Home ஆரோக்கியம் தொட்டினால் ஒட்டும் தொடாமலும் தொற்றும் கண்நோய்

தொட்டினால் ஒட்டும் தொடாமலும் தொற்றும் கண்நோய்

28

conjunctivitis0தினமும் 100 பேருக்குக் குறையாமல் வருகிறார்களாம் வெளிநோயார் பிரிவிக்கு. சிறு சிறு கிளினிக்குகளிலேயே தினமும் 5 முதல் 10 பேர் வருகையில் நாடு பூராவும் நிலைமை எப்படி இருக்கும்?

போதையில் சிவந்தவை அல்ல
கோபத்தில் செந்நிறம் பூத்ததும் இல்லை
எங்கணும் சிகப்பு
தொட்டினால் ஒட்டிவிடுமோ என
கலங்க வைக்கும் நிஜத்தில்

இவை கண் வைத்தியசாலையில் தினமும் 100 கணக்கில் வருவது ஆச்சரியமில்லை என்றே சொல்ல வேண்டும்.

வருடா வருடம் இந்தக் காலப் பகுதியில் கண்நோய் பரவுவதுண்டு. ஆயினும் இவ்வருடம் அது மிகத் தீவிரமாகப் பரவி வருவதாகவே தெரிகிறது.

பாடசாலைகள், விடுதிகள், அலுவலகங்கள், சிறைச்சாலைகள், பஸ் புகையிரதம் போன்ற பொது போக்குவரத்து சேவைகளில் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

நோயை சரியாக நிர்ணயம் செய்து, பொருத்தமான மருந்தை உரிய நேரத்தில் ஆரம்பித்தால் இது ஆபத்தான நோய் அல்ல என்பது உண்மை

கண் நோய் என்ற சொல் பொதுவானதாகும். இருந்தாலும் எமது பகுதியில் கண்நோய் என்றால் கண்சிவந்து பீளை வடிகிற தொற்று நோயையே கண்நேய் எனபோம்.

இது கண்ணின் வெளிப் புறத்தில் உள்ள விழி வெண்படலத்தில் ஏற்படுகின்ற ஒரு தொற்று நோயே ஆகும். ஆங்கிலத்தில்(conjunctivitis) என்பார்கள்.

மிக வேகமாகப் பரவும் ஒரு தொற்று நோயாகும். ஒரு கண்ணில் வந்தால் மற்றக் கண்ணிலும் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்.

வெயிலும் வெக்கையும் தீவிரமாக இருக்கும் இந்தக் காலம் இந்நோய் தொற்றுவதற்கு ஏற்ற காலம் ஆகும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்த வயதினரையும் பாதிக்கக் கூடிய நோய் இதுவாகும்.

இந்த அறிகுறிகள் எவை?

கண் சிவந்திருக்கும்
கண்ணால் அதிகம் நீர் வடியலாம்.
கண்ணிற்குள் எதோ விழுந்து அராத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம்.
கண்மடல்கள் வீங்கியிருக்கும்.
பீளை வடிவதுடன்,
சற்று அரிப்பும் இருக்கும்.
காலையில் கண்வழிக்கும்போது கண்மடல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கலாம்

இப்பொழுது பரவுவது பொதுவாக வைரஸ் கிருமியால் தொற்றுவதாகும். ஆனால் பக்றீரியா கிருமியாரல் தொற்றுகின்ற கண்நோய்களும் உண்டு.

தூசி மகரந்தம் போன்றவற்றிற்கு ஒவ்வாமையால் ஏற்படுகின்ற வேறு வகையான கண்நோய்களும் உண்டு. ஆனால் ஒவ்வாமையால் ஏற்படும் கண்நோய்கள் மற்றவர்களுக்கு தொற்றுவதில்லை

பொதுவாக இது ஆபத்தானது அல்ல. தானாகவே 3-4 தினங்களில்; குணமாகிவிடும். நோய் இருக்கும்போது பாடசாலை, அலுவலகம், வங்கி சந்தை, கோவில் போன்ற பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பதன் மூலம் மற்றவர்களுக்கு உங்களிலிருந்து தொற்றுவதைத் தவிர்க்க வேண்டும்
பொது இடங்களில் மட்டும் இன்றி வீட்டில் உள்ள ஏனையவர்களுக்கும் இந்நோய் வேகமாகத் தொற்றும்.

