Home குழந்தை நலம் பச்சிளங்குழந்தைகள்…. பாதுகாப்பது எப்படி

பச்சிளங்குழந்தைகள்…. பாதுகாப்பது எப்படி

44

baby-1_635498052991506341ஒரு பெண் திருமணம் முடிந்து குழந்தை பிறந்தவுடன் தான் முழுமையடைகிறாள் என்று சொல்வார்கள். ஆனால் குழந்தையை பெற்றெடுத்தால் மட்டும் போதாது. அதை நல்ல முறையில் கவனமுடன் வளர்த்து நல்ல குழந்தையாக, மாணவனாக, இளைஞனாக கொண்டு வருவதும் பெற்றோரின் கடமை. குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கவனமாக, அன்பாக, அரவணைப்புடன் ஆற்ற வேண்டிய பணி என்பதை மனதில் வைத்து பெற்றோர்கள் செயல்பட வேண்டும்.

இந்தியாவில் பச்சிளங்குழந்தைகள் மரணம் என்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை அதிகமிருந்தது. அதாவது பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 64 குழந்தைகள் ஓராண்டுக்குள் இறந்து விடுவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதில் 30% குழந்தைகள் பிறந்த அன்றே இறந்துவிடுவதாகவும், 50% குழந்தைகள் பிறந்த 3 நாட்களில் இறந்துவிடுவதாகவும், 75% குழந்தைகள் 7 நாட்களில் இறந்துவிடுவதாகவும் அந்தக் கணக்கெடுப்பு மேலும் கூறுகிறது. ஆனால் இந்த இறப்பு விகிதம் தற்போது குறைந்து வருகிறது. இந்தியாவில் பச்சிளங்குழந்தைகள் மரணமே இல்லை என்று உருவாக்க வேண்டும் என்று மத்திய குடும்ப மற்றும் சுகாதாரதுறை பல நவீன முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு அரசு மட்டும் முயற்சி எடுத்தால் போதாது. பெற்றோரும் உறுதுணையாக இருந்து தகுந்த ஆலோசனை பெற்று அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் பச்சிளங்குழந்தைகள் மரணத்தை ஒழிக்க முடியும்.

பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? அதை எவ்வாறு கலையலாம்? குழந்தைகளை எப்படி வளர்ப்பது? இதோ விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் சரஸ்வதி:

குழந்தை பராமரிப்பு என்பது சாதாரணமான விசயம் கிடையாது. அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எங்கள் மகப்பேறு மருத்துவமனைக்கு கர்ப்பகாலத்தில் வரும் பெண்களுக்கு நாங்கள் ஆரம்பகாலத்திலிருந்தே ஆலோசனை வழங்கி வருகிறோம். பச்சிளங்குழந்தைகளை நோய் கிருமிகள் எளிதில் தாக்கிவிடும். குழந்தை பிறந்தவுடன் அது வேகமாக அழுகிறதா என்று தான் முதலில் பார்க்க வேண்டும். அவ்வாறு அழவில்லையென்றால் நுரையீரல் சுருங்கி விரியவில்லை என்று அர்த்தம். அதற்கு உடனே செயற்கைமுறையில் சுவாசம் அளித்து நுரையீரலை இயங்க செய்ய வேண்டும்.
மேலும் எடைகுறைவாக குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் இதயத்தில் ஓட்டை, சுவாசக்கோளாறுகள், மூளையில் பிரச்சனைகள் உள்பட பல்வேறு பிரச்சனைகளுடன் பிறக்கும். எடை குறைவாக உள்ள குறைமாத குழந்தையின் நலனுக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதற்காக அவர்களுக்கு தனியாக பயிற்சியும் ஆலோசனையும் அளிக்கிறோம்.

பச்சிளங்குழந்தைகள்:

பிறந்த 28 நாட்களுக்குள் உள்ள குழந்தையை தான் பச்சிளங்குழந்தை என்று சொல்வார்கள். இந்த நாட்கள் அபாயகரமான நாட்கள் என்ற கூட சொல்வார்கள். இந்நாட்களில் பல்வேறு நோய்கிருமிகள் குழந்தையை தாக்க நேரிடும். இந்நாட்களில் சுகாதாரத்தில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையை கடுகுளவும் மீறக்கூடாது. இந்நாட்களில் முறையாக கவனிப்பு இல்லாத குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் ஏதாவது குறைபாட்டுடன் இருக்க வேண்டியதாகிறது என்பது குறிப்பிடதக்கது-.

பிறந்தவுடன் எப்படி பராமரிப்பது?
குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதாவது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். குழந்தையை தாயுடன் சேர்த்தே பராமரிக்க வேண்டும். மேலும் சரியான வெப்ப நிலையில் குழந்தை உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். சர்க்கரைத் தண்ணீர், டீ, காபி போன்றவற்றை கொடுக்க கூடாது.

