இந்த கால பெண்களும் சரி, பசங்களும் சரி, திருமணம் செய்ய வீட்டில் வரன் பார்க்கிறார்கள் என்றாலே, கனவு உலகில் மிதக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஒரு ஜாதகம் பார்த்து பொருந்தி வருவது போல தெரிந்துவிட்டால், அவங்க நேரில் பார்க்க எப்படி இருப்பாங்க? அவங்க குடும்பம் எப்படி இருக்கும்? அவங்களுடன் நம்முடைய எதிர்காலம் எப்படி கழியும்? இவங்க தான் கடைசி வரைக்கும் நம்ம கூட வரப்போறவங்களா? என்கிற மாதிரி, கற்பனை குதிரை கனைத்துக்கொண்டு, சீறிப்பாயும். எத்தனை அடி சீறிப்பாய்ந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் கடிவாளம் போட்டு அடக்க பாருங்க.
பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் பிடிச்சிருக்கு என்றாலே, அடுத்து திருமண பந்தம் குறித்த ஆசை வந்துவிடுகிறது. நல்ல நாள் பார்த்து நிச்சயம் நடந்த பின்னர், மொபைல் எண் பரிமாற்றம் நடக்கிறது. நிச்சயத்திற்கும், கல்யாணத்திற்கும் இடைப்பட்ட கேப்பில் தான், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. இப்பவாவது பரவாயில்லை. நம்ம அப்பா, அம்மா காலத்தை நினைத்துப்பாருங்கள். தாலி கட்டிய பிறகே இருவருக்குள் புரிதல் உண்டாகியிருக்கும்.
நாம கொஞ்சம் முன்கூட்டியே அட்வான்ஸ்சா போறோம். அவ்வளவு தான். அந்த இடைப்பட்ட காலத்தில் பெண்கள் நம்பி செய்யும் தவறு, வாழக்கை முழுக்க உறுத்தலை கொடுத்துக்கொண்டே இருக்கும். தன்னிடம் பேசும் ஆண், நிச்சயம் செய்த மாப்பிள்ளையாக இருந்தாலும், தாலி கட்டிய பிறகு பிறகு தான், கணவன் என்பதை திரும்ப திரும்ப மனதில் நிறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இன்றைக்கு எத்தனையோ திருமணங்கள் மணமேடை வரைக்கும் கூட வந்து நின்றிருக்கிறது. கழுத்தில் மூன்று முடிச்சு போடும் வரையில், எந்த அந்தரங்க தகவலையும் பகிர்ந்துகொள்ளக்கூடாது.
கணவன் என்ற உறவு வந்த பின்னர் உரிமையோடு அன்பு செலுத்துங்கள். கட்டிக்கப்போறவன் தானே என்று நம்பி நம்பி, திருமணத்துக்கு முன்னரே உடல் ரீதியாக டிரையல் பார்க்கும் அளவுக்கு சென்றால், ஒருவருக்கு சலிப்பு வந்தாலும், அந்த குற்றஉணர்வு கடைசி வரைக்கும் உறுதிக்கொண்டே தான் இருக்கும். ஒருவேளை திருமணத்துக்கு முன்பே கணவன், மனைவி போல நடந்து கொண்டு, சந்தர்ப்ப சூழ்நிலையினால் திருமணம் தடைபட்டு, வேறு ஒருவரை மணந்து கொள்ள வேண்டிய நிலை வந்தால், பழைய உணர்வுகள் உங்களை மெல்ல மெல்ல குத்திக்காட்டும்.
இதெல்லாம் தாண்டி, எனக்கு தெரிந்த தோழிக்கு பிளாக்மெயில் கூட நடந்திருக்கு. நிச்சயம் செய்து, திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு பையனின் நடவடிக்கை சரியில்லை என்று சொல்லி திருமணத்தை நிறுத்தினார். ஏற்கனவே அவன் மோசம் என்பது உறுதியாகிவிட்டது. கல்யாணம் கைகூடி வந்து நின்று போனால் சும்மா இருப்பானா? தோழியுடன் அந்தரங்கமாக பேசியதை ரெக்கார்ட் செய்து வைத்துக்கொண்டு மிரட்டியிருக்கிறார். கடைசியில் போலீஸ் ஸ்டேஷன் சென்று பஞ்சாயத்து முடிந்தது. நிச்சயமே ஆனாலும், தேவையில்லாமல் இருவரும் திருமணம் ஆவதற்கு முன்பு ஆசையை வளர்த்து கொள்ளாதீர்கள். நடைமுறையில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நம்ம சைடு பாதுகாப்பாக இருப்போம்.