அவர் பிரபலமானவர், கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட இளைஞர். தன்னைவிட அதிக வயதுள்ள, கலைத்துறையை சேர்ந்த பெண்மணி ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண்மணி விவாகரத்தானவர். அவருக்கு முதல் கணவர் மூலம் வாரிசு இருக்கிறது.
அவர்கள் இருவரையும் பார்த்தால் அதிக வயது வித்தியாசம் தெரியாது. பொருத்தமான ஜோடியாகவே தோன்றி னார்கள். ஆனால் மிகுந்த வருத்தத்தோடு காணப்பட்டார்கள்.
“நாங்கள் இருவரும் பிரபலங்கள் என்பதால் பலரது பார்வையும் எங்கள் மீது விழுகிறது. நாங்கள் முதலில் நட்பு ரீதியாக மட்டுமே பழகினோம். ஆனால் எங்கள் நட்பை பலரும் பலவிதமாக பேசினார்கள். நாங்கள் சேர்ந்து வாழ்வதாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கட்டுக்கதைகளை கிளப்பி விட்டார்கள். அதன் பின்புதான் ‘மற்றவர்கள் கூறுவதுபோல் நாம் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ்ந்தால் என்ன?’ என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது. முடிவில் நாங்கள் முறைப்படி திருமணம் செய்துகொண்டோம்..’’ என்றார், அந்தப்பெண்மணி.
‘சரி…இப்போது என்ன பிரச்சினை?’ என்று கேட்டேன்.
“என்னைவிட இவர் இளையவர் என்பதால், நான் இவரை வளைத்துப்போட்டு விட்டதாகவும், இவரை விட நான் வசதியான குடும்பத்து பெண் என்பதால், என் பணத்திற்கு ஆசைப்பட்டுத்தான் வயது அதிகமான என்னை இவர் திருமணம் செய்துகொண்டார் என்றும் சொல்கிறார்கள். அவ்வளவு ஏன், எனது நெருக்கமான தோழிகளே ‘இவரை எப்படிடீ வளைத்துப் போட்டாய்?’ என்று கேலியும், கிண்டலுமாக கேட்கிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்லி மாளவில்லை!’’ என்று கவலைபட சொன்னார், அந்த பெண்.
அந்த இளைஞர், தனக்கும் அந்த பிரச்சினைகளுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் அமைதியாக இருந்தார்.
அந்த பெண்மணி பல கோணங்களில் சுற்றி இருப்பவர்களை குறிவைத்து குறைசொல்லிக்கொண்டிருந்தாலும், ஏதோ ஒன்றை அவர் சொல்ல விரும்புவதையும், ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல தயங்குவதையும் உணர முடிந்தது.
‘நான் உங்கள் இருவரிடமும் தனித்தனியாக பேசவேண்டும்’ என்றேன்.
உடனே, ‘‘நீங்கள் முதலில் பேசுங்கள்’’ என்றபடி கணவர் எழுந்து சென்றார். (மனைவியை அவர் மரியாதையாக ‘நீங்கள்’ என்று கூறியது குறிப்பிடத்தகுந்தது)
கணவர் வெளியே கிளம்பியதும், மனைவியின் ‘பாடிலாங்வேஜ்’ முற்றிலுமாக மாறியது. ரொம்ப வெளிப்படையாகவும், நெருக்கமாகவும் பேசினார்.
“நான் பேசுவதை தப்பா எடுத்துக்காதீங்க! விவாகரத்தான எனக்கு இவர் கணவராக வாய்ப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இவர் என்னோடு நட்பாக மட்டுமே பழகினார். என்னோடு சேர்ந்து வாழும் எண்ணமே இவருக்கு இருந்ததில்லை. நான்தான் இவரை விரும்பினேன். நாங்கள் இருவரும் பிரபலம் என்பதால் எங்களை பற்றி சில கிசுகிசுக்கள் வந்தன. அவற்றை எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, இவருக்கு நிர்பந்தம் கொடுத்து திருமணத்திற்கு தூண்டினேன். எப்படியோ எங்கள் திருமணம் நடந்துவிட்டது’’
‘இப்போது உங்கள் பிரச்சினை என்ன என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள்?’ என்று கேட்டேன்.