தொற்றாமல் தடுப்பதற்கு சுகாதார முறைகளைக் கையாள்வது அவசியமாகும்.

ஒருவர் உபயோகித்த டவல், படுக்கை, தலையணை, கைலேஞ்சி போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிக்கவே கூடாது.
.
நோயுள்ள கண்ணை கைகளால் தொடாதீர்கள். கண்ணில் இருந்து வழிவதைத் துடைப்பதற்கு ரிசூ உபயோகிக்கலாம். உபயோகித்த உடன் அதைக் கழித்து அகற்றிவிட வேண்டும். கைலேஞ்சி, துணி போன்றவற்றை உபயோகித்தால் அவற்றை உடனடியாகக் கழுவிவிட வேண்டும்.

கண்ணைத் தொட்ட கைகளை உடனடியாகவே கழுவிவிட வேண்டும். இல்லையேல் அந்தக் கையால் நீங்கள் கதிரை, கதவுக் கைபிடி, பேனை போன்ற எதனைத் தொட்டாலும் அதில் பரவும் கிருமியானது மற்றவர்களுக்கு அதிலிருந்து பரவிவிடும்.

நீங்களும் உங்கள் கைகளைக் கண்ணைக் கசக்கவோ துடைக்கவே கைகளால் தொடாதீர்கள். கண்களுக்கு மருந்துகள் விடும்போது மருந்துக் குப்பியோ கை விரல்களோ கண்களையோ அருகில் உள்ள பகுதிகளையோ தொடாதபடி சற்று உயரத்தில் பிடித்து விட வேண்டும்.

மருந்து விடுவதற்கு முன்னரும் பின்னரும் கைகளை நன்கு கழுவுவது அவசியமாகும்.

நோயுள்ளவர்களுடன் மிக நெருங்கிப் பழக வேண்டாம். சற்று எட்டி நில்லுங்கள்

மருத்துவர் குறித்த மருந்துகளைத் தவிர வேறு கைமருந்துகளை உபயோகிப்தைத் தவிருங்கள். ஏனெனில் அது சாதாரண கண்நோய்தானா அல்லது வேறு தீவிரமான கண் நோயா என்பதை உங்களால் சுயமாகத் தீர்மானிக்க முடியாது..

வெற்றிலையை சுட்டு வைப்பது நல்லதல்ல. ஏனெனில் அது அருகில் உள்ள ஏனைய பகுதிகளையும் உறுத்தி பார்வையைப் பறித்துவிடவும் கூடும்.

இப்பொழுது பரவும் கண்நோய் பொதுவாக பிரச்சனைகள் இன்றிக் குணமாகக் கூடியதே. இருந்தாலும் கீழ் கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனடியாகக் காண்பது அவசியமாகும்.

ஒரு கண்ணில் அல்லது இரு கண்களிலும் ஓரளவு அல்லது தீவிரமான வலி இருந்தால் மருத்துவரைக் காண்பது அவசியமாகும்..
வெளிச்சத்தைப் பார்க்க முடியாதபடி கண் கூச்சம் இருந்தால் அவசியம் காண வேண்டும்.
அதே போல பார்வை மங்கலாக இருந்தாலும் மருத்துவரைக் காணுங்கள்.
சாதாரண கண்நோயின்போது கண்கள் கடுமையான சிவப்பாக இருப்பதில்லை. மங்கலான சிவப்பு அல்லது பிங்க் கலரிலேயே இருக்கும். எனவே கண் கடுமையான சிவப்பாக இருந்தால் மருத்துவரைக் காண வேண்டும்.
நோயெதிர்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அவசியம் காண வேண்டும். உதாரணமாக HIV தொற்றுள்ளவர்கள், பிரட்னிசொலோன் போன்ற ஸ்டீரொயிட் மருந்து பாவிப்பவர்கள், நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
நோயின் அறிகுறிகள் படிப்படியாகக் குறையாது வர வர தீவிரமாபவர்கள்.
வேறு கண் நோயுள்ளவர்களும்; அதற்கான மருந்துகளை கண்ணிற்கு இடுபவர்களும் உட்கொள்பவர்களும்.

எதற்கும் சாதாரண கண்நோய்தானே என எண்ணி பிரச்சனையை விலைக்கு வாங்குவதைவிட மருத்துவரை அணுகுவது புத்திசாதித்தனமானது