Home பாலியல் தூக்கத்தின்போது வழக்கத்திற்கு மாறான பாலியல் செயல்களில் ஈடுபடுதல்

தூக்கத்தின்போது வழக்கத்திற்கு மாறான பாலியல் செயல்களில் ஈடுபடுதல்

43

Young couple sleeping and hugging on the bed in bedroom
ஒரு நபர் தூக்கத்தின்போது வழக்கத்திற்கு மாறான பாலியல் செயல்களைச் செய்வதைக் குறிக்கும் மருத்துவச் சொல்லே செக்சோம்னியா என்பதாகும்.

செக்சோம்னியா என்பதை சோம்னாம்புலிஸ்ட்டிக் என்றும் குறிப்பிடுவார்கள். தூக்கப் பாலியல் அல்லது தூக்கம் தொடர்பான பாலியல் நடத்தை (ஸ்லீப் ரிலேட்டட் செக்ஸுவல் பிஹேவியர் – SRSB) என்றும் குறிப்பிடுவர்.

பெரும்பாலும் தூக்கத்தின்போது அல்லது எப்போதும் தூக்கத்தின்போது மட்டுமே ஏற்படும் விரும்பத்தகாத அல்லது அசௌகரியமான நடத்தை அல்லது ஒரு அனுபவமான பாராசோம்னியா என்னும் நோய் வகையின்கீழ் செக்சோம்னியா வருகிறது. பாராசொம்னியா உள்ளவர்கள் தூக்கத்தில் நடப்பது, கெட்ட கனவுகள் கண்டு பயப்படுவது, தூக்கத்தில் கைகால் வராமல் போவது, தூக்கத்தில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள். பாராசோம்னியா எனும் இந்தப் பிரச்சனை கிட்டத்தட்ட பெரியவர்களில் 2. 5% பேருக்கு உள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் அம்னீஷியா இருக்கலாம் அல்லது தூக்கத்தின்போது நடந்தவையோ தூக்கத்தில் அவர் பாலியல் செயல்களில் ஈடுபட்டதைப் பற்றியோ அவருக்கு நியாபகம் இல்லாமல் போகலாம்.

தூக்கத்தில் பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுவது என்பது அரிதான அறிகுறியாகும். அறிவியல் இதழ்களில் வெகு சிலருக்கே இதுபோன்று நடந்துள்ளது பற்றி வெளிவந்துள்ளது. இது போல் தூக்கத்தில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களில் சிலர் இந்தக் குறைபாட்டை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, வேண்டுமென்றே பிறரிடம் தூக்கத்தில் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

ஒருவர் தூக்கத்தில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் இந்தப் பிரச்சனைக்குக் காரணங்கள் (What causes the disorder of sleep sex?)

இந்தப் பிரச்சனைக்கு எது காரணம் என்பது பற்றி இன்னும் ஆராய்ச்சியாளர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. பாராசோம்னியா என்பது தூக்கத்தின் ‘நான் ரேப்பிட் ஐ மூவ்மென்ட்’ (NREM) நிலையில் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. பாராசோம்னியா அறிகுறிகள், NREM தூக்கத்தின் மூன்றாம் நிலையில் ஏற்படும் கிளர்ச்சிக் குறைபாடுகள். இந்தத் தூக்கத்தை மெதுவான அலை உறக்கம் (ஸ்லோ வேவ் ஸ்லீப் – SWS) என்றும் கூறுவார்கள். நரம்பு மண்டலத்தின் சில பகுதிகள் உளவியல்ரீதியாக தூண்டப்படுவதால், தூங்கும் நபர் ஸ்லோ வேவ் ஸ்லீப் நிலையில் இருந்து தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலைக்குச் செல்லுகிறார். தூக்கத்தின் இந்த நிலைகளின் போது மோட்டார் அமைப்பும் (உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகள்), தன்னியக்க நரம்பு மண்டலமும் (இதயத்துடிப்பு, சுவாசம், வியர்த்தல் போன்ற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகள்) தூண்டப்படுகின்றன அல்லது தூக்கத்தின்போது அல்லது தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையின்போது சிந்திக்கும் செயல்பாடுகள் தூண்டப்படுகின்றன.