குறை மாதக்குழந்தைகள்:

குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த குழந்தைகள் மீது தனிக்கவனம் செலுத்தி உரிய சிகிச்சையளித்தால் எந்த குறையும் இல்லாமல் வாழ வைக்கலாம். இக்குழந்தைகளுக்கென்று மருத்துவமனைகளில் தனிப்பிரிவுகள் உள்ளன. இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் எடை குறைவாகவே பிறக்கும். இந்தக் குழந்தைகளின் எடையை கூட்டுவதற்கான முயற்சியை பெற்றோர்களே மேற்கொள்ள அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
குழந்தைகளின் சிறுநீர், மலத்தை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தையின் எடை போதுமான அளவு அதிகரித்துள்ளதா என்பதை வாரம் ஒருமுறை சோதித்துப்பார்க்க வேண்டும். மருத்துவர்கள் கொடுக்கும் சத்து மருந்துகளை முறையாக கொடுக்க வேண்டும். தாயின் உடல் வெப்பம் குழந்தையின் உடல் மீது பட்டாலே குழந்தையின் எடை கூடுகிறது-. மேலும் இங்குபேட்டரில் வைப்பதாலும் எடை கூடுகிறது-.

தொற்று நோய் வராமல் தடுப்பது எப்படி?

சுத்தமான கைகள், சுத்தமான பிரசவ அறை, சுத்தமான தரை, சுத்தமான நச்சுக்கொடி பராமரிப்பு என்பது முக்கியமானதாகும். ஒவ்வொரு முறையும் குழந்தையை தொடும் முன்பும், தூக்கும் முன்பும் கையை நன்றாக கழுவ வேண்டும். குழந்தை பிறந்து ஒருவாரம் வரை குழந்தையை சுற்றி அதிகபேர் இருக்க கூடாது.

குளிப்பாட்டுவது எப்படி?

இரண்டரை கிலோவிற்கு மேல் எடை உள்ள குழந்தைகளை தினமும் ஒரு முறை வெந்நீரில் குளிப்பாட்டலாம். குளிப்பாட்டும்போது குழந்தையின் உடல் சூடு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறைமாத குழந்தையாக இருந்தால் அதை வெந்நீரில் துணியை நினைத்து பிழிந்து எடுத்து குழந்தையின் உடலை துடைத்துக்க வேண்டும்.

எப்போது, என்ன தடுப்பூசி போடவேண்டும்?

* குழந்தை பிறந்தவுடன் – காசநோய் (பி.சி.ஜி) போலியோ சொட்டு மருந்து, ஹெபடைசிஸ் பி முதல் டோஸ்.
* ஒன்றரை மாதத்தில் – டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ்.
* மூன்றரை மாதத்தில் – டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து.
* நான்கரை மாதத்தில் – போலியோ சொட்டு மருந்து.
* ஐந்தரை மாதத்தில் – போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ்.
* ஒன்பதாவது மாதத்தில் – தட்டம்மை தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து.
* ஒன்றே கால் வயதில் – தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பூசி.
* ஒன்றரை வயதில் – டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி)
* நாலரை வயதில் – டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து.

தாயின் உடல் நலனை எப்படி பேணுவது?

அதிக புரதசத்துள்ள கோதுமை, மீன், பயறு வகைகள், பால் போன்றவற்றை தாய் அதிகம் சாப்பிட வேணும். தாய் தினமும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைக்கு எந்த தொற்று நோயும் வராமல் தடுக்க முடியும். பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே சரியான உணவு என்பதை மனதில் மறக்க கூடாது.

கோடை கால குழந்தைகள் பராமரிப்பு:

கோடை காலங்களில் குழந்தைகளை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். அதாவது கோடை காலங்களில் மிகவும் மெல்லியதான பஞ்சு மற்றும் பருத்தியிலான ஆடைகளை குழந்தைக்கு அணிவிக்க வேண்டும்.
கூடுமானவரை, குழந்தையை வெளியிடத்திற்கு தூக்கிச் செல்வதை தவிர்ப்பது நல்லது. அதிக வெயிலால் சில குழந்தைகளின் உடம்பில் அரிப்பு, சொறி, சிவப்பு நிற தழும்புகள் போன்ற கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால், அவ்வப்போது குழந்தையின் உடம்பை சோதித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு இருந்தால், குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடம்பில் அதிகப்படியான சூடு இருந்தால், அது சிறுநீர் வெளியேறும் போது தெரியும் என்பதால் வெயில் காலங்களில், குழந்தை வெளியேற்றும் சிறுநீரையும் சோதிக்க வேண்டும். அதேபோல் உடம்பில் தண்ணீர் சத்து குறைவாக இருக்கும்போது, குழந்தைகளால் சிறுநீர் கழிக்க முடியாமலும், அப்படியே கழித்தாலும் குத்துவது போன்ற உணர்வு இருக்கும் என்பதால், சிறுநீர் கழிக்கும்போது குழந்தை அசௌகரியாமாக உணர்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.

மேலும் உடம்பில் சூடு கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு அதனால் உடம்பை மட்டும் சோதிக்காமல் குழந்தையின் தலைமுடியை விரல்களால் கோதி, கட்டியின் அறிகுறிகள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். எந்த நேரத்திலும் குழந்தைகளை பற்றி கவனம் பெற்றோருக்கு இருக்க வேண்டும்.