எங்க பக்கத்து வீட்டு பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் இருக்கும். பையன் பெரிய இடம், சொத்து பத்து இருக்கு, பொண்ணு வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லைன்னு சொல்லி கட்டி வெச்சாங்க. பையன் ரொம்ப பெரிய இடமா இருந்தும், வசதி இல்லாத இடத்தில் பெண் எடுத்திருக்காங்க, ரொம்ப நல்ல மனதுள்ள குடும்பம் என்று நினைத்தேன். வெளியில் விசாரிக்கும் போது தான் தெரிந்தது, அந்த பையனுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரே வாரத்தில் அந்த பெண், வீட்டை விட்டு ஓடிவிட்டாராம்.
முதலில் நடந்த திருமணத்தை மறைத்து, பக்கத்து வீட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளனர் என்பதை அறிந்தவுடன், உடனே போய் அவங்க வீட்டில் சொல்லலாம் என்று மனம் துடித்தது. வேண்டாம், முந்தைய குணம் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும், இனி புதுமண தம்பதிகள் நல்லா இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். என்னுடைய கெட்ட நேரமோ, என்னமோ தெரியவில்லை. அந்த பெண்ணுக்கு திருமணமான முதல் மாதத்திலேயே மனஸ்தாபம் உண்டானது.
அடிக்கடி, அவங்க அம்மா வீட்டுக்கு கோவித்துக்கொண்டு வந்து விடுவார். பிறகு வீட்டில் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிடுவார்கள். ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை வீட்டுக்கு போகவே பிடிக்கல, இனியும் வற்புறுத்தி போகச்சொன்னால், என்னை உயிரோடு பார்க்க முடியாது என்ற குண்டை துக்கிப்போட்டார். உண்மையாலுமே என்ன பிரச்சனை என்று தெரிந்துகொள்ளலாம் என்று, அப்பெண்ணே அழைத்து கேட்டேன். அவள் சொன்னதை வைத்துப் பார்த்தால் , கல்யாணமாகி ஆறு மாதம் எப்படி தாக்குப்பிடித்தாள் என்று நினைக்கும் போது, எனக்கே மனசு பதறுது.
அந்த பையன், தீவிர ஓ ரினச்சேர்க்கை விரும்பியாம், ஆறு மாதமாக அவன் கைவிரல் கூட, இவள் மேல் பட்டது கிடையாதாம். இரவு நண்பர்கள் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு செல்லும் அவன், சில நேரங்களில் இரண்டு, மூன்று நாள் கூட வீட்டுக்கு வர மாட்டானாம். மாமனார், மாமியாருக்கு அவன் ஓ ரினச்சேர்க்கையாளன் என்பது தெரியாது. வெளியில் சொன்னாலும் நமக்கு தான் கெட்டபெயர் வந்துவிடும் என்று, ஆறு மாதம் பல்லைக்கடித்துக்கொண்டு குடும்பம் நடத்தியிருக்கிறாள்.
அதற்கு மேல், அவனுடைய கொடுமை தாக்குப்பிடிக்க முடியாமல் அம்மா வீட்டுக்கே கிளம்பி வந்துவிட்டாள். அவனக்கு முதல் திருமணம் நடந்த விஷயத்தை முதலிலேயே சொல்லி இருந்தால், பிரச்சனை வேறு விதமாக போயிருக்கும். இப்போது அவனுக்கு என்ன பிரச்சனை என்பது தெரிந்துவிட்டதால், இனியும் யாரும் ஏமாறாமல் காப்பாற்றப்படலாம். இதில் என்ன சோகம் என்றால், பையன் வீட்டில் பெற்றோருக்கு இந்த உண்மை சுத்தமா தெரியாது. இப்போது இந்த பெண்ணும் டைவர்ஸ் வேண்டி நிற்கிறாள். இனி அவனுக்கு அடுத்த பெண் பார்ப்பார்கள். குடும்ப உறவில் வெளிப்படை தன்மை இல்லாத வரைக்கும், இப்படி பல குடும்பங்கள் நிம்மதியை தொலைக்க வேண்டி இருக்கும்.