எல்லோருமே நூறு சதவிகிதம் உத்தமனாக இருக்க முடியாதென்றாலும், பெண்கள் விஷயத்தில், திருமணத்திற்கு முன்பு நான் 80 சதவிகிதம் அயோக்கியனாக இருந்துள்ளேன். வாலிப வயதில், வயசு கோளாறில் எல்லை மீறுவது எல்லோருக்குமே சகஜம் தான். அதனை கடந்து வர பார்த்திருக்க வேண்டும். ஆனால் அடுத்து அடுத்துன்னு போதை பழக்கம் போல மனதை, மாதுவை நோக்கி அலை பாய விட்டு, பல பெண்களிடம் எல்லை மீறிய உறவில் இருந்துவிட்டேன்.
அன்னைக்கு எதுவும் பெருசா தெரியல. இன்னைக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு மனது உறுத்துகிறது. என்னுடைய மனைவி எனக்கு 100 சதவிகிதம் உண்மையாக இருக்கிறாள். அவள் வாழ்வில் கடந்து வந்த வலிகள், சோகங்கள் எல்லாவற்றையும் என்னிடம் பகிர்ந்துகொண்டாள். ஆனால் என்னால் அப்படி வெளிப்படையாக என் வாழ்வில் நடந்ததை எல்லாம் சொல்ல முடியாது. திருமணத்திற்கு பிறகு எந்த தவறும் செய்யவில்லை. நானும் நூறு சதவிகிதம் அளவுக்கு உண்மையாக இருக்கிறேன்.
இருந்தாலும், முன் காலத்தில் நான் செய்த சேட்டைகள் இன்னும் கண் முன் வந்து போகிறது. ஏதாவது ஒரு சூழ்நிலையில், என் மனைவிக்கு எல்லா உண்மையும் தெரிந்து, நிம்மதியான எங்கள் திருமண வாழ்வில் விரிசல் வந்துவிடுமோ என்ற பயம் திரும்ப திரும்ப என்னை தூங்கவிடாமல் செய்கிறது. என்னுடைய மனதை மாற்றிக்கொண்டால் எந்த சிக்கலும் இல்லையென ஆள்மனது ஆறுதல் சொல்லும் நேரத்தில், என்னையே உலகமாக நினைத்துக்கொண்டிருக்கும் என் மனைவியின் முகத்தை பார்க்கும் போதெல்லாம். அவளுடைய அப்பாவித்தனம் என்னை குற்றவாளியாக்கிவிடுகிறது.
இந்த மாதிரியான எண்ணங்கள் எனக்கு வந்த பிறகு, நண்பர்களையும் எச்சரித்துக்கொண்டிருக்கிறேன். திருமணத்திற்கு முன்பு எந்த பெண்ணையும் ஏமாற்றி விடாதே! அவர்களின் மனக்குமுறல் ஒரு நாள் இல்லைனாலும் ஒரு நாள் நம்மை பாதிக்கும். என்னுடைய வாழ்க்கையில் அந்த கர்மவினை வாட்டி வதைக்கிறது. வரப்போகிற பெண்ணுக்கு துரோகம் செய்யக்கூடாது என்று கூறிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையை புரிந்து இனிமையாக வாழ காலம் எனக்கு நல்வழி காட்டும்.