பட்ஜெட் திருமணம் என்றாலே மண்டபம், விருந்து, போட்டோ என ஐந்து லட்சம் வந்துவிடும். நாம் ஒன்று கணக்கு போட்டால் வீண்செலவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து லட்ச கணக்கை தாண்டியிருக்கும். கல்யாணம் எல்லாம் முடிந்து ஒரு மூலையில் உட்கார்ந்து, கணக்கு போடும் போது தான் செலவு கைமீறிய இடத்தை கண்டுபிடிக்க முடியும். அப்படித்தான் மிடில் க்ளாஸ் திருமணம் ஒன்றில் வீண் செலவு திருமண புடவைக்கு அளித்திருப்பதை பார்த்து வியப்புற்றேன்.
பெண்ணுக்கு புடவை, பெரும்பாலான சமூகத்தில் மாப்பிள்ளை வீட்டார் தான் வாங்கி தரவேண்டும் என்பதால், வசதிக்கு தகுந்தாற் போல வாங்கி கொடுப்பது வழக்கம். ஒரு நாள் கட்டிவிட்டு பீரோவிற்குள் இருக்கப்போகும் புடவை மீது ஏன் இவ்ளோ காசு போடணும்? புடவையும் க்ரேண்டாக எடுத்துவிட்டு, போடும் நகைகளும் க்ரேண்டாக இருக்கும் போது, ஏதோ ஒரு இடத்தில் நாம் எதிர்பார்த்த அழகு மிஸ் ஆகிவிடுகிறது. கடைசியில் ஆல்பத்தில் பார்க்கும் போது தான் புரியும், ஆர்வக்கோளாறு என்று.
நகை விளம்பரங்களில் நடிகைகள் அணிந்துவரும் நகைகளை பார்த்திருப்பீர்கள். அவர்களது புடவையை நோட்டீஸ் செய்தது உண்டா? மிகவும் சிம்பிளாகவே இருக்கும். புடவை விளம்பரத்தில் இந்த நிலை அப்படியே தலைகீழாக இருக்கும். நகையும் அள்ளி போட்டுக்கொண்டு, புடவையும் ஓவர் வேலைப்பாடுடன் இருக்கும் போது, அழகு அடிப்பட்டு விடுகிறது. புடவை அல்லது நகை இவற்றுள் ஏதோ ஒன்றை சிம்பிளாக செலக்ட் செய்வது உங்களது அழகை கூடுதலாக காட்டும். புடவை முழுக்க சரிகை இல்லாமல் பாடர் மட்டும் எடுப்பாக தேர்வு செய்வது சிறப்பு. இதனால் செலவும் கட்டுக்குள் இருக்கும்.