“அவரை விட நான் வயது அதிகமானவள் என்பதை அவரது நண்பர்கள் சிலர் சுட்டிக்காட்டி பேசுவதால், இவர் மனம் மாறி என்னை கைவிட்டு விடக்கூடாதே என்ற கவலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது..’’ என்று கூறி, சிறிய இடைவெளி விட்ட அந்த பெண், “நான் இவர் மூலம் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் எங்கள் உறவு பலப்படும் அல்லவா?’’ என்றார்.
அவருக்கு ஏற்கனவே ஒரு வாரிசு இருக்கிறது. அதன் வயது கருத்தில் கொள்ளப்பட்டது. அந்த பெண்மணியின் வயதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
‘குழந்தை பெற்றுக்கொண்டால் மட்டுமே கணவன்–மனைவி உறவை பலப்படுத்திக்கொள்ளமுடியும் என்ற கருத்து உங்கள் விஷயத்தில் அவ்வளவு ஏற்புடையதல்ல. குழந்தைக்காக, குழந்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் கணவருக்கான துருப்புச் சீட்டாக குழந்தையை பயன்படுத்துவது நிரந்தர தீர்வு அல்ல. உங்கள் வயதுக்கும் குழந்தைப்பேறு அவ்வளவு எளிதானது அல்ல. இப்போது உங்களுக்கு ‘சற்று வயதான’ வாரிசு உள்ளது. ஒருவேளை நீங்கள் இன்னொரு குழந்தை பெற்றுக்கொண்டால், இரண்டு வாரிசுகள் இடையேயும் பெரிய இடைவெளி உருவாகி, அது வேறு மாதிரியான புதிய பிரச்சினைகளை உருவாக்கும். அதனால் நீங்கள் மீண்டும் தாய்மையடையும் சிந்தனையை தள்ளி வைக்கலாம். அதே நேரத்தில் முறைப்படி வாழ்க்கையில் இணைந்த நீங்கள், உங்கள் மண வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு வழிகள் இருக்கின்றன’ என்றேன்.
“என்ன வழி இருக்கிறது?’’ என்று ஆர்வமாக கேட்டார். வழிமுறைகளை சொன்னேன். நெருக்கமான பழக்க வழக்கங்கள், நடத்தைகள், செயல்கள் மூலம் வயது வித்தியாசத்தை போக்கும் வாழ்வியல் முறைகளை உணர்த்தினேன்.
கணவரை அழைத்து பேசியபோது, அவருக்குள்ளும் பல்வேறு விதமான தெளிவற்ற நிலை இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
அவர்களுக்கு ‘பேமிலி கவுன்சலிங்’ கொடுக்கப்பட்டது. முறைப்படி வாழ்க்கையில் இணைந்த அவர்கள், மற்றவர்கள் புறம் பேசுவதை புறக்கணித்துவிட்டு தங்களுக்காக வாழ வழி காட்டப்பட்டது.
கணவரை விட, மனைவி வயது குறைவாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்ட சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். அதற்கு தக்கபடிதான் நாம் வாழும் சமூகத்தின் மனநிலையும் இருக்கிறது. தன்னைவிட அதிக வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் மிகுந்த மனத்தெளிவோடு, நிர்பந்தத்திற்கு இடமில்லாமல் அந்த முடிவை எடுத்து, துணிச்சலாக வாழ வேண்டும்.
வாழ்க்கை என்பது வயதில் இல்லை. வாழும் முறையில்தான் இருக்கிறது. மகிழ்ச்சி என்பது உடலில் இல்லை. மனதில்தான் இருக்கிறது.