தூக்கத்தில் நடப்பது, இரவில் கெட்ட கனவுகள் வருவது, படுக்கையில் சிறுநீர் கழிப்பது, தூக்கத்தில் மூச்சுத் திணறல் போன்ற பிற பிரச்சனைகளுடன் சேர்ந்து செக்சோம்னியா வருவதை சில ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தப் பிரச்சனையைத் தூண்டக்கூடிய சில விஷயங்கள்:

அளவுக்கு அதிகமாக மது அருந்துதல் அல்லது பிற போதை மருந்துகளைப் பயன்படுத்துதல்
களைப்பு அல்லது மன அழுத்தம்
முன்னதாக சில நாட்கள் தூக்கமின்றி இருந்திருப்பது
குழந்தைப் பருவத்தில் கடுமையான பாலியல் சார்ந்த அல்லது உளவியல்ரீதியான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பது
படுக்கையில் துணைவருடன் நெருக்கமாகத் தூங்கும்போது தற்செயலாக அவர்மீது கை கால் பட்டு, அதன் காரணமாக பாலியல் ஆசை ஏற்பட்டு பாலியல் செய்கையில் அவர் ஈடுபடலாம்.
தூக்கம் சார்ந்த கால்கைவலிப்பு – தூக்கத்தின்போது கால்கை வலிப்பு தாக்குவது. இந்தப் பிரச்சனைக்கும் தூக்கத்தில் பாலியல் ஆசை எழுதல், கீழ் இடுப்புப் பகுதியில் முறுக்கம் ஏற்படுதல் மற்றும் தூக்கத்தில் புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படுதல் போன்றவற்றுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
செக்சோம்னியாவிற்கு சில உதாரணங்கள் (Some examples of sexsomnia)

தூக்கம் சார்ந்த பாலியல் செயல்பாடு என்கிற பிரச்சனை இருப்பது பற்றிய அறிக்கையானது முதல் முதலாக, 1986ஆம் ஆண்டு (வாங் KE) வெளியானது. அது தூக்கத்தில் சுய இன்பம் செய்துகொள்வது பற்றியதாக இருந்தது. தூக்கத்தில் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது பற்றிய அறிக்கை 1989ஆம் ஆண்டு (ஹர்விட்ஸ் TD) வெளியானது.

அதன் பிறகு, அறிவியல் புத்தகங்களிலும் வழக்குகளிலும் தூக்கத்தின்போது பாலியில் செய்கைகளில் ஈடுபடுவது பற்றிய தகவல்கள் அதிகம் பதிவாயின. தூக்கத்தின்போது பாலியல் உணர்வுடன் கூடிய ஒலி எழுப்புதல், ஆபாசமாகப் பேசுதல், முனகுதல், சுயஇன்பம் செய்துகொள்ளுதல், முழு உடலுறவில் ஈடுபடுதல் (இயல்பான உடலுறவு, குதவழிப் புணர்ச்சி அல்லது வாய்வழிப் புணர்ச்சி உட்பட) போன்றவை நடந்துள்ளன.

தூக்கத்தின்போது பாலியல் செய்கையில் ஈடுபடுவது குறித்த இந்த அறிக்கைகளில் பலவற்றில், பாதிக்கப்படும் நபர் ஆணாகவே இருந்துள்ளார்! எனினும், பெண்களுக்கும் இந்தப் பிரச்சனை உள்ளது. சில பெண்களும் தூக்கத்தில் பாலியல் உணர்வுடன் முனகுதல், ஆபாசமாகப் பேசுதல், சுயஇன்பத்தில் ஈடுபடுதல், முழு உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செய்கைகளில் ஈடுபடுவதாக அவர்களின் துணைவர்கள் தெரிவித்தனர்.

தூக்கத்தின்போது பாலியல் செய்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன, அவற்றில் சில:

பாலியல்ரீதியான தொடுதல்
பாலியல்ரீதியாக தொடுதல்/தழுவுதல்
அநாகரீகமாக உடலைக் காட்டுதல்
வன்புணர்வு செய்யும் நோக்கத்துடன் அநாகரீகமாகத் தொடுதல்
பாலியல் அத்துமீறல்
2003- ஜான் லியூடெக் எனும் கனடிய இளைஞர் ஒரு ஹவுஸ் பார்ட்டிக்குச் சென்றபோது மது அருந்திய பிறகு அங்கிருந்த இருக்கையில் ஒரு பெண்ணுக்கு அருகில் தூங்கியிருக்கிறார். அந்தப் பெண் கண்விழித்துப் பார்க்கும்போது, யாரென்றே தெரியாத அந்த இளைஞர் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அந்தப் பெண் அவரைத் தள்ளிவிட்ட பிறகுதான் தான் அரைத்தூக்கத்தில் விழித்ததாக லியூடெக் கூறினார். நீதிமன்றத்தில் அவர் அதுகுறித்து விளக்கமளித்தபோது, சம்பவம் நடந்த முந்தைய நாள் அவர் தூங்கவில்லை என்றும், மேஜிக் மஷ்ரூம் (போதைப்பொருள்) எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார். சம்பவம் நடந்த அன்று அவர் 16 முறை மது அருந்தியுள்ளார். அவருக்கு தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளதாகவும், அவர் தூக்கத்திலேயே அவரை அறியாமல் தான் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என்றும், அவர் எடுத்துக்கொண்ட போதைப்பொருள் மற்றும் மதுவே அதற்குக் காரணம் என்றும் வாதாடினார். அதன் அடிப்படையில் அவர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

