்றும் அதன் உரிமையாளரை கைதுசெய்துள்ளனர்.
இதன்போது உரிமையாளரிடமிருந்து மாலைதீவுக்கு விபாசார தொழிலுக்காக அனுப்பிய பெண்களின் புகைப்படங்கள் மற்றும் மாலைதீவுக்கு அனுப்பவிருக்கும் பெண்களின் புகைப்படங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் கடவுச்சீட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த பெண்களை சுற்றுலா விசா மூலம் பங்களாதே{க்கு அனுப்பியுள்ளதுடன் அவர்கள் அந்த நாட்டின் பிரபுக்களுக்கு விநியோகிக்கப்படுவதுடன் அந்த பெண்களுக்கு மாதம் ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபா சம்பளமாக வழங்குவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த வியாபாரத்துடன் தொடர்புடைய பங்களாதேஷ் பிரஜையையும் கைதுசெய்வதற்காக விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.