நாம் நாணமுறும்போது நம் முகம் சிவக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் கன்னங்களும் கழுத்தும் சிவக்கின்றன. மானக்கேட்டுணர்ச்சி, தடுமாற்றம் அல்லது மகிழ்ச்சி போன்ற திடீரென ஏற்படும் மனக்கிளர்ச்சியே சிவத்தலுக்குக் காரணமாகும். அப்போது மேல் தோல் ஒட்டிய உட்பகுதியிலுள்ள மிகச் சிறிய குருதி நாளங்கள் பெரிதுபடுகின்றன. நுண் தமனி நாளங்கள் (Capillaries) என அழைக்கப்படும் மயிரிழை போன்ற இந்தக் குருதி நாளங்கள் பெரிதாகும்போது குருதி அவற்றில் நிறைவதால் தோல் சிவந்த தோற்றமுடையதாகிறது.
மக்கள் காணும்போது வழக்கமாக வெப்பத்தன்மையும் மகிழ்ச்சியின்மையும் உடையவர்களாக உணர்கின்றனர். தம் சிவந்த முகங்கள் ஊன்றிக் கவனிக்கப்படுவதாக கற்பிதம் செய்து கொள்கின்றனர். இது எப்போது நிகழும் எனக் கூறுவதற்கில்லை. ஏனெனில் சில மக்கள் நாணமடைவதைக் காட்டிக் கொள்வதில்லை. இந்த நிறமாற்றம் தோல் நிறத்தைப் பொருத்தே தெரியக் கூடியது ஆகும். சீரான முடியுடைய ஒளி மங்கலான தோலுடைய ஆளிடமே முகஞ்சிவத்தல் தெளிவாகத் தெரியும். இளையோர் குறிப்பாகப் பன்னிரண்டுக்கும் இருபதுக்கும் இடைப்பட்டட மங்கையர், பெரியோரை விட, எளிமையாக நாணப்படுவதாக கருதப்படுகிறது. வயது வளர வளர அவ்வளவு எளிமையாக நாணப்படுவதில்லை. ஏனெனில் திடீரென ஏற்படும் மனக்கிளர்ச்சியை அடக்கி ஆள அறிந்துகொள்வதுடன் தடுமாற்றம் அடைவதை அடிக்கடி நிகழாமல் குன்றச் செய்து விடுகின்றனர்.
(உடலும் மருந்தும் நூலிலிருந்து…)