2005 – பிரிட்டனில், 13 வயதில் இருந்தே தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளவர் எனக் கூறப்பட்ட, ஜேம்ஸ் பில்ட்டன் என்பவர் வன்புணர்வு வழக்கில் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் வன்புணர்வில் ஈடுபட அவருக்கிருந்த தூக்கம் சம்பந்தப்பட்ட வியாதியே காரணம் என்ற அடிப்படையில் அந்தத் தீர்ப்பளிக்கப்பட்டது. உறங்கிக்கொண்டிருந்த ஒரு பெண், கண்விழித்தபோது பில்ட்டன் தன்னை வன்புணர்வு செய்துகொண்டிருந்ததால், அவர் பில்ட்டன் மீது வன்புணர்வுப் புகாரளித்திருந்தார்.

2006 – டாரில் கென்னெத் லாட்ஸ் என்ற 35 வயதுள்ள ஆஸ்திரேலிய நபர், தனது நண்பர் வீட்டில் தான் படுத்துக்கொண்டிருந்த அறையில் இருந்து அதிகாலையில் எழுந்து பிரதான படுக்கை அறைக்கு நடந்து சென்று, அங்கு தூங்கிக் கொண்டிருந்த தனது நண்பனுக்கும் அவரது தோழிக்கும் நடுவே படுத்து அந்தப் பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்ளத் தொடங்கினார். அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்றும், பாலியில் அத்துமீறல் தூக்கத்திலேயே நடந்தது என்றும் கூறினார். நீதிபதிகளின் குழு அவரது வாதத்தை ஏற்க மறுத்து அவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை அளித்துத் தீர்ப்பளித்தது.

2008 – லியானர்ட் ஆண்ட்ரியூ ஸ்பென்சர் என்னும் மற்றொரு ஆஸ்திரேலிய நபர் (வயது 48), தன்னுடைய வீட்டில் காதலனுடன் காதலருடன் தங்கியிருந்த 21 வயதுப் பெண்ணை வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாக அந்தப் பெண் புகாரளித்திருந்தார். தன்னுடைய காதலர் வேலைக்குச் சென்ற பிறகு அதிகாலையில் அந்தப் பெண் விழித்தபோது, ஸ்பென்சர் தன்னுடன் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததைக் கண்டார், அப்போது ஸ்பென்சரின் கை தனது பெண்ணுறுப்பில் இருந்தது என்று தெரிவித்துள்ளார். தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாகவும், மன இறுக்கத்திற்காக அவர் மருந்துகள் எடுத்துக்கொண்டு இருப்பதாகவும், அந்தச் சம்பவம் தூக்கத்தில் நடந்ததுதான் என்றும் ஸ்பென்சரால் நிரூபிக்க முடிந்தது. சம்மதமின்றி உடலுறவில் ஈடுபட்டது மற்றும் அநாகரீகமாக நடந்துகொண்டது ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்தது.

தூக்கத்தில் பாலியல் செய்கைகளில் ஈடுபடும் வியாதிக்கு சிகிச்சை உள்ளதா? (Is there any treatment for Sleep Sex?)

உங்களுக்கோ, உங்கள் துணைவருக்கோ தூக்கத்தில் பாலியல் செய்கைகளில் ஈடுபடும் செக்சோம்னியா பிரச்சனை இருப்பதாக நீங்கள் நினைத்தால், உடனடியாக மருத்துவரிடம் பேச வேண்டியது முக்கியம். தூக்கத்திற்கான மருந்துகளைப் பரிந்துரைப்பதில் நிபுணரான ஒரு சிறப்பு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். உங்கள் செய்கைகள் பிறருக்கு ஆபத்தாகலாம், உங்கள் உறவுகளை மோசமாகப் பாதிக்கலாம்.

செக்சோம்னியாவுடன் தொடர்புடைய சில காரணிகளைச் சமாளிக்க முடியும். தூக்கத்தில் பாலியல் செயல்களில் ஈடுபடும் உங்கள் பிரச்சனை மன அழுத்தம் அல்லது மனக்கலக்கத்துடன் தொடர்புடையது எனில், உங்களுக்கு மனப் பிரச்சனைகளுக்கான மருந்துகளும் மருத்துவ ஆலோசனைகளும் தேவை.

தினமும் சரியாகத் தூங்க வேண்டும், சரியான நேரத்தில் தூங்க வேண்டும், இரவில் போதுமான அளவு தூங்க வேண்டும்.

தூக்கம் சார்ந்த கால்கை வலிப்பு போன்ற சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிக மது அருந்துதல் அல்லது போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தூக்கத்தில் நடக்கும் வியாதியோ அல்லது தூக்கத்தில் ஏதேனும் செய்கைகளில் ஈடுபடுதல் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், புதியவர்களின் அருகில் தூங்குவதைத் தவிர்க்கவும்.